பெரியவர்களுக்கு மட்டுமே பதற்றம் ஏற்படும் என்று நாம் கூறிவிட முடியாது. குழந்தைகளும் தற்போதைய காலகட்டத்தில் மனப்பதற்றத்துக்கு அதிகம் ஆளாகின்றனர்.
ஏழை நாட்டில் வளரும் பிள்ளைகளும் வல்லரசு நாட்டில் வளரும் பிள்ளைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. பெற்றோர், ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள், நாட்டுச் சூழல், மின்னிலக்கமயம் எனப் பல காரணிகளை நாம் சொல்லலாம்.
இருப்பினும், இளம் பிள்ளைகளிடம் காணப்படும் மனப்பதற்றத்தை உடனே களைவது மிக முக்கியம். நாளடைவில் மனநோய்களுக்கு இந்தப் பிரச்சினை இட்டுச் செல்லக்கூடும்.
மனப்பதற்றத்தை குழந்தைகள் வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்தலாம். சில இளம் பிள்ளைகள் தனிமையை அதிகம் விரும்பலாம். அல்லது உடலில் ஏதோ ஒரு வலியைச் சுட்டிக்காட்டி பள்ளி செல்வதையும் படிப்பதையும் தவிர்க்கப் பார்க்கலாம்.
தேர்வு நேரத்தில் வயிறு வலிக்கிறது அல்லது வாந்தி எடுக்க வேண்டும் என்று சொல்லக்கூடும்.
பெரியவர்கள் சாதாரணமாகக் கூறும் அறிவுரைக்குக்கூட இளம் பிள்ளைகள் அசாதாரண வகையில் கோபப்படலாம். எரிச்சல், அழுகை போன்ற உணர்ச்சிகள் அதிகமாகவே வெளிப்படக் காணலாம்.பெற்றோரால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அடம்பிடிப்பதும் இருக்கலாம். இவை மனப்பதற்றத்துக்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
இளம் பிள்ளைகளிடம் மனப்பதற்றம் உள்ளதை உறுதிசெய்ய மனநல நிபுணர்களை நாடுவதும் முக்கியம். எந்த வகையான மனப்பதற்றம் என்பதைக் கண்டறிந்த பின்னர், கல்வியின் அவசியம், சிறந்த மதிப்பெண் பெறுவதன் முக்கியத்துவம், குறிக்கோளை அடையும் உந்துதல், வழிகாட்டுதல் ஆகியவற்றில் பெற்றோர் பொறுப்பேற்று அறிவுறுத்த வேண்டும்.
மிரட்டலும் தண்டனையும் இளம் பிள்ளைகளின் மனநலத்திற்கு மேலும் கேடு விளைவிக்கும்.
முக்கியமாக, இளம் பிள்ளைகளை அவர்களின் வயதுக்கேற்றவாறு இருக்க விடுவது முக்கியம்.
செய்தி: இணையம்,
படம்: பிக்சபே

