மான்செஸ்டர்: யூயேஃபா யூரோப்பா லீக் காற்பந்துப் போட்டியில் மீண்டும் தனது ஆற்றலை நிரூபித்துள்ளார் மான்செஸ்டர் யுனைடெட் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
'இ' பிரிவில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான யுனைடெட், மொல்டோவாவின் ஷெரிஃப் டிரா்ஸ்பொலை 3-0 எனும் கோல் கணக்கில் வென்றது. மூன்று கோல்களில் ஒன்றைப் போட்டவர் ரொனால்டோ.
டியோகோ டாலோ, மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் ஆகியோர் யுனைடெட்டின் இதர இரண்டு கோல்களைப் போட்டனர்.
இந்த வெற்றியின் மூலம் 'இ' பிரிவில் ஓர் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் யுனைடெட், அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகியுள்ளது. ஒரு பிரிவில் முதல் இரண்டு இடங்களில் முடிக்கும் குழுக்கள் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும்.
'இ' பிரிவில் முதலிடத்தில் உள்ள ஸ்பெயினின் ரியால் சோசியடாட்டும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுகிறது.
சென்ற வாரம் பிரிமியர் லீக்கில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பருக்கு எதிரான ஆட்டத்தின் கடைசி சில நிமிடங்களில் ரொனால்டோ மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்க மறுத்து அரங்கிலிருந்து வெளியேறினார். அதற்குத் தண்டனையாக கடந்த சனிக்கிழமையன்று செல்சிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் குழுவிலிருந்து ரொனால்டோவை நீக்கினார் யுனைடெட் நிர்வாகி எரிக் டென் ஹாக்.
அந்த அவமானத்திலிருந்து மீண்டு வந்து சிறப்பாக ஆடிய ரொனால்டோ, டென் ஹாக்கின் பாராட்டையும் பெற்றார்.
இதுவரை பல சவால்களைச் சந்தித்துள்ள யுனைடெட்டைப் படிப்படியாக முன்னேற்றம் காண வைத்துள்ளார் டென் ஹாக்.
யூயேஃபா யூரோப்பா லீக்: அடுத்த சுற்றுக்கு முன்னேறியது மான்செஸ்டர் யுனைடெட்

