மற்றவர் வெற்றியில் மகிழ்ச்சி காண்போம்

மற்றவர் வெற்றியில் மகிழ்ச்சி காண்போம்

2 mins read
33d61dce-2104-45f7-aff6-e16538c1f469
-

மற்­ற­வர்­கள்­அ­டைந்த வெற்­றிக்கு மகி­ழும் மனம் எல்­லா­ருக்­கும் வாய்த்­து­வி­டு­வ­தில்லை.

சொல்­லப்­போ­னால் அடுத்­த­வர் தோல்வி அடைந்­தாலோ துன்­புற்­றாலோ உள்­ளூர மகி­ழும் குணம் கொண்­ட­வர்­களும் இருக்­கி­றார்­கள்.

இத்­த­கை­யோரை ஆங்­கி­லத்­தில் 'ஷாடன்­ஃபி­ராய்டெ' என்று குறிக்­கி­றார்­கள். ஜெர்­மா­னிய வேர்ச்­சொற்­க­ளைக்கொண்ட இச்­சொல்­லின் பொருள், துன்பத்­தில் மகிழ்ச்சி அடை­தல்.

இதற்கு நேர்மாறான சொல்­லாக 'ஃபிராய்­டென்ஃபி­ராய்டெ' என்ற பதத்தைச் சமூக அறி­வி­ய­லா­ளர்­கள் பயன்படுத்து­கி­றார்­கள்.

வெற்றி பெற்ற ஒரு­வ­ரின் மகிழ்ச்­சி­யில் நாமும் மகிழ்ச்சி அடை­தலை இது குறிக்­கிறது.

எடுத்­துக்­காட்­டாக, கார் ஓட்­டும் உரி­மத்துக்கான தேர்­வில் தேர்ச்சி பெற்ற ஒருவர் சக ஊழியரிடம் அத்தகவலைப் பகிர்ந்து­கொள்­கிறார். அதைக் கேட்­ட­வரோ பல முறை முயன்று தோற்றவர்.

அவ­ரால் இவர் முதல் முயற்­சி­யி­லேயே வெற்­றி­பெற்­றதை ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை என்­றால் அவர் 'ஷாடன்­ஃபி­ராய்டெ' வகை­யைச் சேர்ந்­த­வர். ஆனால் தனது மன­வ­ருத்­தத்தை ஒரு­பு­றம் ஒதுக்கி­விட்டு, "இவ­ரால் வெற்­றி­பெற முடி­யு­மென்­றால் என்­னா­லும் முடி­யும்," என்று அதையே உந்­து­சக்தி­யாக எடுத்­துக்­கொண்டு செயல்­பட்­டாரேயானால் அவர் 'ஃபிராய்­டென்ஃபி­ராய்டெ' வகை­யைச் சேர்ந்­த­வர்.

இப்பண்­பி­னால் ஒரு­வர் மன­நி­றைவு பெற்­ற­வ­ரா­க­வும் மீள்­தி­றன் மிக்­க­வ­ரா­க­வும் கருத்து மோதல்­கள் நிக­ழும்­போது பிற­ரது ஒத்­து­ழைப்­பைப் பெறு­ப­வ­ரா­க­வும் இருப்­பார் எனக் கூறப்­ப­டு­கிறது.

முத்­தாய்ப்­பாக மகிழ்ச்சி என்­பது எங்­கி­ருந்தோ அல்­லது எவ­ரி­ட­மிருந்தோ நாம் பெறு­வது அல்ல. நாம்­தான் அதை உரு­வாக்­க­வேண்­டும் என்கின்றனர் ஆய்­வா­ளர்­கள்.

அது மிக­வும் எளிது. அடுத்து நீங்­கள் சந்­திக்­கும் நண்­ப­ரி­டம், "இந்த வாரம் உங்­க­ளுக்கு நடந்த நல்­ல­தைப் பகி­ருங்­கள்," என்று கேட்­டுப் பாருங்­கள். அவர் பகி­ரும்­போது மன­தார மகிழ்ச்சி அடை­யுங்­கள்.

மகிழ்ச்சி ஏணி­யில் நீங்கள் உயர்­வ­தைத் தடுக்க யாரா­லும் முடி­யாது என்கின்றனர் வல்லுநர்கள்.