மான்செஸ்டர்: இங்கிலாந்தின் லீக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஆஸ்டன் வில்லாவிற்கு எதிராகப் பழிதீர்த்துக்கொண்டுள்ளது மான்செஸ்டர் யுனைடெட். சென்ற வாரம் நடைபெற்ற இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் வில்லாவிடம் தோல்வியடைந்த யுனைடெட் இந்த ஆட்டத்தில் வெற்றிகண்டது.
4-2 எனும் கோல் கணக்கில் வென்றது யுனைடெட். ஆன்டனி மார்சியால், மார்க்கர்ஸ் ரேஷ்ஃபர்ட், புரூனோ ஃபெர்னாண்டெஸ், ஸ்காட் மெக்டோமினே ஆகியோர் கோல்களைப் போட்டனர். ஓலி வாட்கின்ஸ், வில்லாவின் முதல் கோலைப் போட்டார். யுனைடெட்டின் டியோகோ டாலோ சொந்த வலைக்குள் பந்தை அனுப்பியதன் மூலம் வில்லாவிற்கு இரண்டாவது கோலும் கிடைத்தது.
விறுவிறுப்பாக அமைந்தது இந்த லீக் கிண்ண மூன்றாம் சுற்று ஆட்டம். மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கிய யுனைடெட்டின் இளம் அர்ஜெண்டினா வீரர் அலெஹாண்டிரோ கர்னாச்சோ மிகச் சிறப்பாக விளையாடியோரில் ஒருவர்.
இந்த வெற்றியின் வாயிலாக பிரிமியர் லீக்கில் ஏற்பட்ட சிறு பின்னடைவை யுனைடெட் உதறித் தள்ளியது.
பிரிமியர் லீக் ஆட்டத்தில் இடம்பெற்றதைப் போல் இதிலும் வில்லா முன்னுக்குச் சென்றது. இந்த ஆட்டத்தில் 1-0, 2-1 எனும் கோல் கணக்கில் அக்குழு இருமுறை முன்னணியில் இருந்தது.
எனினும், இம்முறை பின்னடைவிலிருந்து மீண்டுவரும் ஆற்றலை நன்கு வெளிப்படுத்தியது யுனைடெட். அதுவே அதற்குப் பிரச்சினையாக இருந்து வந்தது.
ஆட்டத்தின் அனைத்து கோல்களும் பிற்பாதியில் விழுந்தன.
ஈஎஃப்எல் கிண்ணம் என்றும் அழைக்கப்படும் லீக் கிண்ணத்தை யுனைடெட் இதுவரை ஐந்து முறை வென்றிருக்கிறது. கடைசியாக 2017ஆம் ஆண்டு லீக் கிண்ணத்தை வென்றது யுனைடெட்.

