'இன்னும் 15-20 ஆண்டுகளில் ஆப்பிரிக்க அணி உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றும்'

'இன்னும் 15-20 ஆண்டுகளில் ஆப்பிரிக்க அணி உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றும்'

2 mins read

ரபாட்: அடுத்த 15-20 ஆண்­டு­களில் ஆப்­பி­ரிக்க அணி ஒன்று உல­கக் கிண்­ணக் காற்­பந்­தில் வாகை சூடும் என்­று மொரோக்கோ அணி­யின் பயிற்­று­விப்­பா­ளர் வலீத் ரெக்­ரகி நம்­பிக்கை தெரி­வித்­து உள்­ளார்.

அண்­மை­யில் கத்­தா­ரில் நடந்த உல­கக் கிண்­ணத் தொட­ரில் மொரோக்கோ அணி நான்­கா­ம் இ­டத்­தைப் பிடித்­தது. உல­கக் கிண்ணக் காற்­பந்­தில் அரை­யி­று­திக்கு முன்­னே­றிய முதல் ஆப்­பிரிக்க அணி என்ற சாத­னை­யை­யும் அவ்­வணி படைத்­தது.

அடுத்த உல­கக் கிண்­ணத் தொடரை அமெ­ரிக்கா, மெக்­சிகோ, கனடா ஆகிய மூன்று நாடு­கள் இணைந்து 2026ஆம் ஆண்டில் நடத்­த­வுள்­ளன. அப்­போட்­டித் தொட­ரில் பங்­கேற்­கும் அணி­க­ளின் எண்­ணிக்கை 32லிருந்து 48ஆக உயர்த்­தப்­ப­ட­ உள்­ளது. குறைந்­தது ஒன்­பது ஆப்பி­ரிக்க அணி­க­ளுக்கு அத்­தொ­ட­ரில் விளை­யாட வாய்ப்பு கிடைக்­கும்.

"ஆப்­பி­ரிக்­கா­விலிருந்து ஒன்­பது அணி­கள் பங்­கேற்­கும்­போது, நாங்­கள் நிறைய கற்­றுக்­கொள்­வோம். அப்­ப­டிக் கற்­றுக்­கொண்­ட­பின், இன்­னும் 15-20 ஆண்­டு­களில் ஆப்­பிரிக்க அணி ஒன்று உல­கக் கிண்­ணத்தை வெல்­லும் என்று உறு­தி­யாக நம்­பு­கி­றேன்," என்று ரெக்­ரகி தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

நடந்து முடிந்த உல­கக் கிண்­ணத் தொட­ரில் எஃப் பிரி­வில் முத­லி­டம் பிடித்த மொரோக்கோ அணி, இரண்­டாம் சுற்­றில் ஸ்பெ­யி­னை­யும் காலி­று­தி­யில் போர்ச்சு­கலை­யும் தோற்­க­டித்து, காற்­பந்து உலகை வியப்­பில் ஆழ்த்­தி­யது.

"எங்­க­ளது செயல்­பாடு எதிர்­பார்ப்பை விஞ்­சு­வ­தாக இருந்­தது. முன்­ன­ணிக் குழுக்­க­ளுக்கு நிக­ராக எங்­க­ளால் விளை­யாட முடி­யும் என்­ப­தைக் காட்­டி­யுள்­ளோம். சிறு சிறு நுணுக்­கங்­களே ஆட்­டத்­தின் முடி­வைத் தீர்­மா­னிக்­கின்­றன," என்று ரெக்­ரகி கூறி­னார்.

தங்­க­ளது அணிக்­குச் சிறப்­பான எதிர்­கா­லம் உள்­ள­தா­கக் குறிப்­பிட்ட இவர், ஒரு நாள் உல­கக் கிண்­ணத்தை வெல்ல வேண்­டும் என்­பதே தங்­கள் நோக்­கம் என்­றும் சொன்­னார்.