கருணாநிதி துர்கா
கற்பனை அல்லது உண்மைக் கதைகளைப் பார்ப்போருக்கு சுவாரசியமாகவும் ஆக்கபூர்வமான வகையிலும் கருத்தைக் கொண்டு சேர்ப்பவை, குறும்படங்கள்.
அண்மைய காலமாக குறும்படத் தயாரிப்பில் ஆர்வம் காட்டும் இளையர்கள் அதிகமாகவே உதித்து வருகின்றனர்.
வளர்ந்துவரும் இந்தக் கலைத்துறையில் கால்பதிக்கும் இலக்கோடு இருக்கும் இளையர்கள், படிப்படியாக அதற்கான திறன்களை வளர்த்துக்கொள்கின்றனர்.
இக்கலைத்துறையில் சாதிப்பதற்கான முக்கிய அம்சமானது அனுபவம் என்றாலும் இளம் வயதிலேயே சாதிக்க விழைந்து அதில் சாதித்தும் இருக்கின்றனர் பல இளையர்கள். குறும்படங்கள் மீதுள்ள ஆர்வத்தில் தமிழ்மொழி மீதான ஆர்வமும் சிலருக்கு அதிகரிக்கக்கூடும்.
தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மருத்துவத் தொழில்நுட்பத் துறையில் பயின்றுவரும் சைலேஷ் நாதன், 19, 2020ல் இருந்து குறும்படங்கள் தயாரித்து வருகிறார்.
கதாசிரியராகவும் இயக்குநராகவும் இக்குறும்படங்களில் ஈடுபட்ட இவர், பல தமிழ் திரைப்படங்களைக் காண்பதன் மூலம் தமிழ்மொழியைப் பற்றியும் தமிழ் கலாசாரத்தைப் பற்றியும் நம்மால் எளிதில் கற்றுக்கொள்ள இயலும் என்றார்.
வெவ்வேறு வட்டார வழக்குகள் பற்றியும் அவற்றின் மொழி நுணுக்கங்கள் பற்றியும் தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொள்கிறார் சைலேஷ். 'லாஸ் ஏஞ்சலஸ் லிப்ட் ஆப்' திரைப்பட விழாவின் இயக்குநர்கள் கண்காட்சி போன்ற உலகளவில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் அவரது படைப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
உயர்நிலைப் பள்ளிப் பருவத்திலிருந்தே குறும்படம் தயாரிக்கத் தொடங்கிய குமரசாமி முகேஷ் குமார், 17, 'காளிவுட்' என்ற 'யூடியூப் ஒளி வழியைத் தொடங்கி, தன்னுடைய நண்பர்களை நடிகர்களாக ஈடுபடுத்திக் குறும்படங்களை இயக்கி வந்தார்.
சிங்கப்பூரில் குறும்படங்களுக்கான பயிலரங்குகளும் போட்டிகளும் இன்னும் அதிகம் நடைபெறலாம் என்றார் இவர்.
சிங்கப்பூரின் கலைத்துறையைப் பற்றி நாளுக்கு நாள் புதியனவற்றைக் கற்றுக்கொள்வதாகவும் முகேஷ் கூறினார்.
சிறு வயதிலிருந்தே தமிழ்த் திரைப்படங்ளைக் கண்டு வியந்த கோவிந் சுதன் ஆலாசியம், 21, ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தொடர்பு, ஊடகத்துறை படிப்பை மேற்கொண்டார்.
மேலும், இரண்டு மீடியாகார்ப் நிகழ்ச்சிகளுக்குத் துணைத் தயாரிப்பாளராக விளங்கினார். இத்திறன்களைக் கொண்டு தன் முதல் குறும்படத்தையும் இயக்கிக்கொண்டிருக்கிறார் சுதன்.
சிங்கப்பூர்த் தகவல் சாதன மேம்பாட்டு ஆணையம் இத்துறைக்குப் பங்களிக்க விரும்பும் இளையர்களுக்கு கூடுதல் உதவிகளை வழங்கலாம் எனக் கூறினார் இவர்.
முழுநேரமாகத் தகவல் தொழில்நுட்பப் பொறியாளராகப் பணிபுரியும் ஜானகி நாயர், 25, நடிப்பதில் ஆர்வம் கொண்டவர்.
'ஒரு நாள் கூத்து', 'மேகனா', 'பௌர்ணமி' போன்ற குறும்படங்களில் இவர் நடித்துள்ளார்.
இவரது தாய்மொழி மலையாளம் என்றாலும் தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்து தமிழ்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தனக்கு அதிகரித்ததாகக் கூறினார் ஜானகி.
"அண்மைக் காலமாக நடிகர்களுக்கான தேவையும் புது முகங்களுக்கான தேடலும் அதிகரித்துள்ளது எனலாம்," என்றார் ஜானகி.
மின்பொருள் பொறியாளரான நட்சத்திரம் பிரேம் குமார், 35, பல குறும்படங்கள், பாடல் காணொளிகள், திரைப்படங்கள் போன்றவற்றின் தயாரிப்பில் ஈடுபட்டு ஊடகத்துறையில் சிறந்து விளங்குகிறார்.
அண்மையில் தயாரிக்கப்பட்ட 'ஹேப்பி ஹோம்ஸ்' என்ற உள்ளூர் படைப்புக்கு ஏழு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் தயாரிப்பு, கேமரா வேலை, எடிட்டிங் ஆகிய பணிகள் இவர் மேற்கொண்டவை.
"வாய்ப்புகளை நாம்தான் தேடிக்கொள்ள வேண்டும், உருவாக்கிக்கொள்ள வேண்டும்," என்றார் பிரேம் குமார்.
