பாரிஸ்: மெஸ்ஸி, நெய்மார், எம்பாப்பே ஆகிய மூன்று நட்சத்திர ஆட்டக்காரர்களைத் தமது குழுவில் கொண்டிருப்பது தான் செய்த நற்பேறு என்று கூறியுள்ளார் பிரான்சின் பிஎஸ்ஜி காற்பந்துக் குழுவின் நிர்வாகி கிறிஸ்டோஃப் கேல்ட்டியர்.
இஸ்ரேலின் மக்கபி ஹைஃபா குழுவும் பிஎஸ்ஜியும் மோதிய நேற்றைய சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் அம்மூவரின் ஆட்டத்தைக் கண்டவர்கள், கேல்ட்டியரின் கூற்று முற்றிலும் உண்மையே என்று ஒத்துக்கொண்டிருப்பர்.
அந்த ஆட்டத்தில் மெஸ்ஸி இரு கோல்களை அடிக்க, பிஎஸ்ஜி 7-2 என்ற கோல் கணக்கில் எதிரணியைப் புரட்டியெடுத்தது. எம்பாப்பே இரண்டு கோல்களையும் நெய்மார் ஒரு கோலையும் போட்டனர்.
இந்த வெற்றியின்மூலம் 'எச்' பிரிவிலிருந்து பிஎஸ்ஜி அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.
'எஃப்' பிரிவு ஆட்டமொன்றில், ஜெர்மனியின் லைப்ஸிக் குழு 3-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினின் ரியால் மட்ரிட் குழுவை வீழ்த்தி அதிர்ச்சியளித்தது. ஆயினும், ரியால் குழு காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு ஏற்கெனவே தகுதிபெற்றுவிட்டது.

