அயர்லாந்திடம் வீழ்ந்த இங்கிலாந்து
மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் கிண்ணம் வெல்ல வாய்ப்பு உள்ள அணிகளுள் ஒன்றாகக் கருதப்படும் இங்கிலாந்து, அயர்லாந்து அணியிடம் ஐந்து ஓட்டங்களில் தோற்று அதிர்ச்சியளித்தது.
முதலில் பந்தடித்த அயர்லாந்து அணி தொடக்கத்தில் விரைவாக ஓட்டங்களைக் குவித்தபோதும் இன்னிங்சின் பிற்பாதியில் மளமளவென விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனால், அவ்வணி 19.2 ஓவர்களில் 157 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அணித் தலைவர் ஆண்டி பல்பெர்னி 62 ஓட்டங்களையும் லோர்க்கன் டக்கர் 34 ஓட்டங்களையும் எடுத்தனர். அதன்பின் பந்தடித்த இங்கிலாந்து 14.3 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 105 ஓட்டங்களை எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அதன் பின்னர் ஆட்டத்தைத் தொடர முடியாமல் போகவே, 'டக்வொர்த் லூயிஸ்' முறைப்படி அயர்லாந்து அணி ஐந்து ஓட்டங்களில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
அடுத்து நடக்கவிருந்த ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டமும் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
உணவு குறித்து இந்திய அணி புகார்
சிட்னி: பயிற்சிக்குப்பின் தங்களுக்கு வழங்கப்பட்ட உணவு தொடர்பில் இந்திய அணி வீரர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். நேற்று முன்தினம் தீவிர பயிற்சிக்குப்பின் சூடான உணவு உண்பதே நல்லது எனக் கூறப்படுகிறது. இந்திய வீரர்களும் அதையே விரும்பினர். ஆனால், குளிர்ந்த 'சேண்ட்விச்' இருந்ததால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். செவ்வாய்க்கிழமைக்கான உணவுப்பட்டியலில் சேண்ட்விச் இல்லை என்றும் சொல்லப்பட்டது. இதனையடுத்து, தங்களது ஹோட்டலுக்குத் திரும்பி, அவர்கள் நண்பகல் உணவு உண்டனர். இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து விசாரித்து வருவதாகக் கூறிய அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி), விரைவில் தீர்வுகாணப்படும் என்றும் உறுதிகூறியது.
'ஐபிஎல்லால் ஆட்டத்திறன் மேம்பாடு'
பெர்த்: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 17 பந்துகளில் அரைசதம் விளாசி, ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் (படம்). நேற்று முன்தினம் நடந்த அந்தப் போட்டியில் முதலில் பந்தடித்த இலங்கை அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்களை எடுத்தது. பின்னர் பந்தடித்த ஆஸ்திரேலியா, 16.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து அந்த இலக்கை எட்டியது. ஆட்ட நாயகனான ஸ்டோய்னிஸ், "ஐபிஎல் போட்டிகளால் எனது ஆட்டத்திறன் மேம்பட்டது. பலதரப்பட்ட ஆடுகளங்களில் விளையாட முடிவதுடன் உலகம் முழுவதுமிருந்தும் வரும் பயிற்றுவிப்பாளர்களின்கீழும் வெவ்வேறு நாட்டு வீரர்களுடன் இணைந்தும் விளையாடும் வாய்ப்பை ஐபிஎல் வழங்குகிறது," என்று சொன்னார்.

