ரியோ டி ஜெனிரோ: பிரேசிலின் தேசிய காற்பந்து அணிக்குக் கடைசியாக உலகக் கிண்ணத்தை வென்றுதந்த பயிற்றுவிப்பாளர் லூயிஸ் ஃபெலிப்பே ஸ்கொலாரி ஓய்வுபெறப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
கடைசியாக 2002ஆம் ஆண்டில் பிரேசில் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. அப்போது ஸ்கொலாரிதான் அதன் பயிற்றுவிப்பாளர்.
கடைசியாக பிரேசிலின் அட்லெட்டிக்கோ பரானெயின்ஸ் குழுவின் பயிற்றுவிப்பாளராக இருந்த ஸ்கொலாரி இருமுறை பிரேசில் அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்தார். எனினும், இரண்டாவது முறையாக பிரேசில் பயிற்றுவிப்பாளராக இருந்தபோது 2014ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் அந்த அணி சொந்த மண்ணில் கிண்ணத்தை வெல்லத் தவறியது.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான செல்சிக்கும் ஸ்கொலாரி சில காலம் நிர்வாகியாக இருந்தார். அதற்கு முன்பு சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு போர்ச்சுகலின் பயிற்றுவிப்பாளராகப் பணிபுரிந்தார்.
ஸ்கொலாரியின் போர்ச்சுகல் 2006ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் அரையிறுதிச் சுற்று வரை சென்றது. அதிலிருந்துதான் கிறிஸ்டியானோ ரொனால்டோ முத்திரை பதிக்கத் தொடங்கினார்.

