தோஹா: பிரெஞ்சுக் காற்பந்துக் குழுவின் புதிய தலைமுறை இனி கிலியன் எம்பாப்பே தலைமையில்தான் இருக்கும் என்று அதன் தற்போதைய தலைவர் ஹியூகோ லோரிஸ், 36, தெரிவித்திருக்கிறார்.
அர்ஜென்டினாவிற்கு எதிரான உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் 'ஹாட்ரிக்' கோலடித்தார் எம்பாப்பே. உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் இச்சாதனையை நிகழ்த்திய இரண்டாவது வீரர் இவர்தான். அத்துடன், பெனால்டி வாய்ப்புகளிலும் பந்தை வலைக்குள் உதைத்தார் எம்பாப்பே.
இந்நிலையில், சாதனை அளவாக பிரான்ஸ் அணிக்காக 145 போட்டிகளில் விளையாடியுள்ள லோரிஸ், இந்த உலகக் கிண்ணத் தொடரில் எம்பாப்பே வலுவான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினார் என்றும் இறுதிப் போட்டியில் அது மேலும் உறுதிப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.
போட்டியை லுசெய்ல் அரங்கின் பார்வையாளர் பகுதியில் நேரில் கண்டுகளித்து, தமது அணியை ஊக்குவித்தார் பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன்.
தமது அணி வெற்றிபெறாததில் வருத்தமிருந்தாலும் அதனை வெளிக்காட்டாத திரு மெக்ரோன், சோகத்தில் இருந்த எம்பாப்பே உள்ளிட்ட பிரெஞ்சு வீரர்களை நேரில் கண்டு ஆறுதல் கூறினார்.
"எம்பாப்பே மிகச் சிறந்த வீரர். இளம் வீரரான அவருக்கு இன்னும் காலம் இருக்கிறது என்பதை நினைவூட்டினேன். 23 வயதில் அவர் உலகக் கிண்ணத் தொடரில் அதிக கோலடித்துள்ளார்; இதற்குமுன் ஒருமுறை கிண்ணம் வென்றுள்ளார். அவரைப்போலவே எனக்கும் வருத்தம் இருந்தாலும் அவரால் நாங்கள் அனைவரும் பெருமையடைவதாக அவரிடம் சொன்னேன்," என்றார் திரு மெக்ரோன்.

