தோஹா: இவ்வாண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்தும் பொறுப்பு கத்தாரிடம் வழங்கப்பட்டிருக்கக்கூடாது என்று ஜெர்மனியின் முன்னாள் அணித் தலைவர் ஃபிலிப் லாம் கூறியுள்ளார்.
"உலகக் கிண்ணப் போட்டியை ஏற்று நடத்தும் பொறுப்பை கத்தாரிடம் வழங்கியது ஒரு தவறு," என்று ஜெர்மனியின் 'டி ஸீட்' செய்தித்தாளில் எழுத்து வடிவில் கருத்துகளைத் தெரிவித்தார் லாம். "போட்டி அங்கு நடைபெறக்கூடாது," என்றும் அவர் சொன்னார்.
மனித உரிமை விவகாரங்கள், ஓரினக் காதலர்களுக்கான உரிமைகள் ஆகியவற்றின் தொடர்பில் கத்தாரில் இருக்கும் சட்டங்களின் தொடர்பில் சர்ச்சை இருந்து வந்துள்ளது.
அதனால் உலகக் கிண்ணப் போட்டி அந்நாட்டில் நடத்தப்படுவதை எதிர்த்து அணிகள் மட்டுமின்றி விளையாட்டாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட்டின் போர்ச்சுகல் நட்சத்திரம் புரூனோ ஃபெர்னாண்டசும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
கத்தாரில் விளையாட்டரங்குகளைக் கட்டும் பணியில் ஈடுபட்ட வெளிநாட்டு ஊழியர்களில் சிலர் மரணமடைந்தனர். அது உள்ளிட்ட விவகாரங்களைக் கருத்தில்கொண்டு கத்தாரில் போட்டியை நடத்துவது சரிதானா என்று ஃபெர்காண்டஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

