உலகப் பூப்பந்து இறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ள முதல் சிங்கப்பூரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் லோ கியன் இயூ.
ஆஸ்திரேலிய பொதுவிருதுப் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் அந்நாட்டைச் சேர்ந்த லோவ் பிட் செங்கை 21-10, 21-9 எனும் புள்ளிக் கணக்கில் வென்றார் லோ. உலகப் பூப்பந்துத் தரவரிசையில் 427வது இடத்தில் இருக்கும் லோவ் பிட் செங்கை வென்றது சிங்கப்பூரின் லோ கியன் இயூவிற்கு சாதாரணமானதுதான். ஆனால், அதுவே இந்தப் பூப்பந்துப் பருவத்தின் உலகப் பூப்பந்து இறுதிப் போட்டிகளில் அவர் இடம்பெறுவதை உறுதிசெய்தது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருக்கும் 'குவே சென்டர்' அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் 26 நிமிடங்களில் வெற்றி கண்டார் லோ.
உலகப் பூப்பந்து இறுதிப் போட்டிகள் முதலில் சீனாவின் குவாங்ஸூ நகரில் அடுத்த மாதம் 14ஆம் தேதியிலிருந்து 18ஆம் தேதிவரை நடைபெறவிருந்தது. நேற்று முன்தினம் போட்டிகள் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கிற்கு இடம் மாற்றப்பட்டன.
அதோடு, போட்டிகள் திட்டமிடப்பட்டதற்கு சற்று முன்னரே அடுத்த மாதம் ஏழாம் தேதி முதல் 11ஆம் தேதிவரை நடைபெறும்.
பூப்பந்து ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் ஆகச் சிறந்த எட்டு வீரர்கள் இறுதிப் போட்டிகளில் களமிறங்குவர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலக வெற்றியாளரும் ஒலிம்பிக் வெற்றியாளருமான டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்சன், தைவானைச் சேர்ந்த சுவோ தியென்-சென், இந்தியாவின் எச். எஸ் பிரானோய், இந்தோனீசியர்கள் ஜோனதன் கிரிஸ்டி, ஆன்டனி சினிசுக்கா கின்டிங், ஜப்பானைச் சேர்ந்த கோடாய் நாராவோக்கா ஆகியோர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டிகளில் களமிறங்கவுள்ள மற்ற வீரர்கள்.
ஆஸ்திரேலியப் பொதுவிருதின் இரண்டாம் சுற்றில் இன்று சீனாவின் லி ஷிஃபெங்கைச் சந்திக்கவுள்ளார் லோ.
"முதன்முதலில் சாதனைகளைப் படைப்போரை மக்கள் என்றுமே நினைவுகொள்வர். அதனால் மீண்டும் வரலாறு படைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது, மற்றவர்களை ஊக்குவிக்கும் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்," என்று லோ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
அண்மையில் உலகத் தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார் லோ.