இந்த இளையர்களுக்கு மேம்பட்ட படப்பிடிப்புக் கருவிகளும் சாதனங்களும் இல்லை என்றாலும் நமது கையடக்கத் தொலைபேசியைக் கொண்டே ஒரு குறும்படத்தைத் தயாரித்துவிடலாம் என்றார் இவர்.
அவ்வாறு கையடக்கத் தொலைபேசியைக்கொண்டு ஆவணப்படங்களும் குறும்படங்களும் தயாரித்து அங்கீகாரம் பெற்ற சலீம் ஹாடி, 42, இதுவரை 27 குறும்படங்கள் வெளியிட்டுள்ளார்.
சமூகப் பிரச்சினைகளைச் சார்ந்த பதிவுகளை வெளிப்படுத்துவதற்கான தளமாக குறும்படங்களை இவர் காண்கிறார்.
அதுமட்டுமல்லாமல் தமிழ் குறும்படங்கள் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு வழிவகுப்பதாகவும் கூறுகிறார்.
"எத்தனை சவால்கள் எதிரே வந்தாலும் அவற்றைக் கண்டு துவண்டுவிடாமல் விடாமுயற்சியுடன் இலக்கை நோக்கிப் பயணித்தால்தான் கலைத்துறையில் சாதிக்க முடியும்," என நம் உள்ளூர் இளம் கலைஞர்களுக்கு வலியுறுத்த விரும்புகிறார் சலீம் ஹாடி.
உள்ளூர் படப்பிடிப்புக் குழுவுக்கு மறுபிறவி தந்த 'பிறவி'
குறும்படம் தயாரிக்கும் ஆசை கொண்ட ஐந்து பேர், இணைந்து 2017ஆம் ஆண்டில் 'தோழன்' என்ற குறும்படத்தை வெளியிட்டனர். கெ.ஜெ சிவாயசுப்ரமணியம், பிரிதிப் ஷங்கர், பிரேம்ராஜ் சந்திரன், முகம்மது ஃபிர்தோஸ், க.ஹரிபிரசாத் ஆகிய அந்த ஐவரும் ஐந்து வருடங்களுக்குப் பிறகு 'பிறவி' என்ற படத்தைத் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.
பார்வையாளர்களிடத்தில் சேர்க்க விரும்பும் கருத்தை குறுகிய நேரத்தில் அழுத்தமாக வெளிப்படுத்தும் ஒரு குறும்படம்தான் 'பிறவி'.
விஷ்வா என்ற ஒரு முரட்டுத்தனமான இளையர், வாழ்க்கையின் தவறான பாதையில் செல்ல நேரிடுகிறது. அவர் எவ்வாறு குடும்பத்தின் உதவியோடும் நண்பர்களின் உதவியோடும் தம் குணத்தை மாற்றிக்கொள்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.
ஆரம்பத்தில் வெளியான 'தோழன்' குறும்படத்தில் நடிகராக இருந்த ஹரிபிரசாத், 23, 'பிறவி'யில் இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார்.
தற்போது பலதுறைத் தொழிற்கல்லூரியில் வடிவமைப்பு, ஊடகத் துறையில் பட்டயப் படிப்பு மேற்கொள்கிறார்.
இதன் படப்பிடிப்பு கொண்டுசெல்லப்பட்ட விதமும் இக்குறும்படத்தில் இடம்பெறும் காதல் கதையும் வழக்கத்தைவிட சற்று வேறுபட்டதாக இருந்தது என ஹரிபிரசாத் கூறினார்.
படத்தின் தயாரிப்பின்போது சில பிரச்சினைகளைச் சந்தித்தாலும் எதிர்காலத்தில் அவர்களின் படைப்புகள் முன்னேற்றம் காணும் என உறுதியாகக் கூறினார் இவர். சிங்கப்பூரில் மேலும் பல இளம் கலைஞர்கள் உருவெடுப்பர் என நம்பிக்கை கொள்கிறார் ஹரிபிரசாத்.
இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கும் சிவாயசுப்ரமணியம், 22, சிறு வயதிலிருந்து திரைப்படங்களின் மீதும் மேடை நாடகங்களின் மீதும் நாட்டம் கொண்டவர்.
2018ல் 'மீடியாகார்ப்' வசந்தத்தின் 'குருபார்வை' நாடகத் தொடரிலும் இவர் நடித்துள்ளார்.
நடிப்பு, கேமரா வேலை, இயக்கம், எடிட்டிங், பாடலாசிரியர் எனப் பலவற்றில் அனுபவம் பெற்றவர் சிவாயசுப்ரமணியம்.
கொவிட்-19 படப்பிடிப்பை பாதித்ததால் இப்படத்தின் தயாரிப்புப் பணிகள் சற்று தாமதமாகியிருந்தாலும் தடைகளைத் தாண்டி உருவாக்கப்பட்ட இப்படைப்பு, பார்வையாளர்களைப் பெரிதும் கவரும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் சிவாயசுப்ரமணியம்.
ஒலிப் பொறியாளராக நேரலை நிகழ்ச்சிகளில் பணிபுரியும் பிரிதிப் ஷங்கர், 28, இப்படத்திற்கான பாடல்களையும் பின்னணி இசையையும் அமைத்தார். தற்போது அவர் மேலும் பல புதிய படைப்புகளில் ஈடுபட்டுள்ளார்.
நமது செயல்களால் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் எப்படியெல்லாம் மாற்றம் காணும் என்பதைப் பற்றி இப்படத்திலிருந்து பார்வையாளர்கள் உணரும் வகையிலும் அவர்களது மனதை நெகிழவைக்கும் அளவிற்கும் இப்படம் இருக்கும் என பிரிதிப் கூறினார்.

