எத்தனை வயதானாலும் மனம் இருந்தால் மகிழ்ச்சியோடு பயனுள்ள வாழ்க்கையை வாழலாம் என்பதற்கு முன்னுதாரணம் 85 வயது திருவாட்டி ரத்னம் பெரியசாமி.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் காலமாகிவிட்டார். இவருக்கு ஐந்து பிள்ளைகள். முடிந்தவரையில் யாரையும் சார்ந்திருக்கக்கூடாது என நினைக்கும் இவர் வாம்போவில் தனியாக வசிக்கிறார். கொவிட்-19 தொற்றுநோய் பரவல் காலத்தில் மட்டும் தோ பாயோவில் வசிக்கும் இளைய மகன் வீட்டில் அடிக்கடி சென்று தங்கினார்.
புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வது, தமது வட்டாரத்தில் வசிக்கும் முதியோருக்கு உதவுவது, சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவது, சமூக மன்றத்தில் தொண்டாற்றுவது என்று வாழ்வின் ஒவ்வொரு நாளையும் அர்த்தமுள்ளதாக்குகிறார். வாம்போ வட்டாரத்தில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்காக குரல் கொடுப்பவர்.
சாவ் அறக்கட்டளை மேற்கொள்ளும் பல்வேறு சமூக நிகழ்ச்சிகளில் தொண்டூழியராகச் செயல்படும் இவர் அந்த அறக்கட்டளையின் முக்கிய முகங்களில் ஒன்று.
வெற்றிகரமான முதுமைக்கான குழுவின் (காம்எஸ்ஏ) 'கிளப் மேட்' என்ற முதியோரை சமூக, விளையாட்டு நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்துவதற்கான தொடக்கவிழாவில் ஆங்கிலத்தில் பேசி சிறப்பாக அந்நிகழ்ச்சியை வழிநடத்தினார் திருவாட்டி ரத்னம்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வாம்போ சமூக மன்றத்தில் நடந்த அந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெங் சீ ஹவ் உள்பட நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களை மேடைக்கு அழைப்பதிலிருந்து நிகழ்ச்சியை நம்பிக்கையோடும் திறம்படவும் நடத்தினார்.
சில வாரங்களுக்குப் பிறகு, பாங்காக்கில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் ஆசியா மற்றும் பசிபிக் வட்டாரத்துக்கான பொருளியல், சமூக ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்க சிங்கப்பூரை பிரதிநிதித்துச் சென்ற சாவ் அறக்கட்டளைக் குழுவில் இடம்பெற்றார்.
அங்கு அவர் சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், நேப்பாளம், வியட்னாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முதியோருடன் மூப்படைதல் தொடர்பான மாட்ரிட் அனைத்துலக செயல் திட்டத்தின் நான்காவது மறுஆய்வு, மதிப்பீடு குறித்து நடைபெற்ற ஆசிய பசிபிக் அரசாங்கங்களுக்கிடையேயான கூட்டத்தில் பகிர்ந்தார்.
திருவாட்டி ரத்னமும் அவரது சகாக்களும் தங்கள் வாழ்க்கை அனுபவங்கள், விருப்பங்கள், சவால்களைப் பற்றிப் பேசினர்.
திருவாட்டி ரத்னம் சிங்கப்பூரிலும் வாம்போ வட்டாரத்திலும் வசிக்கும் முதியவர்களின் சவால்களைப் பகிர்ந்துகொண்டார். மேலும், நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள், தனிநபர்களை மூத்த தலைமுறையினரின் குரல்களைக் கேட்டு, அதற்கு ஆவன செய்ய நேரம் ஒதுக்குமாறு வலியுறுத்தினார்.
ஐம்பது வயதைக் கடந்தோரிடம் முதுமைக் காலத்துக்கு திட்டமிட அறிவுறுத்தினார்.
வயதான காலத்தில் புதிய புதிய தொடர்புகளை ஏற்படுத்த முடியும் என்பதற்கு திருவாட்டி ரத்னம் எடுத்துக்காட்டாக உள்ளார். தமது 80 வயதுகளில் சாவ் அறக்கட்டளையின் திருவாட்டி தெரேசா டானுடன் நட்புக்கொண்ட இவர், அவருடன் இணைந்து வாம்போ சமூக மன்றத்தின் தீபாவளிக் கொண்டாட்டம் உள்பட பல நடவடிக்கைகளில் பங்களித்து வருகிறார்.
இவர், இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் தீவிரமாகச் செயல்படுபவர். சாவ் அறக்கட்டளையின் ஃபேஸ் பக்க பிரபலம் இவர்.
மகிழ்ச்சியான முதுமைக் காலம்
சிங்கப்பூர் புள்ளி விவரத் துறையின் புள்ளிவிவரப்படி, மக்களின் சராசரி ஆயுள் காலம் 83.5 ஆண்டுகள் வரை உயர்ந்துள்ளது. இது ஆண்களுக்கு 81.1, பெண்களுக்கு 85.9 ஆகவும் உள்ளது.
இந்த நீண்ட ஆயுளுடன் நிறைவான 100 ஆண்டு வாழ்க்கையை வாழ முந்திய தலைமுறையிடமிருந்து மாறுபட்டு சிந்திக்க வேண்டும். உறவுகள், சேமிப்பு, கல்வி, வேலை போன்றவற்றை முறையாகத் திட்டமிடவேண்டும்.
நீண்டகாலம் நலமாக வாழ நோய்த் தடுப்பும் உடல்நலமும் முக்கியமான பங்கை வகிக்கின்றன.
70 வயதில் நெட்டோட்டம் ஓடுபவர்கள், கிட்டத்தட்ட 81 வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய யுசிச்ரோ மியூரா, சிங்கப்பூரின் ஆக வயதானவர்களில் ஒருவரும் ஆசியாவின் முன்னுதாரண சமூக சேவையாளர்களில் ஒருவருமான தெரேசா சாவ் 47 வயதில் தாதிமைப் படிக்கத் தொடங்கினார்.
பின்னர், வசதி குறைந்த குடும்பங்களுக்கு உணவும் நிதி உதவியும் அளிக்கவும், வயதான நோயாளிகளுக்கான இல்லத்தை அமைக்கவும் 'ஹார்ட் டு ஹார்ட்' எனும் லாப நோக்கமற்ற அமைப்பைத் தொடங்கி, 113 வயதில் மரணமடையும் வரை சேவையாற்றினார்.
திருமதி சாவ் இங் யூ ஷுன், 86 வயதில், முதியோருக்கு பராமரிப்பு, ஆதரவு, வாய்ப்புகளை வழங்குவதன் மூலமும் அவர்களை சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதன் வழியாகவும் முதுமைக் காலத்தை மகிழ்ச்சியானதாக்க சாவ் அறக்கட்டளையை நிறுவினார்.
துடிப்பாகவும் சுதந்திரமாகவும் தன்னூக்கத்தோடும் இருந்தால் சமூகத்திற்கு பங்களிக்க முடியும் என்பதை இந்தப் பெண்கள் தங்கள் வாழ்க்கை நிரூபித்துள்ளனர்.
ஓய்வு பெறும்போது வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை, ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது.
-சூசனா கன்கார்டோ ஹார்டிங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சில் எழுதிய கட்டுரையிலிருந்து.

