பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் எழுதிய பேராசிரியர் ஹெரால்ட் ஷிஃப்மன் காலமானார்

பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் எழுதிய பேராசிரியர் ஹெரால்ட் ஷிஃப்மன் காலமானார்

3 mins read
bfb37e53-f8ee-48dc-8c24-94931616a09e
-

மேற்கத்திய தமி­ழ­றி­ஞர் பேரா­சி­ரி­யர் ஹெரால்ட் எஃப் ஷிஃப்மன் (படம்) கடந்த புதன்­கி­ழமை, டிசம்­பர் 21ஆம் தேதி அமெ­ரிக்­கா­வில் கால­மா­னார். அவருக்கு வயது 84. அன்­னா­ரது இழப்பு தமிழ்க் ­கல்­வித்துறைக்­கும் மொழி­யி­யல் ஆய்­வு­ல­கிற்­கும் மட்­டு­மன்றி, சிங்­கப்­பூர்த் தமிழ்க்­கல்வி- ஆய்­வுத் துறைக்­கும் பேரி­ழப்­பா­கும். சிங்­கப்­பூர்த் தமிழ்க்­கல்வி உல­கில் அவர் ஏற்­ப­டுத்­திய தாக்­கத்­திற்­கும் தனிச் சிறப்பு உண்டு.

1938ஆம் ஆண்டு பிப்­ர­வரி 19ஆம் தேதி பிறந்த இவர், அமெ­ரிக்கா, ஜெர்­மன் பல்கலைக்கழ கங்­க­ளி­லும் தமி­ழ­கத்­தின் அண்­ணா­மலை பல்­கலைக்க­ழ­கத்­தி­லும் பயின்­ற­வர்.

ஜெர்­மன், பிரெஞ்சு, ஸ்பா­னிஷ், ரஷ்ய மொழி, தமிழ் ஆகிய மொழி­களில் புல­மைத்­து­வம் பெற்ற மொழி­யி­யல் அறி­ஞர்.

தமிழ்­ உள்­ளிட்ட மொழி­கள் குறித்த ஆய்வு நூல்களையும் மிக முக்கியமான ஆய்­வுக் கட்டுரை­க­ளை­யும் எழு­தி­யுள்ள பேரா­சி­ரி­யர் ஷிஃப்மன் தமி­ழி­யல் துறை­யில் பல ஆண்­டு­கள் செய­லாற்றியவர். பேச்­சுத் தமி­ழுக்கு ஆங்­கி­லத்­தில் இவர் எழு­தி­யுள்ள இலக்­கண நூல், (A Reference Grammar of Spoken Tamil)தமி­ழுக்கு மிக முக்­கிய பங்­க­ளிப்­பா­கும்.

அமெ­ரிக்­கா­வின் கலி­ஃபோர்­னியா பல்­க­லைக்­க­ழ­கம், வாஷிங்­டன் பல்­கலைக்­க­ழ­கம் உள்­ளிட்ட பல பல்­கலைக்­க­ழங்­களில் பணி­பு­ரிந்­துள்ள பேரா­சி­ரி­யர் ஷிஃப்மன், 1995 முதல் பென்­சில்­வே­னியா பல்­க­லைக் கழ­கத்­தில் பேரா­சி­ரி­ய­ரா­கப் பணி­யாற்­றினார். அங்கு பல பணி­களை ஆற்­றிய அவர், அங்கு திரா­விட மொழி­கள், கலா­சாரப் பிரி­வின் வாழ்­நாள் பேரா­சி­ரி­ய­ராக இருந்­துள்ளார்.

