ஓவியங்களால் நீங்கள் முதன் முதலில் ஈர்க்கப்பட்ட தருணம் நினைவிருக்கிறதா?
நான் பிறந்து வளர்ந்தது மதுரை. சிறு வயதில் என் அம்மா மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் செல்லும்போது அங்குள்ள சிற்பங் களைப் பார்த்திருக்கிறேன். குறிப்பாக, அழகர் கோவில் சிற்பங்கள். மதுரை சித்திரைத் திருவிழாவில் கிராமியக் கலைஞர்களின் ஆட்டமும் பாட்டமும் என்னைக் கவர்ந்தன. நாயக்கர் காலத்து ஓவியம் ஒன்று மதுரை பொற்றாமரைக் குளத்தைச் சுற்றி இருந்தது. சிறு வயதில் அதைக் கடந்து செல்லும்போதெல்லாம் நிமிர்ந்து பார்ப்பேன். விவரமில்லாத அரசு அதிகாரியால் அதை நாம் இன்று இழந்துவிட்டோம்.
என் தந்தை எனக்கு வாங்கித்தந்த படங்கள் நிறைந்த புத்தகங்கள் நினைவிருக்கிறது.
யுலிஸிஸ் (Ulysses), சிந்துபாத் போன்ற கதைகளை நான் ரே ஹாரியின் (Ray Harryhausen) அனிமேஷன் திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன். சைக்ளோப்ஸ் என்கிற ஒற்றைக்கண் பூதம் வரும். ஐந்து வயதில் இவையனைத்தும் எனக்குள் உண்டாக்கிய ஆர்வத்தின் வழியில்தான் இன்றும் பயணிக்கிறேன்.
ஏழாம் வகுப்பு படிக்கும்போதே பணம் சேர்த்துவைத்து ஒரு கேமரா வாங்கிவிட்டேன். புகைப்படங்கள் எடுப்பதில் தனி ஆர்வம் இருந்தது. ஓவியங்களும் வரைவேன். பிறகு சினிமா வரைகலை துறைகளிலும் இயங்கினேன். இவை அனைத்துமே தனித்தனித் துறைகளாக இருந்தன. மின்னிலக்க புரட்சி வந்து அனைத்தையும் ஒன்றாக்கிவிட்டது.
தமிழில் மரபுசார்ந்த கதைகள் கேலிச்சித்திர நூல்களாக புத்தகங்களாக வெளிவர வாய்ப்புள்ளதா?
தமிழ்நாட்டில் மட்டும் என்றில்லை, இந்தியா முழுவதுமே காமிக்ஸ் புத்தகம் சிறுவர்களுக்கானது என்னும் பொதுக் கருத்து நிலவுகிறது. வளர்ந்தவர்கள் காமிக்ஸ் புத்தகம் படித்தால், அவர்களை இன்னும் வளராதவர்கள் என்று நினைக்கும் சூழல் இங்குண்டு.
இதுவே தமிழில் காமிக்ஸ் வெளியாவதற்கான மிகப் பெரிய தடையாக உள்ளது. வார்த்தைகளைப் படிப்பது போலவே ஒரு சித்திரத்தை எவ்வாறு படிப்பது, எப்படி அணுகுவது என்ற பயிற்சி தமிழ்நாட்டு மாணவர்களின் பாடத்திட்டத்தில் ஒரு போதும் இருந்ததில்லை.
நல்ல சித்திரங்களைக் கொண்ட பாடப் புத்தகங்களும்கூட இங்கிருந்ததில்லை.
உலகம் முழுதும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ்க் குழந்தைகளுக்கான பாடத் திட்டத்தை வகுக்கும் பணியின்போது, ஐரோப்பிய நாடுகளின் பாடப் புத்தகங்களைப் பார்த்திருக்கிறேன். அவற்றில் சித்திரங்களுக்குத்தான் முதலிடம் இருக்கிறது.
தமிழ்ப் பாட நூல்கள் அனைத்தும் சித்திரங்களுடன் இருக்க வேண்டும் என்பதைப் பாடத் திட்ட ஆலோசனைக் குழுவிற்கு நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
பிரெஞ்சு மக்களையும் ஜப்பானிய மக்களையும் ஏன் காமிக்ஸ் புத்தகங்களுக்கு அடிமை எனச் சொல்கிறேன் என்றால், காட்சி ஊடகத்தில் தேர்ச்சிபெற்ற சமூகமாக இருக்கிறார்கள். உலகம் முழுதும் வளர்ச்சி பெற்ற சமூகமானது மொழியையும் தாண்டி, சொற்களே அற்ற காண்பியல் மொழியில்தான் உரையாடுகிறது. இனிமேல் அடிப்படையில் தகவல் பரிமாற்றம் இவ்வாறே நிகழும்.
- நன்றி: அரூ இணைய இதழ்

