டி20: நெதர்லாந்துடன் இந்தியா இன்று மோதல்
சிட்னி: உலகக் கிண்ண டி20 கிரிக்கெட் தொடரில் பரபரப்புமிக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு, நெதர்லாந்துடனான இன்றைய ஆட்டம் பெரும் சவாலாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
வலுவான இந்தியப் பந்தடிப்பு வரிசை நெதர்லாந்துப் பந்துவீச்சாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்காவிடினும் பெரும் நெருக்கடி அளிக்கக்கூடும்.
அதே நேரத்தில், நேற்று இங்கிலாந்தை அயர்லாந்து அணி வீழ்த்தியதுபோல, கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் இந்திய அணி மெத்தனமாகவும் இருந்துவிடலாகாது.
அணித்தலைவர் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகிய முன்வரிசைப் பந்தடிப்பாளர்கள் ஓட்டம் குவிக்க இன்றைய ஆட்டம் நல்லதொரு வாய்ப்பு.
அடுத்ததாக தென்னாப்பிரிக்க அணியுடன் மோத வேண்டியுள்ளதால், அதற்குமுன் இன்றைய போட்டியில் சொல்லிக்கொள்ளும்படி ஓட்டம் குவித்து அவர்கள் தங்களை நன்கு ஆயத்தப்படுத்திக்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெதர்லாந்துப் பந்துவீச்சாளர்கள் தகுதிச்சுற்றிலும் பங்ளாதேஷ் அணிக்கு எதிரான 'சூப்பர் 12' சுற்று ஆட்டத்திலும் ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டனர்.
ஆனால், சிட்னி ஆடுகளத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நியூசிலாந்து 200 ஓட்டங்களைக் குவித்ததாலும் இந்திய அணியின் வலுவான பந்தடிப்பு வரிசையாலும் இன்றைய போட்டி அவர்களுக்கு எளிதாக இராது.
பூவா தலையாவில் வென்றால் பெரும்பாலும் இந்திய அணி முதலில் பந்தடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதே பதினொரு வீரர்களே இன்றும் களமிறங்குவர் என்று இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளர் பரஸ் மம்ப்ரே தெரிவித்துஇருக்கிறார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் இறுதியில் தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட ஹார்திக் பாண்டியா தேறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் போட்டியில் விராத் கோஹ்லி 73 ஓட்டங்களைக் குவிக்கும் பட்சத்தில் டி20 உலகக் கிண்ணத்தில் 1,000 ஓட்டங்களைக் கடந்த 2வது வீரர் என்ற பெருமையைப் பெறுவார். இதற்குமுன் இலங்கையின் மகேலா ஜெயவர்தனே அச்சாதனையைப் புரிந்துள்ளார்.
இன்றைய ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கும்.
இன்று நடக்கவுள்ள மற்ற இரண்டாம் பிரிவு ஆட்டங்களில் தென்னாப்பிரிக்கா- பங்ளாதேஷ், பாகிஸ்தான்-ஸிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

