செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read

'நெய்மார் சிறந்த நட்சத்திரம்தான்'

ரியோ டி ஜெனிரோ: யாருக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் பிரேசில் காற்பந்து அணியின் நெய்மார் (படம்) தனிச்சிறப்புமிக்க நட்சத்திரம்தான் என்று மற்றொரு பிரேசிலிய வீரரான ரிச்சார்லிசன் ஆணித்தரமாகக் கூறியுள்ளார். நெய்மாரை முன்னுதாரணமாகக் கருதுபவர் ரிச்சார்லிசன்.

வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய தொடரின் ஓர் அங்கமாக ரிச்சார்லிசன் யூரோஸ்போர்ட் ஊடகத்திடம் இவ்வாறு கூறினார்.

பிரேசுலுக்காக இதுவரை 75 கோல்களைப் போட்டுள்ளார் நெய்மார். பிரேசில் அவரை அதிகம் சார்ந்துள்ளது என்றால் அது மிகையில்லை. எனினும், நெய்மாரின் ஆற்றல் தொடர்பில் சில வேளைகளில் சர்ச்சை உருவெடுத்திருப்பதைத் தொடர்ந்து ரிச்சார்லிசன் இவ்வாறு கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெறும்

உலக பில்லியர்ட்ஸ் போட்டி

உலக பில்லியர்ட்ஸ் போட்டி இம்மாதம் சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது. அப்போட்டி முதன்முறையாக தென்கிழக்காசியாவில் அரங்கேறுகிறது.

இம்மாதம் 21ஆம் தேதியிலிருந்து 24ஆம் தேதிவரை போட்டி சிங்கப்பூரில் நடைபெறும். புக்கிட் தீமாவில் உள்ள ரோனி ஓ சலிவன் ஸ்னூக்கர் கல்விக் கழகத்தில் போட்டி இடம்பெறும்.

45 விளையாட்டாளர்கள் போட்டியில் பங்கேற்பர். நடப்பு வெற்றியாளரான பீட்டர் கில்கிறிஸ்ட், உலகத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இங்கிலாந்தின் டேவிட் கோவ்சியர் ஆகியோர் அவர்களில் அடங்குவர்.

போட்டியில் வெற்றியாளருக்கான பரிசுத் தொகை 5,000 பவுண்ட்.