தோஹா: உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் அர்ஜெண்டினாவின் வெற்றி வாய்ப்புகள் குறித்து அதன் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி எச்சரிக்கையுடன் இருக்கிறார்.
வலிமைவாய்ந்த குழுக்கள் சில சமயங்களில் மெத்தனத்துடன் இருப்பதுண்டு.
அதன் காரணமாகவே சறுக்கல்கள் ஏற்படும் அபாயங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே.
இதை அனுபவம் வாய்ந்த மெஸ்ஸியும் நன்கு புரிந்துவைத்துள்ளார்.
எனவே, கிண்ணத்தை ஏந்தும் ஆசை அதிகம் உள்ளபோதிலும் அவசரப்படாமல், நிதானம் இழக்காமல் ஒவ்வோர் ஆட்டத்திலும் தமது குழு கவனம் செலுத்தப்போவதாக அவர் தெரிவித்தார்.
அர்ஜெண்டினா 'சி' பிரிவில் இடம்பெறுகிறது. முதல் சுற்று ஆட்டத்தில் அது சவூதி அரேபியா, மெக்சிகோ, போலந்து ஆகிய குழுக்களுடன் மோதும்.
1978, 1986ஆம் ஆண்டுகளில் உலகக் கிண்ணத்தை வென்று, 1990, 2014ஆம் ஆண்டுகளில் இறுதி ஆட்டம் வரை சென்ற அர்ஜெண்டினாவால் இக்குழுக்களை எளிதில் வெல்ல முடியும் என்று பார்ப்பவர் மனதில் தோன்றக்கூடும்.
ஆனால், காற்பந்தாட்டங்களில் பலம் பொருந்திய குழுக்களின் கவனம் சிதறினால், கண்ணிமைக்கும் நேரத்தில் நினைத்துப் பார்க்காததும் நடக்கக்கூடும்.
"நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம். வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆனால் படிப்படியாகச் செல்லத் திட்டமிட்டுள்ளோம். உலகக் கிண்ணப் போட்டியில் எளிதான ஆட்டம் என்பது கிடையாது," என்று மெஸ்ஸி தெரிவித்தார்.
கிண்ணம் வெல்லும் வாய்ப்பு பிரேசில், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய குழுக்களுக்கும் அதிகம் இருப்பதாக அவர் கூறினார்.

