செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read

'ரொனால்டோ யுனைடெட்டில் இருக்கமாட்டார்'

மான்செஸ்டர்: காற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இவ்வாண்டின் உலகக் கிண்ணப் போட்டி நிறைவடைந்த பிறகு இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட்டில் இடம்பெறமாட்டார் என்று அக்குழுவின் விளையாட்டாளர்கள் எதிர்பார்ப்பதாக சில தகவல்கள் கூறுகின்றன.

37 வயது ரொனால்டோ, யுனைடெட் பயிற்றுவிப்பாளர் எரிக் டென் ஹாக், அக்குழுவின் நிர்வாகத் தலைவர்கள் உள்ளிட்டோரைக் கடுமையாகத் தாக்கிப் பேசிய நேர்காணலின் காட்சிகள் சில நாள்களுக்கு முன்பு வெளியாயின. பெரும் சர்ச்சையைக் கிளப்பிய அந்த நேர்காணலால் யுனைடெட்டில் ரொனால்டோவின் வருங்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

பெண்ணைத் தாக்கிய முன்னணி அம்பெய்தல் வீரருக்குத் தடை

டாக்கா: பங்ளாதேஷின் முன்னணி அம்பெய்தல் வீரரான ருமான் ஷானாவிற்கு (படம்) அந்நாடு தடை விதித்துள்ளது. பயிற்சி முகாமில் சக வீராங்கனை ஒருவரைத் தாக்கியதற்காக ஷானாவிற்கு ஈராண்டுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்ற அந்த வீராங்கனையை ஷானா தாக்கியதாக பங்ளாதேஷ் அம்பெய்தல் சம்மேளனத்தின் செயலாளர் காஸி ரஸிபுதீன் அகமது, ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்ளாதேஷுக்குப் பதக்கம் வென்று தரவல்ல ஒரே வீரராகக் கருதப்படுபவர் ஷானா.