பெர்த்: ஆண்கள் டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் எதிர்பாரா வகையில் பாகிஸ்தானை வென்றுள்ளது ஸிம்பாப்வே. இந்த விறுவிறுப்பான 'சூப்பர்-12' சுற்று இரண்டாம் பிரிவு ஆட்டத்தில் ஸிம்பாப்வே ஓர் ஓட்ட வித்தியாசத்தில் வென்றது.
முதலில் பந்தடித்த ஸிம்பாப்வே எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ஓட்டங்களை எடுத்தது. ஆட்டத்தில் வெல்ல பாகிஸ்தான் 131 ஓட்டங்களை எடுக்கவேண்டியிருந்தது.
எனினும், எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ஓட்டங்களை எடுத்தது பாகிஸ்தான். 'சூப்பர்-12' சுற்றில் தனது முதல் இரு ஆட்டங்களிலும் அது தோல்வியடைந்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வெற்றிபெறும் நிலையில் இருந்த பாகிஸ்தான் கடைசி சில பந்துகளில் கோட்டை விட்டது.
ஸிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் வெல்ல கடைசி பந்தில் பாகிஸ்தானுக்கு மூன்று ஓட்டங்கள் தேவைப்பட்டன. எனினும், அதன் வீரர் ஷஹீன் அஃப்ரிடியால் ஓர் ஓட்டத்தை மட்டுமே எடுக்க முடிந்தது.
டி20 உலகக் கிண்ணத்தில் முதன்முறையாக முதல் சுற்றுக்குப் பிறகு வரும் ஓர் ஆட்டத்தில் வெற்றிகண்டுள்ளது ஸிம்பாப்வே. இதன் பந்து வீச்சாளர்களின் அபார விளையாட்டுக்கு பாகிஸ்தான் வீரர்களால் ஈடுகொடுக்கமுடியவில்லை.
'சூப்பர்-12' சுற்று இரண்டாம் பிரிவில் மூன்றாம் இடத்தை வகிக்கிறது ஸிம்பாப்வே. முதலிடத்தில் இந்தியாவும் இரண்டாம் இடத்தில் தென்னாப்பிரிக்காவும் உள்ளன. ஐந்தாம் இடத்தில் இருக்கிறது பாகிஸ்தான்.
இவ்வாண்டின் டி20 கிண்ணத்தை வெல்லும் அதன் இலக்கில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

