செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

கிரிக்கெட்: இந்திய வீரர்களுக்கும்

வீராங்கனைகளுக்கும் ஒரே தொகை

புதுடெல்லி: கிரிக்கெட்டில் தேசிய அணிகளுக்கு ஆடும் விளையாட்டாளர்களுக்கு ஒவ்வோர் ஆட்டத்துக்கும் ஒரு தொகை வழங்கப்படும். அந்த வகையில் இந்தியாவின் ஆண்கள், பெண்கள் தேசிய அணிகளில் ஆடும் விளையாட்டாளர்களுக்கு ஒரே தொகை வழங்கப்படும் என்று 'பிசிசிஐ' எனும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜே ஷா நேற்று முன்தினம் அறிவித்தார்.

இதன்படி தேசிய டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டங்களுக்கு ஆண், பெண் விளையாட்டாளர்கள் ஒவ்வொருவருக்கும் 1,500,000 ரூபாய் (25,660 வெள்ளி) வழங்கப்படும். மேலும், ஒருநாள் ஆட்டங்களுக்கு 600,000 ரூபாயும் 20 ஓவர் ஆட்டங்களுக்கு 300,000 ரூபாயும் வழங்கப்படும்.

"பிசிசிஐ-உடன் ஒப்பந்தம் உள்ள பெண் விளையாட்டாளர்களுக்கு சமமான சம்பளம் வழங்க வகைசெய்யும் திட்டத்தை நாங்கள் செயல்படுத்துகிறோம்," என்று திரு ஷா கூறினார்.

"ஆண், பெண் இரு பாலினங்களுக்கும் சம உரிமை வழங்கப்படுவதை நோக்கி இந்தியா சென்றுகொண்டிருக்கும் வேளையில் கிரிக்கெட் வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் ஒரே ஆட்டத் தொகை வழங்கப்படும்," என்று அவர் குறிப்பிட்டார்.

பிரேசிலிய வீரர் நெய்மார் மீதான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி

பார்சிலோனா: பிரேசில் காற்பந்து நட்சத்திரம் நெய்மார் (படம்) மீது சுமத்தப்பட்டிருந்த ஊழல், ஏமாற்று வேலை ஆகியவை தொடர்பிலான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

தற்போது பிரான்சின் பிஎஸ்ஜி குழுவுக்கு விளையாடும் நெய்மார், 2013ஆம் ஆண்டு ஸ்பெயினின் பார்சிலோனாவில் சேர்ந்தார். அந்தப் பரிவர்த்தனையின் தொடர்பில் நிதி சார்ந்த முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டதால் நெய்மார் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நேற்று அவை தள்ளுபடி செய்யப்பட்டன.

தொடர்ந்து 'மெர்சடிஸ்' நிறுவனத்தைப் பிரதிநிதிக்க விரும்பும் ஹேமில்டன்

லண்டன்: 'மெர்சடிஸ்' நிறுவனத்தின்கீழ் தொடர்ந்து போட்டியிட வகைசெய்யும் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகத் தெரிவித்துள்ளார் ஃபார்முலா ஒன் விருதை ஏழு முறை வென்றுள்ள பிரிட்டிஷ் வீரர் லூயிஸ் ஹேமில்டன்.

அந்நிறுவனத்துக்கும் ஹேமில்டனுக்கும் இடையே தற்போது இருக்கும் ஒப்பந்தம் அடுத்த ஆண்டு நிறைவடைகிறது. எனினும், இன்னும் பல ஆண்டுகளுக்கு ஒப்பந்ததை நீட்டிக்க விரும்புவதாக அவர் கூறினார்.

ஹேமில்டனுக்கு இன்னும் சில நாள்களில் 38 வயதாகிவிடும். 40 வயதையும் தாண்டி ஃபார்முலா ஒன் பந்தயத்தில் போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளார்.

'தி ரேஸ்' ஊடகத்துடன் நடைபெற்ற நேர்காணலில் அவர் இந்த விவரங்களை வெளியிட்டார்.