சிட்னி: ஆண்கள் டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியின் 'சூப்பர்-12' சுற்றில் தனது இரண்டாம் ஆட்டத்திலும் வென்றுள்ளது இந்தியா. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா, நெதர்லாந்தை வென்றது.
முதலில் பந்தடித்த இந்தியா இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ஓட்டங்களை எடுத்தது. அதற்குப் பிறகு நெதர்லாந்து ஒன்பது விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இந்த சூப்பர் 12 இரண்டாம் பிரிவு ஆட்டத்தில் 62 ஓட்டங்களை எடுத்து அசத்தினார் இந்திய நட்சத்திரம் விராத் கோஹ்லி. பாகிஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்திலும் சிறப்பாக ஆடி இந்தியா வெல்வதற்கு கோஹ்லி முக்கியக் காரணமாக இருந்தார்.
இந்த ஆட்டத்தில் இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா 53 ஓட்டங்களை எடுத்து சிறப்பாக ஆடினார். 51 ஓட்டங்களை எடுத்து கவனத்தைத் தனது பக்கம் ஈர்த்தார் சூர்யகுமார் யாதவ்.
ஆட்டத்தின் பாதிக் கட்டத்தில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தது இந்தியா. எனினும், சூர்யா களமிறங்கிய பிறகு நிலவரம் மாறத் தொடங்கியது.
அதற்குப் பின்னர் கோஹ்லியின் அபார விளையாட்டையும் நெதர்லாந்தால் சமாளிக்க முடியவில்லை.
இந்தியப் பந்துவீச்சு விரர் புவனேஸ்வர் குமார், மூன்று ஓவர்களை வீசி ஒன்பது ஓட்டங்களை விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வெளியேற்றினார். மேலும், அர்ஷ்தீப் சிங், ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய இருவரும் ஆளுக்கு இரண்டு விக்கெட்டுகளை வெளியேற்றினர்.
'சூப்பர்-12' இரண்டாம் பிரிவில் தற்போது முதலிடம் வகிக்கிறது இந்தியா. பிரிவில் தனது முதல் இரு ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ள நெதர்லாந்து கடைசி இடத்தில் உள்ளது.
நெதர்லாந்து தனது அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது. அடுத்த ஆட்டத்தில் இந்தியா, தென்னாப்பிரிக்காவைச் சந்திக்கிறது.
'சூப்பர்-12' இரண்டாம் பிரிவில் முன்னதாக பங்ளாதேஷை 104 ஓட்டங்களில் விழ்த்தியது தென்னாப்பிரிக்கா. அந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் ரைலீ ரொசூ 109 ஓட்டங்களைக் குவித்தார்.
இந்த ஆண்டின் ஆண்கள் டி20 உலகக் கிண்ணத்தில் முதல் செஞ்சுரியை அடித்திருப்பவர் ரொசூ. அவர் 56 பந்துகளில் 109 ஓட்டங்களை எடுத்தார்.
ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ஓட்டங்களை எடுத்தது முதலில் பந்தடித்த தென்னாப்பிரிக்கா. இவ்வாண்டு டி20 போட்டியில் இதுவரை ஓர் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காதான் ஆக அதிக ஓட்டங்களைக் குவித்திருக்கிறது.
பங்ளாதேஷுக்கான வெற்றி இலக்கு 206 ஓட்டங்களாக இருந்தது. ஆனால், 16.3 ஓவர்களில் தனது எல்லா விக்கெட்டுகளையும் இழந்த பங்ளாதேஷ், 101 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

