பாரிஸ்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் நடப்பு வெற்றியாளரான பிரான்ஸ், முதன்முதலில் 1998ஆம் ஆண்டு சொந்த மண்ணில் கிண்ணத்தைக் கைப்பற்றியது. அப்போதிருந்துதான் தேசிய அணிகளில் ஆகச் சிறந்த ஒன்றாக உருவெடுத்தது.
அதற்குப் பிறகு 2002ஆம் ஆண்டுப் போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேறியது. அதற்குப் பிறகு 2006ஆம் ஆண்டுப் போட்டியில் இறுதியாட்டத்திற்கு முன்னேறி அதில் இத்தாலியிடம் தோல்வி அடைந்தது.
பின்னர் 2010ஆம் ஆண்டுப் போட்டியில் முதல் சுற்றில் வெளியேறியது.
கடந்த 24 ஆண்டுகளில் ஒவ்வொரு முறையும் உலகக் கிண்ணப் போட்டியின் இறுதியாட்டத்திற்கு முன்னேறிய பிறகு அடுத்த போட்டியில் முதல் சுற்றில் வெளியேறி இருக்கிறது பிரான்ஸ். அதனால் சென்ற போட்டியை வென்ற பிறகு இவ்வாண்டுப் போட்டியிலும் அவ்வாறு நிகழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் பிரான்ஸ்.
எனினும், அவ்வாறு நிகழ வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அண்மைக் காலமாக அணி சரியாக விளையாடாமல் இருப்பது, பாலியல் ரீதியான முறையற்ற நடவடிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள் உள்ளிட்டவை அதற்கான காரணங்கள்.
இதனால் பிரான்ஸ் அணி சீராக இல்லை என்ற உணர்வு நிலவுகிறது. அதோடு, 2006, 2010, 2014ஆம் ஆண்டுப் போட்டிகளில் கிண்ணத்தை வென்ற அணிகள் அடுத்த போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேறின.
கடந்த 60 ஆண்டுகளாக உலகக் கிண்ணப் போட்டியின் நடப்பு வெற்றியாளர் அணி எதுவும் கிண்ணத்தை வென்றதில்லை. கடைசியாக 1962ஆம் ஆண்டில்தான் அந்நிகழ்வு இடம்பெற்றது.
1958ஆம் ஆண்டுப் போட்டியில் கிண்ணத்தை வென்ற பிரேசில் 1962ஆம் ஆண்டுப் போட்டியிலும் வெற்றி வாகை சூடியது.
கடந்த ஆறு ஆட்டங்களில் பிரான்ஸ் ஒன்றில் மட்டும் வென்றுள்ளது. ஆறு நேஷன்ஸ் லீக் ஆட்டங்களில் ஐந்தே புள்ளிகளை எடுத்தது.
சென்ற ஆண்டு நடைபெற்ற யூரோ 2020 போட்டியிலும் இரண்டாம் சுற்றிலேயே வெளியேறியது பிரான்ஸ்.
வரும் சனிக்கிழமை தொடங்கும் உலகக் கிண்ணப் போட்டியின் 'டி' பிரிவில் இடம்பெறுகிறது பிரான்ஸ். டென்மார்க், ஆஸ்திரேலியா, துனிசியா ஆகிய அணிகளும் இப்பிரிவில் உள்ளன.
அடுத்த புதன்கிழமையன்று இவ்வாண்டு உலகக் கிண்ணப் போட்டியின் தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகக் களமிறங்குகிறது பிரான்ஸ்.

