இந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவத்தில் எல்லாக் குழுக்களும் குறைந்தது 10 ஆட்டங்களில் ஆடிவிட்டன. இனிதான் போட்டி சூடுபிடிக்கத் தொடங்கும். இதுவரை சிறப்பாக விளையாடியுள்ள குழுக்களும் படிப்படியாக முன்னேறிய குழுக்களும் கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
பெரிய குழுக்களை வெல்லும் ஆற்றலைத் தொடர்ந்து வெளிப்
படுத்தி வந்துள்ளது மான்செஸ்டர் யுனைடெட். பிரிமியர் லீக்கின் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி மட்டும்தான் இதற்கு விதிவிலக்கு.
மிக எளிதில் கோல்களை
விட்டுக்கொடுத்துவந்த யுனைடெட் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பருக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு கோலையும் விடாமல் சிறப்பாக ஆடி வென்றது. அபாரமாக விளையாடாவிட்டாலும் ஒவ்வோர் ஆட்டத்திலும் யுனைடெட்டிடம் முன்னேற்றம் தெரிகிறது.
எனினும், அதிகம் விளையாடாமல் இருக்கும் இதன் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் நடத்தை, குழு மீது இருக்கவேண்டிய கவனத்தை சற்று திசை திருப்புகிறது. அதனால்தான் யுனைடெட் நிர்வாகி எரிக் டென் ஹாக் ரொனால்டோவை அடுத்த ஆட்டத்திலிருந்து நீக்கிவிட்டார்.
அடுத்த ஆட்டத்தில் யுனைடெட்டும் செல்சியும் இன்று மோதுகின்றன. சென்ற ஆட்டத்தில் பிரென்ட்ஃபர்ட்டுடன் கோலின்றி சமநிலை கண்டிருந்தாலும் புதிய நிர்வாகி கிரஹம் போட்டருக்குக்கீழ் செல்சி நன்றாகத்தான் ஆடி வந்துள்ளது. செல்சியின் வழியில் நிற்கிறது யுனைடெட்.
தற்போதைக்கு இதுவே செல்சி நிர்வாகியாக போட்டர் சந்திக்கஉள்ள ஆகப் பெரிய சவால். இந்த ஆட்டத்தில் செல்சி விளையாடுவதை வைத்தே போட்டர் விமர்சிக்கப்படுவார்.
சென்ற ஆட்டத்தில் யுனைடெட்டிடம் தோல்வியடைந்த ஸ்பர்ஸ் பெரிய குழுக்களுக்கு எதிராக வெல்ல சிரமப்படுகிறது. செல்சி, யுனைடெட், லீக் பட்டியலில் முதலிடம் வகிக்கும் ஆர்சனல் ஆகியவற்றுக்கு எதிரான ஆட்டங்களில் இரண்டில் தோல்வியடைந்துள்ளது ஸ்பர்ஸ். செல்சிக்கு எதிரான ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
லீக் விருதை வெல்லவோ
பட்டியலில் முதல் நான்கு இடங்
களுக்குள் முடிப்பதற்கோ இந்தப் பிரச்சினையை சரிசெய்யும் கட்டாயத்தில் இருக்கிறார் தற்போது
பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள ஸ்பர்சின் நிர்வாகி அண்டோனியோ கொண்ட்டே.
லீக்கில் இதுவரை ஒரே ஆட்டத்தில் மட்டும் தோல்வியடைந்து பட்டியலில் ஆறாம் இடத்தில் இருக்கும் நியூகாசல் யுனைடெட்டுடன் ஸ்பர்ஸ் நாளை மோதுகிறது. சத்தமின்றி வேகமாக மேம்பட்டு வந்துள்ளது நியூகாசல்.
பெரிய அளவில் தடுமாறி வந்த லிவர்பூல், சிட்டியை வென்றால் தலையெழுத்து மாறலாம் என்று சென்ற வாரம் கூறியிருந்தேன். அதைத்தான் செய்து காண்பித்தது லிவர்பூல். காரசாரமான ஆட்டத்தில் சிட்டியை வென்றதுடன் அதற்குப் பிறகு வெஸ்ட் ஹேம் யுனைடெட்டையும் வென்று மீண்டும் மிரட்டல் விடுக்கிறது லிவர்பூல். தொடர்ந்து வெற்றிகளைக் குவித்தால் லிவர்பூல் லீக் விருதுக்கான போட்டியில் நிச்சயம் இடம்பெறும். பல வீரர்கள் காயமுற்றிருப்பதும் லிவர்பூலுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. நொட்டிங்ஹம் ஃபாரஸ்ட்டை இன்று சந்திக்கிறது லிவர்பூல். சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் அதன் நட்சத்திரம் எர்லிங் ஹாலண்டை கோல் போடவிடாமல் தடுக்கவும் செய்தது லிவர்பூல். ஆட்டத்தை சிட்டி சற்று மெத்தனமாகவும் அணுகியிருக்கலாம்.
லிவர்பூலைப் பார்த்து எங்களாலும் முடியும் என்று இதர குழுக்கள் இறங்கினால் சிட்டிக்குப் பிரச்
சினைதான். எனினும், கடந்த சில ஆண்டுகளாக அது நடக்கவில்லை. லிவர்பூலிடம் மட்டும்தான் அந்த உத்வேகம் இருந்து வந்துள்ளது. இது மாறுவது, நிர்வாகிகள் தங்களின் குழுக்களை ஊக்குவிக்கும் விதத்தில்தான் உள்ளது.
இன்று சிட்டியும் பிரைட்டனும் மோதுகின்றன.
"நீங்கள் செய்வதைச் செய்யுங்கள், நாங்கள் வெல்வதை வெல்வோம்," என்று தனது விளையாட்டின் மூலம் குரல் கொடுக்கிறது ஆர்சனல். சென்ற ஆட்டத்தில் லீட்ஸ் யுனைடெட்டிற்கு எதிராக ஆர்சனல் மிகவும் தடுமாறி வென்றது. இருந்தாலும், 'மனவுறுதியுடன் தைரியமாகக் களமிறங்குபவர்
களுக்குத்தான் அதிர்ஷ்டம் கை
கொடுக்கும்' என்ற ஆங்கிலப் பழமொழிக்கேற்ப ஆட்டம் ஆர்சனலுக்கே சாதகமாக முடிந்தது. நாளை சவுத்ஹேம்டனைச் சந்திக்கிறது ஆர்சனல். என்றுமே சிறப்பாக விளையாடும் குழுக்களுக்குப் போட்டியாக, சில காலமாகக் களை இழந்த குழுக்கள் போட்டி தரும் உணர்வு இந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவத்தில் பிறந்துள்ளது.
இந்த உணர்வு தொடர, யுனைடெட், ஆர்சனல், நியூகாசல் போன்ற குழுக்கள் தொடர்ந்து வெற்றிகளைக் குவிப்பது அவசியம். ஒரு தோல்விகூட குழுக்களின் தன்னம்பிக்கையைப் பாதிக்கலாம்.

