நலமாக இருக்கும் உணர்வே சிறந்த மன நலம். அது ஒருவரின் தன்னம்பிக்கையையும் சுயமதிப்பையும் அதிகரித்துப் பிறரையும் அன்றாட வாழ்க்கையையும் சுற்றுச் சூழலையும் மகிழ்ந்து பாராட்ட உதவி செய்கிறது. ஒருவர் மனநலத்தோடு இருக்கும்போது அவரால் சிறந்த உறவுகளை வளர்க்கவும் திறன்களைப் பயன்படுத்தி முழு ஆற்றலை வெளிப்படுத்தவும் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளவும் முடியும். ஒவ்வொருவரும் தமது ஆற்றலை அறிந்து, வாழ்க்கையின் இயல்பான அழுத்தங்களைக் கையாண்டு, ஆக்கபூர்வமாகவும் பலனளிக்கும் வகையிலும் உழைத்துத் தங்களுக்கும் சமுதாயத்துக்கும் பயன்படும் வகையில் வாழும் நல்நிலையே மனநலம் ஆகும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். மனநலத்தைப் பேண உளவியலாளர்களும் சுகாதார நிபுணர்களும் வழங்கும் ஆலோசனைகள்:
1. சுறுசுறுப்பாக இருப்பது
நடை, நீச்சல், நடனம் அல்லது ஒரு புதிய விளையாட்டில் ஈடுபடலாம். ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் உடல் செயல்பாட்டில் ஈடுபடுவது ஒருவரின் மனநிலையையும் ஒட்டுமொத்த நலனையும் மேம்படுத்த உதவும் என்று மனநல மருத்துவ நிலையத்தின் மூத்த மருத்துவ உளவியலாளர் திருவாட்டி லியா டான் கூறுகிறார்.
"நீங்கள் விரும்பிச் செய்யும் ஒன்றை, தொடர்ந்து மேற்கொள்ளும் பழக்கமாக்கலாம்," என்று மனநலத்திற்கான சிங்கப்பூர் சங்கத்தின் படைப்பாற்றல் மற்றும் இளையர் சேவைகள் பிரிவின் மூத்த உதவி இயக்குனர் செல்வி ஜேன் கோ குறிப்பிடுகிறார்.
தீவிர உடற்பயிற்சி அவசியமில்லை என்ற "சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் உளவியல் பிரிவின் தலைவர் டாக்டர் எவெலின் பூன், ஓடுவது பிடிக்கவில்லை என்றால், நடக்கலாம். நடப்பது மன அழுத்தத்தைக் குறைக்கும். நடக்கும்போது கைப்பேசியை அடைத்து வைத்துவிட்டு, சுற்றுப்புறத்தில் லயிக்க வேண்டும்," என்கிறார்.
2. மின்னணு சாதனங்கள்
மின்னணு திரையைப் பார்க்கும் ஒவ்வொரு 30 முதல் 45 நிமிடங்களுக்குப் பிறகு ஓய்வெடுக்க வேண்டும். "அதிக நேரம் கணினி, கைப்பேசி திரைகளைப் பார்ப்பதால் தூக்க பிரச்சினை, உடற்பருமன் அதிகரிப்பு போன்றவை ஏற்படும்," என மனநலக் கழகத்தின் திருவாட்டி டான் பரிந்துரைக்கிறார்.
படுக்கை செல்வதற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்பு மின்சாதனங்களை அடைத்து வைப்பது உதவும் என்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
3. உறவுகளைப் பேணுவது
நமக்காக ஒருவர் இருக்கிறார் என்பதை அறிவது எப்போதும் நம்பிக்கை அளிக்கும். எனவே, அணுக்கமான உறவுகளைப் பேணுவது முக்கியம் என்று சுகாதார மேம்பாட்டுக் கழகப் பேச்சாளர் கூறுகிறார்.
மற்றவருடன் பேசுவது சில நேரங்களில் புதிய கோணத்தில் விஷயங்களைப் பார்க்க உதவலாம். அதிர்ச்சிகரமான அல்லது துக்க மான நிகழ்வுக்குப் பிறகு, பலர் தனித்து இருக்கவே விரும்புகிறார்கள். தனிமைப்படுத்துவது விஷயங்களை மோசமாக்கும் என்கிறார் உளவியலில் முனைவர் பட்டம் பெற்ற டாக்டர் காங்.
