ஸ்டீவன் ஜெரார்ட் பதவி நீக்கம்
லண்டன்: ஆஸ்டன் வில்லாவின் நிர்வாகி பதவியிலிருந்து ஸ்டீவன் ஜெரார்ட் நீக்கப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமையன்று இங்கிலிஷ் பிரிமியர் காற்பந்தாட்டத்தில் ஃபுல்ஹம் குழுவிடம் 3-0 எனும் கோல் கணக்கில் வில்லா படுதோல்வி அடைந்தது.
ஜெரார்ட்டுக்குப் பதிலாக முன்னாள் ஸ்பர்ஸ் நிர்வாகி மொரிசியோ பொக்கெட்டினோ வில்லாவின் நிர்வாகியாக நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் பாரிஸ் செயிண்ட் ஜெமேன் குழுவின் நிர்வாகி பதவியிலிருந்து பொக்கெட்டினோ நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் குழுவை வீழ்த்திய லெஸ்டர்
லெஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் லீட்ஸ் யுனைடெட் குழுவை 2-0 எனும் கோல் கணக்கில் லெஸ்டர் சிட்டி நேற்று முன்தினம் தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம் லீக் பட்டியலின் கடைசி மூன்று இடங்களிலிருந்து லெஸ்டர் இப்போதைக்கு வெளியேறியுள்ளது.
லீட்ஸ் குழு தொடர்ந்து ஏழு ஆட்டங்களில் வெற்றியைப் பதிவு செய்யத் தவறியுள்ளது.
ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து எஃப்ஏஎஸ் பரிசீலனை
தெம்பனிஸ் ரோவர்ஸ் குழுவுக்கும் தஞ்சோங் பகார் யுனைடெட் குழுவுக்கும் இடையே நடந்த சிங்கப்பூர் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தின்போது இருதரப்பினருக்கும் இடையே தகராறு, மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாக சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் (எஃப்ஏஎஸ்) நேற்று அறிவித்தது.
நேற்று முன்தினம் 'அவர் தெம்பனிஸ் ஹப்'பில் உள்ள விளையாட்டரங்கில் தஞ்சோங் பகார் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஹஸ்ரின் ஜைலானி, குழு நிர்வாகி நூர் அலாம் ஷா ஆகியோருக்கும் தெம்பனிஸ் அணித் தலைவர் யாசிர் ஹனாப்பிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
அதையடுத்து, விளையாட்டரங்கத்துக்குக் காவல்துறையினர் அழைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

