சில நேரங்களில் தொடர்ந்து கொட்டாவி வந்துகொண்டே இருக்கும். இது அனிச்சையான செயல். இதற்கான முழுமையான காரணங்கள் இன்னும் கண்டறியப் படாவிட்டாலும், முக்கிய காரணம் உடல் நிலை மிகவும் சோர்வாக இருப்பதே என்கின்றன மருத்துவ ஆய்வுகள்.
உடலுக்குத் தேவையான உயிர் வாயு (ஆக்சிஜன்) போதுமான அளவு கிடைக்காதபோது மூச்சுவிடுவது மெதுவாக இருக்கும். சுறுசுறுப்பு குறைந்து சோர்வு உண்டாகும்.
நாசித் துவாரங்கள் வழியே உட்செல்லும் உயிர் வாயு போதுமானதாக இல்லாத நிலையில், வாயாலும் உயிர் வாயுவை உள்ளிழுக்க கொட்டாவி ஏற்படுகிறது. இதனால், உயிர்வாயு உடலுக்கு கிடைப்பதுடன், ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான கரியமில வாயு (கார்பன்-டை-ஆக்சைடு) உடலில் இருந்து வெளியேறும்.
சுற்றுச்சூழலிலுள்ள வெப்ப அளவு உடலின் வெப்பத்தைவிட அதிகமாக இருந்தால் கொட்டாவி வரும் வாய்ப்பு குறைவு என்பது பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர் ஆண்ட்ரூ கேளப்பின் ஆய்வு. வெப்ப அளவு கொட்டாவி ஏற்படுவதற்கான காரணி என்றும், இது மூளையின் வெப்ப அளவை நெறிமுறைப்படுத்தும் ஒரு முறையாக இருக்கக்கூடும் என்பதும் இவரது ஆய்வின் முடிவு.
கொட்டாவி விடும்போது மேல்வாய், கீழ்வாய் இரண்டும் அகலத் திறக்கப்படுவதால் மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு அதிகரிப்பதாலும், ஆழமாக மூச்சு விடும்போது குளிரான காற்று உள்சென்று வெப்பமான காற்று வெளியேறுவதாலும் மூளை குளிர்விக்கப்படுகிறது.
கண்களைக் காக்கும் கண்ணீர்
சிலருக்கு கொட்டாவி விடும்போது கண்களில் நீர் வடியும்.
அதிகப்படியான அழுத்தம் காரணமாக கண்ணீர் சுரப்பிகள் தூண்டப்பட்டு கண்கள் மேற்பகுதியின் ஓரத்தில் நீர் வருகிறது.
கொட்டாவி விடும்போது கண்களை இறுக்கி மூடுவதால் கண்ணீர் சுரப்பிகள் அழுத்தம் ஏற்பட்டு கண்களின் ஓரத்தில் நீர் கசிகிறது.
கண்களின் இமைகளில் மிகவும் நுண்ணிய பல கண்ணீர் சுரப்பிகள் அமைந்துள்ளன. கண்களின் பாதுகாப்பிற்காகவும், கண்களின் அசைவிற்கு இதமாக இருக்கவும் இச்சுரப்பிகளிலிருந்து எப்போதும் நீர் கசிந்து கொண்டேயிருக்கும். கண்களில் தூசி முதலியவை விழுந்தால் அவற்றை உடனே அகற்ற கண்ணீர் அதிமாகக் கசிகிறது.
துக்கமோ, ஆனந்தமோ அதிகமாகும்பொழுது இது அதிகமாகப் பெருகுகிறது. இப்படி அதிகமாகப் பெருகும் கண்ணீர், கண்களின் இமைகளில் தங்கி வெளியே சிந்தியும், மூக்கின் அருகிலுள்ள துவாரங்கள் வழியே மூக்கினுள் சென்றும் வெளியாகிறது.
இயல்புக்கு மாறான கண்ணீர்
பிறந்த குழந்தைக்கும் சிலநேரம் இயல்புக்கு மாறாகக் கண்ணிலிருந்து நீர் வடியலாம். கண்ணில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக இருக்கலாம். கண்ணீர்ப்பையில் ஏற்பட்ட அடைப்பும் காரணமாக இருக்கலாம்.
மாணவர்களுக்கு கண்ணில் நீர் வடிவதற்கு பார்வைக் குறைபாடு காரணமாக இருக்கலாம். கண்ணின் இமையோரங்களில் நோய்த்தொற்று இருந்தாலும் நீர் வரலாம். சிலருக்குக் கண் இமையோர முடி, கண்ணுக்கு உட்புறமாக வளைந்து விழிக்கோளத்தை உரசுவதன் மூலமும் நீர் வரும்.
கணினி, தொலைக்காட்சி, கைப்பேசி போன்ற மின்சாதனங்களை நீண்டநேரம் பயன்படுத்தும்போது கண் விரைவாகக் களைத்து கண்களில் அழுத்தம் ஏற்படும். இதனால் கண்ணிலிருந்து நீர் வடியலாம்.
கண் அறுவை சிகிச்சைக்கு பின்னர் கண்ணிலிருந்து நீர் வடிய வாய்ப்பு உண்டு. நோய்த்தொற்றோ அல்லது அறுவைக்குப் போடப்பட்ட தையலின் எச்சங்களோ இருந்தாலும் நீர் வடியலாம்.
அதிக ஒளியைப் பார்த்தாலும் சிலருக்குக் கண்ணீர் அதிகமாக வரலாம்.
சிலருக்குப் பயம் காரணமாகக் கண்ணீர் வரும். இன்னும் சிலருக்கு எந்தக் காரணமும் இன்றி கண்ணீர் வந்துகொண்டேயிருக்கும். அவர்கள் தீவிர மனச்சோர்வு, மனச்சிதைவால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
வெள்ளெழுத்துப் பிரச்சினைக்குக் கண்ணாடி போடாமல் கண்ணைக் கஷ்டப்படுத்திப் படிக்க முற்படும்போது நீர் வரலாம்.
கொட்டாவி அல்லது நீர் வடியும் கண்கள் பொதுவாக மருத்துவப் பிரச்சனை அல்ல. எனினும், ஒருவர் கண் வலி அல்லது வறட்சி, அடிக்கடி கட்டுப்பாடற்ற கொட்டாவி, அல்லது கடுமையான சோர்வு அல்லது தூக்கமின்மை ஆகியவற்றை அனுபவித்தால் மருத்துவரை நாட வேண்டும்.

