நடையைக் கட்டிய வெஸ்ட் இண்டீஸ்

நடையைக் கட்டிய வெஸ்ட் இண்டீஸ்

2 mins read
aa95e571-2c1a-492d-9c3d-3c46635cccbe
-

ஹொபார்ட்: டி20 உலகக் கிண்ணத்தை இருமுறை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, தோல்வியின் பிடியில் சிக்கி போட்டியிலிருந்து வெளியேறியது. வெஸ்ட் இண்டீசின் கிண்ணப் பயணம் எதிர்பாராத வகையில் முடிவுக்கு வந்திருப்பது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருப்பது ஒருபுறம் இருக்க, அது தோற்ற விதம் கிரிக்கெட் உலகைப் புரட்டிப் போட்டுள்ளது.

அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அது நேற்று ஒன்பது ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்த முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்ற அயர்லாந்து சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

இதுவரை போட்டியை ஏற்று நடத்தும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் ஆகியவை சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

முதல் சுற்றில் விளையாடிய 8 அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.

'ஏ' பிரிவில் இலங்கை, நெதர்லாந்து, நமீபியா, ஐக்கிய அரபு சிற்றரசுகள் ஆகிய அணிகள் இடம்பெற்றன.

'பி' பிரிவில் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஸிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றன.

'ஏ' பிரிவிலிருந்து இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்துள்ளன. நமீபியா, ஐக்கிய அரபு சிற்றரசுகள் அணிகள் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டன.

இந்நிலையில், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துடன் அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து, ஸிம்பாப்வே ஆகியவை நேற்று களம் இறங்கின.

பூவா தலையாவில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்தடித்தது. தொடக்க வீரர்களாகக் களம் இறங்கிய கைல் மேயர்ஸ் ஓர் ஓட்டத்திலும் சார்ல்ஸ் 24 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் பிரண்டன் கிங்-எவின் லீவீஸ் ஜோடி நிதானமாக விளையாடியது. வெஸ்ட் இண்டீஸ் அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 67 ஓட்டங்கள் எடுத்தது. கிங் 30 ஓட்டங்களுடனும் லீவீஸ் 12 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த ஆட்டத்தின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்கள் எடுத்தது.

இதனால், 147 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களத்தில் இறங்கியது. இந்நிலையில், அயர்லாந்து அணி 17.3 ஓவர்கள் முடிவில் 150 ஓட்டங்கள் எடுத்து வாகை சூடியது.

அயர்லாந்தின் ஆண்டி பால்பிர்னி 23 பந்துகளில் 45 ஓட்டங்கள் குவித்தார். பின்னர், லார்கன் டக்கர் 45 ஓட்டங்களும் பால் ஸ்டிர்லிங் 66 ஓட்டங்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இதற்கிடையே, 'பி' பிரிவு ஆட்டத்தில் ஸ்காட்லாந்துடன் ஸிம்பாப்வே நேற்று மோதியது.

இதில் ஸிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்றது.

வெற்றிக் களிப்பில் அயர்லாந்து வீரர்கள் (இடது). சோகமே உருவாக மைதானத்தை விட்டு வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் வீரர். படம்: ஏஎஃப்பி