செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

நியூசிலாந்து-இந்தியா இடையிலான டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்

வெலிங்டன்: இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடுகிறது. இந்தத் தொடர்களில் ரோகித் சர்மா, விராத் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. டி20 போட்டிக்கு ஹார்திக் பாண்டியாவும் ஒருநாள் போட்டி தொடருக்கு ஷிகர் தவானும் அணித் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று ஆட்டங்கள் கொண்ட டி20 போட்டித் தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது. இரண்டாவது ஆட்டம் 20ஆம் தேதியும் மூன்றாவது ஆட்டம் 22ஆம் தேதியும் நடைபெறுகின்றன. மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் 25ஆம் தேதி தொடங்குகிறது.

ஸ்ரீகாந்த்: இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்களும் ஆல்ரவுண்டர்களும் அவசியம் என்று இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். அடுத்த டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியின் தலைவராக ஹார்திக் பாண்டியாவை நியமிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் வீரர்களுக்கு

மேத்யூ ஹெய்டன் புகழாரம்

இஸ்லாமாபாத்: அண்மையில் நடந்த முடிந்த டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் பின்னடைவுகளைச் சந்தித்தபோதிலும் மனந்தளராமல் தொடர்ந்து போராடிய பாகிஸ்தான் இறுதி ஆட்டம் வரை சென்றது. இறுதி ஆட்டத்தில் அது இங்கிலாந்திடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றபோதிலும் அந்த அணியின் பந்தடிப்புப் பயிற்றுவிப்பாளர் மேத்யூ ஹெய்டன் மனநிறைவுடன் இருக்கிறார்.

தமது ஆட்டக்காரர்கள் விடாமுயற்சியுடன் விளையாடி முத்திரை பதித்துள்ளதாக அவர் புகழாரம் சூட்டினார். பாகிஸ்தான் அணி இறுதி ஆட்டம் வரை செல்லும் என யாரும் எதிர்பார்க்கவில்லை என்றார் அவர்.

ஆனால் எதிர்பாராத ஒன்றைத் தமது அணி செய்து முடித்திருப்பதைப் பற்றி நினைக்கும்போது வியப்பாக உள்ளது என்றார் மேத்யூ ஹெய்டன்.

இந்நிலையில், இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டி பாகிஸ்தானுக்குச் சாதகமாக இருக்கும் என்றார் அவர். தமது அணி பல இளையர்களைக் கொண்டுள்ளது என்றும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கிடைத்த அனுபவம் அவர்களுக்குக் கைகொடுக்கும் என்றும் மேத்யூ ஹெய்டன் கூறினார். இப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.