ஓய்வு பெற்ற தேசிய திடல்தட வீரரான யூகே ஷியாம், புற்றுநோய் ஆய்வுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கில் முதல் முறையாக சிங்கப்பூரின் ஆகப்பெரிய ஓட்ட நிகழ்வான 'ரன் ஃபோர் ஹோப் 2022'ல் பங்கேற்று 2.9 கி.மீ. ஓடவிருக்கிறார்.
தற்போது, ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தில் ஆசிரியராகப் பணிபுரியும் யூகே ஷியாம், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
இந்தக் கொடியநோயால் உயிரிழந்த தன்னுடைய நண்பர்களின் உறவினர்களை நினைவுகூர்ந்த அவர், "சமுதாயத்தில் கடும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னால் முடிந்த பங்களிப்பை இந்த ஓட்டத்தின் மூலம் தர விரும்புகிறேன்," என்றார்.
"இது ஒரு சிறிய பங்களிப்பாக இருந்தாலும் இதன் முலம் பயனடைவோர் அதிகம்" என்று அவர் கூறினார்.
நாளை காலை 6.30 மணிக்கு மரினா அணைக்கட்டில் துவங்கும் நேரடி ஓட்டத்தில் ஷியாம் மற்றவர்களுடன் பங்கேற்கிறார்.
"ஒருவர் ஓடுவதற்கு சீரான உடல் நிலையும், நல்ல உடலமைப்பும் இருக்க வேண்டுமென்பது அவசியமல்ல," என்ற யூகே ஷியாம், "பொதுமக்களும் புற்று நோய் ஆராய்ச்சிக்கு தங்களால் முடிந்ததை இதன் மூலம் பங்களிக்க முடியும்," என வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் கலந்துகொள்பவர் களுக்கு அவர்களின் விருப்பத்திற்கேற்ப மெய்நிகர், நேரில் அல்லது இரண்டு வழிகளிலும் ஓடுவதற்கான வசதி முதல்முறையாக இந்த 29வது ஓட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நேரில் ஓடுவதற்கான இரண்டு பிரிவுகளான 2.9 கி.மீ. தூரம் அல்லது 10 கி.மீ. தூரம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் பங்கேற்று ஓடலாம்.
மெய்நிகர் வழியாக ஓட விரும்புவோர், தாங்கள் விரும்பிய இடங்களிலும் விரும்பிய நேரங்களிலும் 29 கி.மீ. தூரம் அல்லது 290 கி.மீ. தூரம் ஓடியும் மிதிவண்டி ஓட்டியும் பங்கேற்கலாம்.
மெய்நிகர் ஓட்டம், நாளை முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரையில் நடைபெறும்.
29 கி.மீ, 290 கி.மீ. ஆகிய தூரங்களை முடிக்கும் முதல் மூன்று பேருக்கும் அதிக உறுப்பினர்களுடன் குழுவாகப் பங்கேற்ற முதல் மூன்று நிறுவனங்களுக்கும் புற்றுநோய் ஆய்வுக்கு அதிக பங்களித்தவர்களுக்கும் பரிசுகள் காத்துக்கொண்டு இருக்கின்றன.
தொற்றுநோய் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மெய்நிகர் வழி ஓட்டம் நடந்தாலும் மக்களின் ஆதரவு இந்த உன்னத நோக்கத்திற்கு அமோகமாக இருந்தது.
இந்தாண்டு நேரடியாக நடப்பதால் மக்களின் ஆதரவு மேலும் அதிகமாகஇருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மரணத்திற்கு முக்கிய காரணமாக புற்றுநோய் விளங்குகிறது என்பதை சிங்கப்பூர் புற்றுநோய் பதிவகத்தின் அண்மைய புள்ளி விவரங்கள் காட்டு கின்றன.
2015லிருந்து 2019 வரை புற்றுநோயால் 28,500க்கும் மேற்பட்ட சிங்கப் பூரர்கள் மாண்டனர்.
அதோடு, நம் நாட்டில் மொத்தம் 78,204 புற்றுநோய் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
புற்றுநோயைக் கண்டறியவும் அதற்கு உரிய சிகிச்சை அளிக்கவும் நோயைத் தவிர்க்கும் சாத்தியங்களை ஆராயவும் புற்றுநோய் ஆராய்ச்சி உதவு கிறது.
2008ஆம் ஆண்டிலிருந்து இந்த ஓட்டம், சிங்கப்பூர் புற்றுநோய் நிலையத்தின் புற்றுநோய் ஆராய்ச்சி நிதிக்கு ஆதரவு அளித்து வருகிறது.
இதிலிருந்து திரட்டப்படும் நிதி, புற்று நோய் ஆராய்ச்சிக்கு நேரடியாகச் செல்லும். அரிய வகை புற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற் படுத்தும் வகையிலும் இந்த ஓட்டம் நடைபெறும்.
இந்த ஓட்டத்தில் பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
பங்கேற்பாளர்கள் அனைவரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் அல்லது கடந்த 180 நாள்களுக்குள் கொவிட்-19 நோயிலிருந்து குணமடைந்திருக்க வேண்டும்.
ஓட்டத்தில் பங்கெடுக்க விரும்பும் சிறுவர்கள் 12 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
நேரடி ஓட்டத்திற்கு நவம்பர் 4ஆம் தேதிக்கும் மெய்நிகர் ஓட்டத்திற்கு டிசம்பர் 15ஆம் தேதிக்கும் முன்பு பதிவு செய்ய வேண்டும்.
இந்த நிகழ்வுக்கு தேசிய புற்றுநோய் நிலையமும் ஃபோர் சீசென்ஸ் ஹோட்டலும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
மேல் விவரங்கள் https://www.runforhope.sg/ இணையப் பக்கத்தில் இடம்பெற்று உள்ளன.