சால்ஸ்பர்க் (ஆஸ்திரியா): ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்தில் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு இங்கிலாந்தின் செல்சி குழு தகுதிபெற்றது.
சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதிகாலையில் நடந்த ஆட்டத்தில் செல்சி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் குழுவைத் தோற்கடித்தது.
செல்சி தரப்பில் 23வது நிமிடத்தில் மட்டயோ கொவசிச்சும் 64வது நிமிடத்தில் கய் ஹவெர்ட்சும் கோல் அடித்தனர். இதனையடுத்து, 'இ' பிரிவில் பத்துப் புள்ளிகளுடன் அக்குழு முதலிடம் பிடித்தது.
புதிய நிர்வாகியாக கிரகாம் போர்ட்டர் பதவியேற்றபின் தான் ஆடிய ஒன்பது ஆட்டங்களிலும் செல்சி தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
"சால்ஸ்பர்க் குழுவிற்கு எதிராக கோல் வாய்ப்புகளை உருவாக்குவது எளிதல்ல. ஆயினும், அதைச் செய்துகாட்டினோம். முக்கிய ஆட்டக்காரர்கள் சிலர் காயமடைந்து உள்ளபோதும் மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடினர். இது ஓர் அற்புதமான முயற்சி," என்று போர்ட்டர் சொன்னார்.
நேற்றைய ஆட்டத்தில் செல்சி சார்பில் மேலும் பல கோல்கள் விழுந்திருக்கலாம். ஆனாலும், தமது அருமையான செயல்பாட்டின்மூலம் அம்முயற்சிகளையெல்லாம் முறியடித்தார் சால்ஸ்பர்க் கோல்காப்பாளர் ஃபிலிப் கோன்.
அதேபோல, செல்சி கோல்காப்பாளர் கெப்பா அரிசபலகாவின் ஆட்டமும் மெச்சும்படியாக இருந்தது. கடந்த 2018ஆம் ஆண்டில் ஸ்பெயினின் அத்லெட்டிக் பில்பாவ் குழுவிலிருந்து 72 மில்லியன் பவுண்டு விலைக்கு செல்சிக்கு மாறிய கெப்பா, தான் அவ்வளவு விலைக்குத் தகுதியானவன்தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் செயல்பட்டார்.
மான்செஸ்டர் சிட்டி-பொருசியா டோர்ட்மண்ட் குழுக்கள் மோதிய ஆட்டம் 0-0 என்று சமநிலையில் முடிந்தது.
இந்த ஆட்டத்தில் சிட்டிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தும் ரியாத் மாரெஸ் அதனை கோலாக்கத் தவறினார்.
ஆயினும், ஐந்து ஆட்டங்கள் முடிவில் 11 புள்ளிகளுடன் 'ஜி' பிரிவில் முதலிடத்தில் இருக்கும் சிட்டி, அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.
பெனால்டி வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் தமது குழுவில் பிரச்சினை இருப்பதாகக் குறிப்பிட்டார் சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா.
"நான் சிட்டி குழுவில் இணைந்த பிறகு இதுவரை 25 பெனால்டி வாய்ப்புகளைக் கோட்டைவிட்டுள்ளோம். பெரும்பாலும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில்தான் அது நடந்துள்ளது. இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம்," என்று அவர் ஆதங்கப்பட்டார்.

