இவ்வாண்டு நடைபெறும் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் ஒரு பகுதி யாக கவிமாலை அமைப்பு ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் எம்.டி. முத்துக் குமாரசாமி கலந்து கொள்ளவுள்ளார்.
இலக்கியம், பண்பாடு, தத்துவம், கோட்பாடுகள் போன்றவை பற்றி எழுதும் விமர்சகர், நாட்டுப்புறவியல், பண்பாட்டு அறிஞர் எனப் பல பரிமாணங்கள் கொண்டவர் எம் டி முத்துக்குமாரசாமி.
கவிதை எனில் நாடகம் என்ற தலைப்பில் இவரது சிறப்புரை நவம்பர் 6 ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஆசிய நாகரிக அரும்பொருளகத்தின் நீ ஆன் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ்ச் சிறுகதை எழுத்தில் நிகழ்ந்த சோதனைகளில் எம் டி முத்துக்குமாரசாமியின் சிறுகதைகள் குறிப்பிடத்தகுந்தவை. இவரது 'மைத்ரேயி மற்றும் பிற கதைகள்' சிறுகதைத் தொகுப்பு அத்தகைய குறிப்பிடத்தக்க முயற்சியாகும்.
நீர் அளைதல், 'ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்' முதலிய இரண்டு காத்திரமான தமிழ் நவீன கவிதை நூல்களை இவர் படைத்துள்ளார்.
கதை மேல் கதைபோன்ற ஒன்றை, கவிதைமீது கவிதை போன்ற அறிவின் திடத்துடன், புலமையோடு சேர்த்து அவர் உருவாக்குகிறார்.