இவர் 1994இன் தொடக்­கத்­தி­லும் பின்­னர் 2003-2004 கால­கட்­டத்­தி­லும் சிங்­கப்­பூ­ருக்கு மேற்­கொண்ட வரு­கை­களின்­போது தேசி­யக் கல்­விக்­க­ழ­கக் கல்­வி­யா­ளர்­க­ளை­யும் கல்வி அமைச்சின் அதி­கா­ரி­க­ளை­யும் சந்­தித்­தி­ருப்­பது­டன் தர­மான பேச்­சுத்­த­மிழ் குறித்த ஆய்­வுத் திட்­டங்­க­ளுக்­கும் கல்வி அமைச்­சின் தமிழ் மொழி குறித்த பாடத்­திட்ட ஆய்வுக்­கும் மதியுரை­ஞ­ராக விளங்கி­யுள்­ளார். சிங்­கப்­பூ­ரில் அவர் பெற்ற அனு­பவங்­கள் செறி­வு­மிக்­க­தோர் ஆய்­வுக்­கட்­டு­ரையை எழுத வழி செய்தன.

தர­மான பேச்­சுத்­த­மிழ் என்ற தமது தனித்­து­வ­மான ஆய்­வின்­வ­ழியே, பேச்சுத் தமி­ழின் முக்­கி­யத்­து­வத்­தை­யும் அவ­சி­யத்­தை­யும் மெய்ப்­பித்­துள்­ளார்.

தமி­ழ­கம், சிங்­கப்­பூர் ஆகிய நாடு­களி­லும் பிற நாடு­க­ளி­லும் மேற்­கொண்ட நீண்ட நெடி­ய­தோர் ஆய்­வின் கார­ண­மாக அவர் தந்த இந்த ஆய்­வுக்­கொடை பல வகை­களில் சிங்­கப்­பூ­ருக்­குப் பய­ன­ளித்­துள்­ளது என்­ப­து­டன் தொடர்ந்து பய­ன­ளித்து வரு­கிறது.

அவரது அறிவுறுத்தலின் பேரிலேயே பேச்சுத் தமிழ் சிங்கப்பூர் பள்ளிகளில் அறிமுகமானது என்பதைக் குறிப்பிட்டார் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத் தின் இயக்குநர் திரு அருண் மகிழ்நன்.

வேறொரு மொழியை முதன் மொழியாகக் கொண்டிருக்கும் சூழலில், தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழை அறிமுகப்படுத்த பேச்சுத் தமிழிலில் கல்வியைத் தொடங்கலாம் என்று மொழி கற்றலை விருப்பமான ஒன்றாக்குவதில் இவரது ஆய்வும் பரிந்துரையும் பெரும் தாக்கமாக அமைந்தது என்றார் அவர்.

"பேரா­சி­ரி­யர் ஷிஃப்மனை பென்­சில்­வே­னி­யா­வில் சந்­தித்­துச் சிங்­கப்­பூ­ருக்கு வரு­மாறு கேட்­டுக்­கொண்­ட­தைத் தொடர்ந்து, 1990களில் அவர் சிங்­கப்­பூ­ருக்கு வந்­தார். அப்­போது தேசி­யக் கல்­விக்­க­ழ­கத்­தி­லும் கல்வி அமைச்­சி­லும் பள்­ளி­க­ளி­லும் அவர் மேற்­கொண்ட ஆய்­வு­கள் வழி, தர­மான பேச்­சுத்­த­மிழ் சிங்­கப்­பூ­ரில் புழங்­கப்­ப­டு­கிறது என்று தெரி­வித்­துள்­ளார்," என முனை­வர் சுப திண்­ணப்­பன் குறிப்­பிட்­டுள்­ளார்.

சிங்கப்பூரின் பேச்சுத் தமிழ், கற்­ற­வர்­கள் பேசும் வகை என்­ப­து­டன் தமிழை அன்­றா­டம் புழக்­கத்­துக்­குப் பயன்­ப­டுத்தி மகி­ழ­வும் தமிழ் பயி­லும் மாண­வர்­கள் தமிழை நீண்­ட­கா­லத்­துக்­குத் தொடர்ந்து புழங்கவும் வழி­செய்­யும் என்­றும் பேரா­சி­ரி­யர் ஷிஃப்மன் குறிப்பிட்டுள்­ளார்.

பேரா­சி­ரி­யர் ஹெரால்ட் எஃப் ஷிஃப்மன் மனைவி திரு­மதி மெரி­லின் ஷிஃப்மன், மகன் திரு திமோதி ஷிஃப்மன் ஆகி­யோரை விட்­டுச்­சென்­றுள்­ளார்.