நம் அன்றாட வாழ்க்கையின் பெரும்பகுதியை கைப்பேசிகளும் மடிக்கணினிகளும் திரைகள் உள்ள வகைவகையான சாதனங்களும் எடுத்துக்கொண்டுள்ளன. வேலைக்காகவும் பொழுதுபோக்கு காரணமாகவும் விரல்கள் சாதனங்களை எந்நேரமும் நாடும் சூழல் வந்துவிட்டது.
இச்சாதனங்கள் காலத்தின் கட்டாயத்தால் நம் அத்தியாவசிய தேவையாகிவிட்டாலும் நம் கண் ஆரோக்கியத்தைப் பாதிக்கவல்லவை என்பதைப் பலரும் உணர்வதில்லை.
கண்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை அறிந்திருந்தாலும் அலட்சியப்போக்கு இருக்கவே செய்கிறது. கண்களின் நலனைப் பேண, ஒரு நாளில் சில நிமிடங்களை ஒதுக்குவது முக்கியம் என்கின்றனர் நிபுணர்கள்.
கண் சோர்வு, கண் வலி, தலைவலி, கருவளையங்கள் போன்ற பிரச்சினைகள் நம்மில் பலருக்குப் புதிதில்லை.
ஆனால் வேலையைத் தொடங்குவதற்கு முன் உங்களின் கணினி அல்லது மடிக்கணினி, உங்களின் கண்களிலிருந்து 1.5 அடி தொலைவில் வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்திடுங்கள்.
கணினித் திரை முன்தான் உங்களின் வேலை என்றால் கண்களை அவ்வப்போது ஈரமாக்கிட, அருகில் சொட்டு மருந்து ஒன்றை வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். அத்துடன் கண்களுக்குச் சிறிது நேரம் ஓய்வு கொடுப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு மணி நேரத்திற்குப் பிறகும் ஒருமுறை உங்களின் கண்களைத் திரையிலிருந்து விலக்கிக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
நாற்காலியில் பின்னோக்கிச் சாய்ந்து உங்களின் கண்களைச் சிறிது நேரம் மூடியபடி வைத்திருங்கள். கண் தசைகளுக்கு அது ஓய்வு தரும் விதமாக அமையும்.
கணினித் திரையிலேயே மூழ்கி இருக்காமல் ஓரிரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது நாற்காலியை விட்டு எழுந்து சில நிமிடங்களுக்கு நடக்கவும். கண்களுக்கு ஓய்வு கிடைப்பதுடன் உடலை அசைத்தவாறும் இருந்திடும்.
கணினியில் வேலை பார்த்துக்கொண்டே உணவருந்துவதையும் தவிர்த்திடுங்கள். உணவருந்தும்போதுகூட கண்களுக்கு ஓய்வு தர முயற்சி செய்யலாம்.
கண்களுக்கான பயிற்சிகளை மேற்கொள்வதும் கண்களின் நலனைக் காக்கும். கணினி முன்பு அமர்ந்தபடி கண்களை விலக்காமல் தொலைவில் உள்ள ஒரு பொருளையும் அருகில் உள்ள ஒரு பொருளையும் மாறி மாறிச் சில நிமிடங்கள் பார்ப்பதும் சிறந்த கண் பயிற்சிகளுள் ஒன்றாகும்.
கணினி முன்பு அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் கணினி திரையின் வெளிச்ச அளவை குறைப்பது, கண்களைப் பாதுகாக்க உதவும். இரவில் கைப்பேசியைப் பயன்படுத்துபவர்கள், 'நைட் மோட்' (Night Mode) தெரிவைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இது கண்களைப் பாதுகாக்கும்.
அடுத்த முறை 20-20-20 விதிமுறையைப் பின்பற்றிப் பாருங்கள். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்குப் பிறகு 20 வினாடிகளுக்குத் திரையிலிருந்து உங்களின் பார்வையை விலக்கிக்கொள்ளுங்கள். குறைந்தது 20 அடி தொலைவில் உள்ள ஒன்றைப் பாருங்கள்.
செய்தி: இணையம், படம்: பிக்சபே

