ரியோ டி ஜெனிரோ: வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவிருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பிரேசிலின் முதல் ஆட்டத்தில் தொடக்கத்திலிருந்தே தான் விளையாடுவது உறுதியல்ல என்று கூறியுள்ளார் அதன் நட்சத்திரம் வினிசியஸ். அபாரமான விளையாட்டாளராக இருந்தாலும் அவருக்கே போட்டியாக பிரேசிலில் பல வீரர்கள் இருப்பது இதற்குக் காரணம்.
பிரேசில் அணியில் விளையாட 22 வயது ரியால் மட்ரிட் நட்சத்திரமான வினிசியசுடன் ரிச்சார்லிசன், கேப்ரியல் ஜேசுஸ், கேப்ரியல் மார்ட்டினெல்லி, ஆன்டனி, ரொட்ரிகோ ஆகியோர் போட்டியிடுகின்றனர். அனைவரும் சிறப்பான விளையாட்டாளர்கள்.
இவர்களுடன் மாபெரும் நட்சத்திரமாகக் கருதப்படும் நெய்மாரும் உள்ளார்.
"உலகக் கிண்ணம் என்று வரும்போது அணியினருடன் இைணந்திருந்து ஒருவருக்கொருவர் உதவி செய்ய முயற்சி செய்வதுதான் ஆக முக்கியம்," என்று வினிசியஸ் குறிப்பிட்டார்.
2018ஆம் ஆண்டு வினிசியஸ் ஸ்பெயினின் ரியால் மட்ரிட்டில் சேர்ந்தார். அக்குழுவில் முதலில் தடுமாறிய இவர் சில காலத்திற்குப் பிறகு அபாரமான விளையாட்டாளராக உருவெடுத்தார்.
இந்தப் பருவம் ஸ்பானிய லீக்கில் இதுவரை 10 கோல்களைப் போட்டு ஐந்து கோல்களை உருவாக்கியுள்ளார்.
உலகக் கிண்ணத்தை ஆக அதிக முறை வென்றுள்ளது பிரேசில். எனினும், 2002ஆம் ஆண்டு போட்டிக்குப் பிறகு கிண்ணத்தை வெல்லவில்லை.
2014ஆம் ஆண்டு போட்டியில் சொந்த மண்ணில் களமிறங்கிய பிரேசில், அரையிறுதிச் சுற்றில் ஜெர்மனியிடம் 7-1 எனும் கோல் கணக்கில் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானது.
ரஷ்யாவில் நடைபெற்ற 2018ஆம் ஆண்டு போட்டியில் சற்று மேம்பட்டது. எனினும், காலிறுதிச் சுற்றைத் தாண்டவில்லை.
இந்தப் போட்டியில் 'ஜி' பிரிவில் பிரேசிலுடன் செர்பியா, சுவிட்சர்லாந்து, கெமரூன் ஆகிய அணிகள் இடம்பெறுகின்றன. போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் செர்பியாவைச் சந்திக்கும் பிரேசில்.
எந்த அணியாலும் செய்யமுடியாத காற்பந்து வித்தைகளைச் செய்யக்கூடிய ஒரே அணி பிரேசில் என்ற கருத்து பல காலமாக இருந்து வந்துள்ளது. யாரும் நினைத்துப் பார்க்கமுடியாத வித்தைகளை சிரமமேயின்றி திடலில செய்து காட்டி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துவதுதான் பிரேசிலுக்கு வழக்கமாக இருந்தது.
எனினும், கடந்த சில ஆண்டுகளாக இந்த அணி களையிழந்து காணப்பட்டது. இம்முறையோ பிரேசிலிடம் மீண்டும் பழைய உத்வேகம் பிறந்துள்ள சில அறிகுறிகள் தென்படுகின்றன. மறுபடியும் காற்பந்து சாகசங்களைப் படைக்கக்கூடிய ஆற்றல் இதனிடம் தெரிகிறது.
லத்தீன் அமெரிக்க கண்டத்திற்கான உலகக் கிண்ணத் தகுதியாட்டங்களில் பிரேசில் சிறப்பாக விளையாடி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. 18 தகுதியாட்டங்களில் ஓர் ஆட்டத்திலும் தோல்வியடையவில்லை பிரேசில். எனினும், பல வேளைகளில் தகுதியாட்டங்களைக் கொண்டு போட்டியில் அணிகள் எவ்வாறு விளையாடும் என்பதைக் கணிக்கமுடியாது.
அதே வேளையில், திடலில் பிரேசிலால் என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதை யாராலும் சொல்லமுடியாது.

