தோஹா: லயனல் மெஸ்ஸியின் உலகக் கிண்ண வெற்றிப் புகைப்படம் இன்ஸ்டகிராம் சமூக ஊடகத்தில் கிட்டத்தட்ட 59 மில்லியன் பேரை ஈர்த்துள்ளது (நேற்றிரவு 9 மணி நிலவரம்). விளையாட்டு வீரர்கள் இன்ஸ்டகிராமில் பதிவிட்ட படங்களில் எதுவும் இதற்குமுன் இந்த அளவிற்கு விருப்பக்குறி பெற்றது இல்லை.
இறுதிப் போட்டியில் பிரான்ஸ் காற்பந்துக் குழுவை வென்றபின், 'உலக வெற்றியாளர்கள்!' எனும் தலைப்பில் அர்ஜென்டினா அணித் தலைவர் மெஸ்ஸி தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் சில படங்களைப் பகிர்ந்துகொண்டார்.
மெஸ்ஸியின் இன்ஸ்டகிராம் பக்கத்தை 400 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
லூயி விட்டோ நிறுவன விளம்பரத்திற்காகத் தாமும் மெஸ்ஸியும் சதுரங்கம் விளையாடுவதுபோன்று கிறிஸ்டியானோ ரொனால்டோ தம் இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த படத்திற்கு ஏறத்தாழ 42 மில்லியன் பேர் விருப்பக்குறியிட்டிருந்ததே முன்னைய சாதனை.

