காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தவிர்த்து விட்டு தேநீர் குடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. ஒருசிலர் பசிக்கும்போதெல்லாம் பசியை ஆற்ற ஒரு கோப்பை தேநீரைக் குடிப்பார்கள். வெறும் வயிற்றில் பால் சேர்த்த தேநீரைக் குடிப்பதால் உடலில் பல பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. அதனால் அளவுடன் தேநீர் குடிப்பது அவசியம்.
வயிற்று உப்புசம்
பால் போட்ட தேநீரை வெறும் வயிற்றில் அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது, அது வயிற்று உப்புசம் அல்லது வயிற்று வீக்கத்தை ஏற்படுத்தும்.
இதற்கு தேயிலையில் உள்ள கேஃபின் ஒரு முக்கிய காரணம். பாலை கேஃபினுடன் சேர்க்கும் போது இரண்டும் ஒன்றுசேர்ந்து வாயு உற்பத்தியை ஊக்குவிக்கும்.
உடல்வறட்சியால் பல பிரச்சினைகள்
காலையில் தேநீர் குடித்தால்தான் காலைக்கடனை எளிதாகக் கழிக்க முடிவதாக பலர் சொல்வார்கள். ஆனால் அதற்கு மாறாகவும் நடக்கும்.
ஆனால் தேயிலையில் கேஃபின் போலவேஃபில்லைன் எனும் ஊக்கியும் உள்ளது.
இரண்டும் உடலில் தண்ணீர் வறட்சியை ஏற்படுத்தும். அளவுக்கு அதிகமாக தேநீரை வயிற்றில் குடிக்கும்போது, உடலில் தண்ணீர் குறைந்து மலச்சிக்கல் ஏற்படலாம்.
உடல்வறட்சியால் மேற்காணப்பட்ட மலச்சிக்கலுடன் வேறு சில சிக்கல்களும் ஏற்படலாம். அளவுக்கு அதிகமான தேநீர் குடித்துவிட்டு, போதுமான தண்ணீர் குடிக்காமல் இருந்தால் சிறுநீர் தொற்று, சிறுநீரகத்தில் கல் போன்றவை ஏற்படலாம்.
உடலில் ஏற்கனவே நீர்ச்சத்து குறைவாக இருப்பவர்கள், சர்க்கரை சேர்த்த தேநீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம்.
தலைவலி, தூக்கமின்மை
பலருக்கு ஒரு கோப்பை தேநீர்தான் தலைவலிக்கு மருந்து. ஆனால் அதன் அளவு மீறினால் அது உடல் வறட்சிக்கு வழிவகுத்து, தலைவலியை உண்டாக்கும்.
அதிக பதற்றம் இருப்பதாக உணர்பவர்கள் அடிக்கடி தேநீர் குடிப்பதை நிறுத்தினால் நல்லது. உங்களின் பதற்றநிலையில் தேநீருக்கு ஒரு முக்கிய பங்குண்டு. பதற்றநிலையின் அறிகுறிகளை பால் போட்ட தேநீர் தூண்டுவது அதற்குக் காரணம்.
மேலும், தேயிலையில் உள்ள கேப்ஃபின் தூக்க சுழற்சியில் இடையூறை ஏற்படுத்தி, தூக்கத்தைத் தூரத் துரத்தும்.
ஏற்கனவே தூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்கள், பால் சேர்த்த தேநீரை வெறும் வயிற்றில் தவிர்க்கவும்.
ரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கம்
பல நோய்களுக்கு முக்கிய காரணமாக இருக்கும் ரத்த அழுத்த பிரச்சினையைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.
உயர் இரத்த அழுத்தம் இதயநோய்க்கு இட்டுச் செல்லக்கூடியது. அளவுக்கு அதிகமாக தேநீர் குடிப்பதற்கும் இரத்த அழுத்த ஏற்ற இறக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதைத் தவிர்க்க வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

