ஐண்ட்ஹோவன் (நெதர்லாந்து): யூயேஃபா யூரோப்பா லீக் காற்பந்துப் போட்டியின் 'ஏ' பிரிவு ஆட்டத்தில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான ஆர்சனலை வென்றுள்ளது நெதர்லாந்தின் பிஎஸ்வி ஐண்ட்ஹோவன்.
2-0 எனும் கோல் கணக்கில் பிஎஸ்வி வென்றது. ஜோயி வியர்மன், லூக் டி யோங் ஆகியோர் கோல்களைப் போட்டனர்.
எனினும், ஆர்சனல் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது ஏற்கெனவே உறுதியாகியிருந்தது.
'ஏ' பிரிவில் தற்போது முதலிடம் வகிக்கிறது ஆர்சனல். இந்த ஆட்டத்தில் வென்றிருந்தால் அது இப்பிரிவில் முதலிடத்தில் முடிப்பதும் உறுதியாகியிருக்கும், அவ்வளவுதான்.
எனினும், இந்த ஆட்டத்தில் ஆர்சனல் வெற்றிபெறாமல் சமநிலை கண்டிருந்தாலே அது சாத்தியமாகியிருக்கும். அதைக்கூட செய்யமுடியாதது கவலை தரும் ஒன்றாக இருக்கலாம்.
பிரிமியர் லீக்கில் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இதுவரை முதலிடத்தை வகித்து வந்த ஆர்சனல் கடந்த சனிக்கிழமையன்று சிரமப்பட்டுவந்த சவுத்ஹேம்ப்டனுக்கு எதிரான ஆட்டத்தில் சமநிலை கண்டது. அதைத் தொடர்ந்து பிஎஸ்விக்கு எதிராகவும் சோபிக்கவில்லை.
இது தனது விளையாட்டாளர்களின் தன்னம்பிக்கையைப் பாதிக்காமல் ஆர்சனல் நிர்வாகி மிக்கெல் அர்ட்டெட்டா பார்த்துக்கொள்ளவேண்டும்
'ஏ' பிரிவில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது பிஎஸ்வி. இக்குழுவும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது உறுதி.
இவ்விரண்டில் எந்தக் குழு பிரிவில் முதலிடத்தைப் பிடிக்கும் என்பதற்கான போட்டிதான் இப்போது உள்ளது. 'ஏ' பிரிவில் இரு குழுக்களுக்கும் இன்னும் ஓர் ஆட்டம் எஞ்சியுள்ளது.

