முஹம்மது ஃபைரோஸ்
கொவிட்-19 காரணமாக கிட்டத்தட்ட ஈராண்டுகளாக உல்லாசக் கப்பல் துறை முடங்கிக் கிடந்தது. அதற்கு நிவாரணமாக 'மகிழ்உலா கப்பல் பயணங்கள்' தொடங்கப்பட்டன. அதையடுத்து உல்லாசக் கப்பல் துறை மீண்டும் அதன் வழக்கமான செயல்பாடுகளில் வேகம் காட்டி வருகிறது.
இந்நிலையில், மனைவி, மகனுடன் நான் 'கெந்திங் டிரீம்' கப்பலில் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு மலேசியாவின் கிள்ளான், பினாங்கு துறைமுகங்களுக்கு அக்டோபர் நடுப்பகுதியில் மூன்று நாள் பயணம் மேற்கொண்டேன். 'கெந்திங் டிரீம்' கப்பலின் உரிமையாளரான 'ரிசார்ட்ஸ் வோர்ல்ட் குரூசஸ்' நிறுவனம் இப்பயணத்திற்கு வாய்ப்பளித்தது.
எங்கள் முதல் உல்லாசக் கப்பல் அனுபவம், ஒரு குதூகலப் பயணமாகவே அமைந்தது. 335 மீட்டர் நீளமும் 40 மீட்டர் அகலமுடைய 'கெந்திங் டிரீம்' கப்பல், மொத்தம் 3,352 பயணிகளை ஏற்றிச்செல்லும் ஆற்றல் உடையது.
கண்களுக்கு குளுமை
ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட இக்கப்பலில் மொத்தம் 1,674 அறைகள் உள்ளன. நாங்கள் 'பால்கனி டீலக்ஸ் ஸ்டேட்ரூம்' என்ற அறையில் தங்கினோம். அறையின் 'பால்கனி'யில் அமர்ந்தவாறு கடலைப் பார்ப்பது ஒரு ரம்மியமான காட்சி.
நாவிற்கு விருந்து
கப்பலில் உள்ள 'லிடோ' உணவகத்தில் 'புஃபே' உணவு சாப்பிட்டது என் ரசனைக்கு ஏற்றதாக அமைந்தது. ஆனால், சாப்பிட அவ்வளவு உணவு இருக்க, ஓரளவு சாப்பிட்டவுடன் போதும் என்றது வயிறு.
உள்ளத்திற்கு உற்சாகம்
கப்பலில் பொழுதுபோக்கு, கேளிக்கை அம்சங்களுக்குப் பஞ்சமே இல்லை என்பதால் மூன்று நாள் பயணம், கண்ணை மூடித் திறப்பதற்குள் முடிந்துவிட்டது. ஏதோ ஹோட்டலிலும் கடைத்தொகுதியிலும் இருந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. பயணம் செய்த களைப்பே தெரியவில்லை.
நீர்ச்சறுக்கு விளையாட்டுகள், உருட்டுப்பந்து, கோல்ஃப், 'ரோப்கோர்ஸ் & ஸிப்லைன்' போன்ற சாகச விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழ்ந்தோம்.
நிலத்தில் நீர்ச்சறுக்கி விளையாடிய எனக்கு, கப்பலில் அதைச் செய்தது சற்று வித்தியாசமாக இருந்தது. மேலே இருந்து கீழேவரை வளைவு நெளிவுகளில் வேகமாகச் சறுக்கியது நெஞ்சைப் பதைபதைக்க வைத்தது.
'ஸோடியேக் தியேட்டர்' அரங்கில் உலகத்தரம் வாய்ந்த படைப்பாளர்களின் நடனங்களையும் நகைச்சுவை நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தோம். சமையல் நிகழ்ச்சிகளைப் பார்க்காத நான், சமையல் நிபுணர் மெல்டினின் நேரடி சமையல் அங்கங்களை ஆர்வத்துடன் பார்த்தேன்.
உடற்பயிற்சிக்கூடம், உடலுறுதி வகுப்புகள், யோகா வகுப்புகள் என்றிருக்க மூன்று நாள் கப்பல் பயணத்தில் என்னென்னதான் செய்வது எனச் தலைசுற்றிப் போனேன்.
அனுபவம் புதுமை
இந்நிலையில், நாங்கள் முதலில் கிள்ளான் துறைமுகத்திற்கும் அதற்கு அடுத்த நாள் பினாங்கு துறைமுகத்திற்கும் சென்றவுடன் கப்பலிலிருந்து இறங்கி நகரில் ஓரிரு இடங்களுக்குப் பேருந்தில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
கோலாலம்பூரின் பத்துமலைக்கும் 'பவிலியன் கேஎல்' கடைத்தொகுதிக்கும் சென்றுவிட்டு மாலை கப்பலுக்குத் திரும்பினோம். ஆனால், கோலாலம்பூரின் பெட்ரோனாஸ் கோபுரத்திற்குச் செல்ல வாய்ப்பளிக்கப்படாதது சற்று ஏமாற்றம் அளித்தது.
பினாங்கைப் பொறுத்தவரை, பினாங்கு மலைக்கும் 'டாப்@கொம்தார்' கட்டட உச்சியில் 'ரெயின்போ ஸ்கைவாக்'கிற்கும் சென்றுவந்தது புதுமையான அனுபவமாக இருந்தது. இதற்குமுன் நான் அங்கு சென்றதில்லை. அதுவும், மலேசியா அண்டைநாடு என்றாலும் கோலாலம்பூருக்கும் பினாங்கிற்கும் கடைசியாக நான் போய்வந்தது 10 ஆண்டுகளுக்குமேல் இருக்கும்.
மொத்தத்தில், விமானத்தில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதற்கு ஒரு சிறந்த மாற்றாக இந்த உல்லாசக் கப்பல் பயணம் அமைந்தது. அதுவும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலேசியாவில் கோலாலம்பூர், பினாங்கிற்குச் சென்றுவந்தது புத்துணர்ச்சி தந்தது. அங்கு நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பார்க்கும்போதெல்லாம் நீங்கா நினைவுகளைத் தரும் என்பதில் ஐயமில்லை. இதுபோன்ற வாய்ப்புக்கு என் ஐந்து வயது மகன் ஃபைஸான், ஆவலுடன் காத்திருக்கிறார்.
கடந்த நவம்பர் மாதம் முதல் 'கெந்திங் டிரீம்' கப்பலில் தாய்லாந்தின் புக்கெட் தீவு, இந்தோனீசியாவின் பாலித் தீவு போன்ற இடங்களுக்குச் சென்றுவர 'ரெசார்ட்ஸ் வோர்ல்ட் குரூசஸ்' ஏற்பாடு செய்து வருவதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.
'கெந்திங் டிரீம்' கப்பலில் பயணம் செய்வது குறித்த மேல்விவரங்களுக்கு https://rwcruises.com/ எனும் இணையப்பக்கத்திற்குச் செல்லலாம்.