செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

பெண்கள் டி20: பேட்டிங் தரவரிசை 2வது இடத்தில் ஸ்மிருதி மந்தனா

துபாய்: பெண்கள் டி20 போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் பந்தடிப்புத் தரவரிசையில் இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா (730 ரேட்டிங் புள்ளி) இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனியை (743 ரேட்டிங் புள்ளி) விட மந்தனா 13 புள்ளிகள் மட்டுமே பின்தங்கியுள்ளார். மூன்றாவது இடத்தில் இன்னோர் ஆஸ்திரேலிய வீராங்கனை மெக் லானிங் உள்ளார். இந்தத் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீராங்கனைகள் ஷபாலி வர்மா ஏழாவது இடத்திலும், ஜெமிமா எட்டாவது இடத்திலும் உள்ளனர். அதேபோல், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனைகள் தீப்தி சர்மா இரண்டாவது இடத்தையும் மூன்றாவது இடத்தை இந்திய வீராங்கனை ரேணுகா சிங்கும் பிடித்துள்ளனர்.

உலகக் கிண்ணப் போட்டியில் இருந்து ரீஸ் டாப்லே, சமீரா விலகல்

பிரிஸ்பேன்: 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட்டின் சூப்பர்-12 சுற்றில் நேரடியாக களம் காணும் இங்கிலாந்து அணியில் இருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லேவுக்கு பயிற்சியின்போது இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் உலகக் கிண்ணப் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்குப் பதிலாக மாற்று வீரர்கள் பட்டியலில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் டைமல் மில்ஸ் சேர்க்கப்படுகிறார். இதேபோல் இலங்கை அணியில் இருந்த வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீராவும் காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். முதல் சுற்றில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் 15 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய சமீரா தசைப்பிடிப்பு காரணமாக அந்த ஆட்டத்தின் பாதியில் வெளியேறினார். அவருக்குப் பதிலாக 29 வயது கசுன் ரஜிதா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தங்கம் வென்ற அணியில் சென்னை மாணவன்

சென்னை: உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்து வருகிறது.

இதில் ஜூனியர் ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் ரவிசங்கர் ஸ்ரீ கார்த்திக் சபரிராஜ், திவ்யனாஷ் சிங் பன்வார், விதித் ஜெயின் ஆகியோர் அடங்கிய இந்திய அணி இறுதிச் சுற்றில் 17-11 என்ற புள்ளிக் கணக்கில் சீனாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியது.

தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்த தமிழக வீரரான ரவிசங்கர் ஸ்ரீ கார்த்திக் சபரிராஜ் சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் முதலாம் ஆண்டு (பி.காம்) படித்து வருகிறார்.