கடந்த ஏப்ரல் மாதம் செய்துகொண்ட சுகாதாரப் பரிசோதனையின் ஓர் அங்கமாக, என் உடலில் உள்ள கொழுப்பின் அளவு கணக்கிடப்பட்டது.
எனக்கு ஒல்லியான உடல்வாகு. எனது உடல் எடையும் குறைவு. ஆனால் பரிந்துரைக்கப்படும் அளவைக் காட்டிலும் என் உடலில் கொழுப்பின் அளவு கூடுதலாக இருப்பதாகக் கண்டறியப்பட்டபோது அதிர்ந்துபோனேன்.
பரிசோதனை மேற்கொண்ட தாதியே, கருவியில் கோளாறு இருக்கக்கூடும் எனச் சந்தேகித்து மீண்டும் கணக்கிட்டார்.
ஆனால் என் உடலில் கொழுப்பின் அளவு 36 விழுக்காடு எனக் காட்டியது பரிசோதனை முடிவு.
பொதுவாக பெண்களுக்கு இந்த விகிதம் 20 முதல் 32 விழுக்காடு வரையும் ஆண்களுக்கு 10 முதல் 22 விழுக்காடு வரையும் இருந்தால் ஆரோக்கியம் குறித்துக் கவலை இல்லை.
வேடிக்கை என்னவென்றால் எனது தசை அடர்த்தி 18 கிலோகிராம். வழக்கமாக இது 24.4 கிலோகிராம் முதல் 29.8 கிலோகிராம் வரை இருக்கலாம். ஆக எனது தசை அடர்த்தி குறைவு.
மற்றவர் கண்ணோட்டத்தில் ஒல்லிக்குச்சி உடம்புடன் கலோரிகளைப் பற்றிக் கவலைப்படாத பெண்ணாக இருக்கும் நான் என் வாழ்க்கைமுறையை மாற்றவேண்டும் என்று பரிந்துரைத்தார் தாதி.
ஒப்புக்கொள்ளப்பட்ட எடையுடன் உடற்பருமன் கொண்டவர் என்று இதை மருத்துவத்துறையினர் வகைப்படுத்துவர்.
மருத்துவப் பரிசோதனைக்கு முன்பே தனிப்பட்ட பயிற்றுவிப்பாளரை அணுகி உடலுறுதிப் பயிற்சிகளில் ஈடுபடவேண்டும் என்று திட்டமிட்டிருந்த எனக்கு அதை நிச்சயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற உந்துதலை இது தோற்றுவித்தது.
அதேபோல பயிற்றுவிப்பாளரிடம் சென்று எனது வயிற்றுப் பகுதி, தொடைகளில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும் பொதுவாக உடலை உறுதிசெய்யவும் உதவும்படி கோரினேன்.
ஆனால் இது தவறான கருத்து எனப் புரியவைத்தார் எனது பயிற்றுவிப்பாளர். இவ்வாறு குறிப்பிட சில பகுதிகளில் கொழுப்பைக் குறைக்க வேண்டும் என்று அவற்றுக்கான பயிற்சிகளைச் செய்த பலரும் பலனடையவில்லை என்பதும் எனக்குத் தெரியவந்தது.
ஆகவே பயிற்றுவிப்பாளர் எனது உடலுறுதியை மதிப்பிட்ட பிறகு தயாரித்துத் தந்த தனிப்பட்ட உடலுறுதிப் பயிற்சித் திட்டத்தைப் பின்பற்றினேன்.
வாரம் இருமுறை. ஆறு மாதங்களுக்கான உடலுறுதித் திட்டம்.
முதலில் தசை அடர்த்தியை அதிகரிப்பதற்கான உடற் பயிற்சிகள். பின்னர் படிப்படியாக எடை தூக்கும் பயிற்சிகள் என்று திட்டமிட்டுத் தந்தார் பயிற்றுவிப்பாளர்.
இரண்டே வாரங்களில் நல்ல மாற்றம் தெரிந்தது. கடந்த ஈராண்டாய் வீட்டிலிருந்து வேலை பார்த்ததில் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களை மேற்கொண்டிருந்தேன்.
பயிற்றுவிப்பாளர் எனது உணவுப் பழக்கத்தையும் மாற்றச் சொன்னார். மிக முக்கியமாக, வழக்கமாக நான் காலை உணவைப் புறக்கணிப்பேன். ஆனால் அது அவசியம் என்றார் அவர்.
தினமும் உடற்பயிற்சி செய்யத் தயாராக இருந்த நான் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள மிகவும் சிரமப்பட்டேன். ஆரோக்கியத்தைப் பாதிக்கும் உணவுகளை விரும்பினேன்.
ஆனால் உடலுறுதி தொடர்பில் மாற்றத்தை விரும்பினால் இவற்றையெல்லாம் உண்ணக்கூடாது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
சென்ற மாதம் பயிற்சித் திட்டம் நிறைவடைந்தபோது நான் விரும்பியவாறே சரியான உடலுறுதியை அடைந்துவிட்டேன் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
சொல்லப்போனால் இதற்குப் பிறகுதான் எனக்கு உண்மையில் சிக்கல் ஏற்பட்டது. ஏனெனில் இனி பயிற்றுவிப்பாளரின் மேற்பார்வை இன்றி நானே சுயமாக எனது உடலுறுதியைப் பேண வேண்டும்.
ஆனாலும் வாரம் இருமுறை உடலுறுதிக் கூடம் சென்று, ஏற்கெனவே பயின்ற பயிற்சிகளைச் செய்வதையும் வாரத்தில் ஒரு நாள் தீவிரப் பயிற்சி செய்வதையும் நான் வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன்.
ஆறு மாதத்திற்குப் பிறகு மீண்டும் சுகாதாரப் பரிசோதனை செய்ததில் உடலில் கொழுப்பின் அளவு 6 விழுக்காடு குறைந்து 30%ஆக இருந்தது. தசை அடர்த்தியும் மூன்று கிலோகிராம் கூடியிருந்தது.
இத்துடன் இதற்கு முற்றுப்புள்ளி இட முடியாது. இது ஒரு தொடர்ச்சியான பயணம் என்று எனக்குத் தெரியும்.
ஆனாலும் இதைத் தொடர்வதில் உறுதியாக உள்ளேன். ஏனெனில் நான் விரும்பி மேற்கொள்ளும் பயணம் இது.
பருமனாக இருப்போர் உடலில் கொழுப்பின் அளவைக் குறைக்க உடற்பயிற்சி செய்யவேண்டுமென வலியுறுத்தும் பலரும் ஒல்லியாக இருப்பவர்கள் இதுபற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்று கருதுகிறோம். இதன் தொடர்பில் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் அம்ரிதா கோர்.
அம்ரிதா கோர்

