கவரட்டி (லட்சத்தீவு): அர்ஜென்டினா காற்பந்து அணித்தலைவர் லயனல் மெஸ்ஸிக்கு இந்தியாவின் கேரள மாநிலத்தில் பெரும் ரசிகர் கூட்டம் இருப்பது தெரிந்த செய்திதான். உலகக் கிண்ணத்தை அர்ஜென்டினா வென்றதும் அவரின் ரசிகர் படை கேரளத் தெருக்களில் இறங்கி மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் இறங்கினர்.
இந்நிலையில், மெஸ்ஸிமீது தாங்கள் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக நான்கு மீட்டர் உயரத்துடன் அவரது முழு உருவம் தாங்கிய பதாகையை அரபிக்கடலில் 100 அடி ஆழத்தில் பவளப் பாறைகளுக்கும் பாறைத் திட்டுகளுக்கும் இடையில் அவர்கள் வைத்துள்ளனர்.
லட்சத்தீவுகளின் கவரட்டி பகுதியைச் சேர்ந்த சாகச முக்குளிப்பாளர்கள் கடலுக்குள் குதித்து, மெஸ்ஸியின் பதாகையை நிறுவும் காணொளி இன்ஸ்டகிராம் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டுள்ளது. இக்காணொளியை லட்சத்தீவு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது ஃபைஸலும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இதனிடையே, உலகக் கிண்ணத் தொடரில் தங்கள் அணிக்கு அளித்த பேராதரவிற்காக இந்தியா, பங்ளாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ரசிகர்களுக்கு அர்ஜென்டினா காற்பந்துச் சங்கம் டுவிட்டர் வழியாக நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளது.

