சிங்கப்பூர் ரசிகர்களுக்கு 'All Love No Hate' கச்சேரியைப் படைக்கும் சித் ஸ்ரீராம்.
ஆ. விஷ்ணு வர்தினி
'ஆல் லவ் நோ ஹேட்' இசை கச்சேரியை இன்று நான்கு பாகங்களாக படைக்கவிருக்கிறார் சித் ஸ்ரீராம். ஒவ்வொரு பாகமும் வேறுபட்ட பாணியிலான பாடல் களையும் உணர்வுகளையும் கொண்டிருக்கும் என அவர் தெரி வித்துள்ளார்.
ஈராண்டுகளாக ஒத்திவைக்கப் பட்ட இக்கச்சேரி இன்று அரங்கம் நிறைந்த மக்களுடன், தி ஸ்டார் தியேட்டரில் நிகழவுள்ளது.
மூன்று வயதிலிருந்தே கர்நாடக இசை பயின்று வந்த சித் ஸ்ரீராம், இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானின் 'அடியே' பாடலின் மூலம் 2013ஆம் ஆண்டில் திரைப்படத் துறையில் காலடி எடுத்து வைத்தார்.
இசை குடும்பத்தைச் சேர்ந்த அவர், சென்னையில் பிறந்திருந்தாலும் அமெரிக்காவில் வளர்ந்து, கர்நாடக இசை ஆசிரியரான தனது தாயார் லதா ஸ்ரீராமிடம் பயிற்சி பெற்றார். கடந்த பத்தாண்டு களாக, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு இந்திய மொழிகளிலும் திரையிசை பாடல்கள் பாடியுள்ளார் அவர்.
இவ்வாண்டு, இந்தி, மராத்தி திரையிசை துறைகளில் சித் ஸ்ரீராம் அறிமுகமாகினார்.
கூடிய விரைவில் அவரை திரையிலும் காணலாம் என பல ஊடகங்கள் கணித்து வந்ததை மறுத்த அவர், இன்னும் சில ஆண்டுகளில் நடிப்புக் கலையை முறையாக கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளதாகவும் கூறினார்.
"ஒருவேளை நடிக்க தொடங்கினால், இசையில் நான் கோலோச்சிய அளவுக்கு நடிப்புக் கலையிலும் சிறந்து விளங்கவேண்டும் என்ற எண்ணம் உண்டு," என்றார் சித் ஸ்ரீராம். சிங்கப்பூரில் மூன்றாவது முறையாக இசை கச்சேரி படைக்கும் சித் ஸ்ரீராம், சிங்கப்பூர் ரசிகர்களின் அன்பை எதிர்நோக்கியுள்ளதாக பகிர்ந்துகொண்டார்.
தனது முதல் வெளிநாட்டு இசை நிகழ்வை சிங்கப்பூரில் படைத்தபோது, அரங்கம் நிறையவில்லை என்றாலும், சிங்கப்பூரர்களின் அயராத அன்பும் உற்சாகமும் அவர் மனதை நிறைத்திருந்தது.
உற்சாகம் மிகுந்த பாடல்களையும், அர்த்தமுள்ள, ஆழமான தருணங்களையும் இம்முறை தனது இசை நிகழ்வில் மக்கள் எதிர்பார்க்கலாம் என்றார் சித் ஸ்ரீராம்.
மக்கள் தொடர்பின்றி முடங்கிய கொவிட்-19 காலத்தில், இசை நிகழ்வுகளின் மூலம் மக்களுடன் இணைய முடியவில்லையே என்ற ஏக்கத்தை இக்கச்சேரி தீர்த்து வைக்கும் என்றும் அவர் கூறினார்.
அதே சமயம், கொவிட்-19 காலத்தில் தனது இசை பாணியை மறுபரிசீலனை செய்வதற்கும் வாய்ப்பிருந்ததாக கூறிய சித் ஸ்ரீராம், கர்நாடக இசைக் கலைஞராகவும் திரையிசை கலைஞராகவும் தனது அடையாளத்தை அது பிரதிபலித்ததாகக் தெரிவித்தார்.
"புல்லாங்குழல் இசைக் கலைஞர் டி. ஆர். மகாலிங்கத்தின் படைப்புகளில் அவர் மௌனங்களையும் இடைவெளியையும் கையாளும் விதம் என்னை மிக கவர்ந்தது. மௌனத்தையே ஓர் இசைக் கருவியாக பயன்படுத்தும் அத்தகைய உத்தியைக் கையாளும் ஆர்வமுள்ளது. அதை தவிர்த்து, வாழ்வில் பார்க்கும், கேட்கும் அனைத்துமே எனது இசைக்கு ஊட்டமளிப்பவை," என்றார் அவர்.
ஏறக்குறைய பத்தாண்டுகளாக இசைத்துறையில் பயணித்து வந்து உள்ளார் சித் ஸ்ரீராம். இருபதுகளில், ஆங்கில இசையின் பக்கம் ஈர்க்கப்பட்டிருந்த அவரை ஏ. ஆர். ரஹ்மானின் ஒரு மின்னஞ்சல் தன்னை திசை திருப்பியது போல, பல்வேறு எதிர்பாரா வாய்ப்புகள் சித் ஸ்ரீராமை நாடி வந்தன.
தனது இசையும் குரலும் உணர்வும் உலகளாவிய மக்களிடத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வல்லது என்ற பொறுப்புணர்வை இப்பயணம் தனக்குத் தந்துள்ளதாக அவர் கூறினார்.
இன்னும் சில ஆண்டுகளில், வெவ்வேறு கலைகளின் பக்கம் தனது கவனம் திரும்பலாம் என கூறினார் சித் ஸ்ரீராம். அடுத்த ஆண்டில், சித் ஸ்ரீராமின் ஆங்கில இசைப் படைப்புகளை மக்கள் எதிர் நோக்கலாம்.

