மனிதர்களின் கம்பீரமான தோற்றம், நிமிர்ந்த நடை ஆகியவற்றில் பாதங்களின் பங்கு இன்றியமையாதது.நிற்கும்போதும் நடக்கும்போதும் ஓடும் போதும் உடல் எடை முழுவதையும் பாதங்கள்தான் தாங்குகின்றன.
பாதத்தில் மொத்தம் 28 எலும்புகள், 25 மூட்டுகள், 11 தசைகள் உள்ளன.
இயல்பான பாதங்களின் நடுப்பகுதி சற்று உள்நோக்கி வளைந்திருக்கும். அப்படி இல்லாமல் சமமாக இருந்தால் அவை தட்டைப் பாதங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
நடத்தல், நிற்றல், ஓடுதல் போன்ற செயல்களுக்கு உறுதுணையாக இருப்பது பாதத்தில் உள்ள 'லாங்கிடியூடினல் ஆர்ச்' எனும் வளைவுப் பகுதி. இது உள்பக்கம், வெளிப்பக்கம், முன்பாதத்தின் உள் பக்கம் என மூன்று வகைப்படுகிறது.
பிறக்கும்போது இந்த வளைவு இருக்காது. குழந்தை நடக்க, நடக்க இது ஏற்படும். பல்வேறு காரணங்களால் இந்த வளைவு தட்டையாக மாறுவதையே தட்டைப் பாதம் என்று கூறுகிறோம்.
தட்டைப் பாதமும் பிரச்சினைகளும்
பாதங்கள் தட்டையாக இருந்தால் ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்க முடியாது. மற்றவர்களைப் போல் நடை இயல்பாக இருக்காது.
பாதத்தில் அடிக்கடி வலி ஏற்படும். வேகமாக ஓட முடியாது. விளையாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்பது சிரமம். மலை ஏற முடியாது. கால் மூட்டுகளில் வலி, இடுப்பு வலி, கழுத்து வலி ஏற்படும்.
தட்டையான பாதம் ஏற்படக் காரணங்கள்
பாதங்களை வெளிப்புறமாக வைத்து நடப்பது, முட்டிப் பகுதிகள் இடித்துக்கொள்வது, குதிகால் நரம்பின் நீளம் இயல்பைவிடக் குறைவாக இருப்பது, பிறவியிலேயே பாதிப்பு போன்ற காரணங்களால் தட்டைப் பாதங்கள் ஏற்படுகின்றன.
நீண்ட நாள் படுக்கையில் இருத்தல், பக்கவாதத்தால் பாதிக்கப்படுதல், முதுமை ஆகியவற்றால் தட்டையான பாதங்கள் ஒருவருக்கு ஏற்படக்கூடும்.
சிகிச்சைகள்
அமைப்பு ரீதியான தட்டைப் பாதங்களை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும்.
பழக்க வழக்கங்களால் ஏற்படும் தட்டைக் கால்களை உடற்பயிற்சி, மின்தூண்டல் மூலம் தசைகளை வேலைசெய்ய வைத்தல், மெழுகு ஒத்தடம் என சில சிகிச்சை முறைகள் மூலம் சீராக்க முடியும்.
கால் விரல்களை சுருக்கி நீட்டுதல், கட்டை விரலால் எண்களை எழுத்துகளை எழுதுதல். கால் விரலால் ஒரு பொருளை கவ்வித் தூக்குதல், மணலில் நடத்தல், தடிமனான குச்சியைக் கால்களால் உருட்டுதல், முன்காலில் நிற்றல் ஆகிய பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவந்தால் படிப்படியாக பாதங்களில் போதிய அளவு வளைவு ஏற்படும்.
தகவல், படம்: இணையம்