4. ஓய்வும் தூக்கமும்
சிங்கப்பூர் மக்கள் அதிக வேலை செய்கிறார்கள், பட்டினி கிடக்கிறார்கள். சுய பராமரிப்பு அல்லது ஓய்வுக்கு நேரம் கொடுப்பதில்லை என்று அண்மைய ஆய்வுகள் காட்டுகின்றன.
ஆலோசனை நிறுவனமான மெர்சர்சின் 'உலகளாவிய திறன் போக்குகள் 2022' ஆய்வின்படி, சிங்கப்பூர் ஊழியர்களில் 85 விழுக்காட்டினர் அதிக சோர்வு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறியுள்ளனர். இந்த வட்டாரத்தில் 4,000 பேர் பங்கேற்ற ' ஃபிலிப்ஸ் 2022 ஹெல்தி லிவிங் இன் ஏசியா' ஆய்வின் படி, சிங்கப்பூரில் 50 விழுக்காட்டினர் வேலை மற்றும் குடும்பப் பொறுப்புகள் காரணமாக தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த நேரம் கிடைப்பதில்லை என்று கூறியுள்ளனர்.
ஓய்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். வேலை, பராமரிப்பு போன்றவற்றுக்கிடையே ஓய்வு எடுப்பதும் தூங்குவதும் உடல், மனநலத்தைப் பராமரிக்க அவசியம்.
இது எளிதானது அல்ல. ஆனால் நீண்ட காலத்தில் வேலையைத் தக்க வைத்துக் கொள்ளவும் பொறுப்புகளைச் செவ்வனே தொடரவும் இது முக்கியம்.
5. அந்தப் பொழுதை வாழ்தல்
நிச்சயமற்ற உலகில், நிகழும் தருணத்தில் கவனம் செலுத்துவது, நம்மால் கட்டுப்படுத்த முடியாததைப் பற்றி கவலைப்படாமல் இருப்பது போன்றவை மனதுக்கு அமைதி தரும்.
சுறுசுறுப்பாக இருப்பது அல்லது அன்பானவர்களுடன் நேரத்தைச் செலவிடுவது என்று மனம் நம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதில் கவனம் செலுத்துவது ஆரோக்கியமானது.
அன்புக்குரியவருடன் அல்லது மனநல நிபுணருடன் பேசுவது, நிச்சயமற்ற நிலையைச் சமாளிக்க உதவக்கூடும். நம் வாழ்க்கையின் அர்த்தத்தை மறுவரையறை செய்வது, மனம்விட்டுப் பேசுவது, ஆதரவுக் குழுக்களுடன் இணைந்துகொள்வது, உளவியல் உதவியை நாடுவது ஆகியவற்றின் மூலம் நம்மை மறுசீரமைத்துக்கொள்வது முக்கியம்," என்று சைக் கனெக்ட் நிறுவனத்தின் முதன்மை உளவியல் நிபுணரான திரு பரந்தாமன் கூறுகிறார்.
6. உணர்வுகளை ஏற்றுக்கொள்தல்
மகிழ்ச்சி முதல் சோகம் வரை கோபம் வரை பலவிதமான உணர்ச்சிகளை நாம் அனைவரும் அனுபவிக்கிறோம். சில நாள்களில், நாம் உற்சாகமாக உணரலாம், வேறு சில நாட்களில் மன உளைச்சலை உணரலாம். எல்லா வகையான உணர்ச்சிகளும் இயல்பானது. உணர்ச்சிகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வதே மனதின் நலமாகும் என்று கூறுகிறார் மனநலக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர்.
கவலைப்படும்போது, அதற்கான அடிப்படைக் காரணத்தைப் பற்றி சிந்திக்குமாறு சுகாதார மேம்பாட்டு வாரியம் பரிந்துரைக்கிறது. உதாரணமாக, உடல் ஆரோக்கியம் மனநலத்தைப் பாதிக்கக்கூடும். பசி மற்றும் சோர்வு எதிர்மறை உணர்ச்சிகளைத் தூண்டும்.
6. நம்மை அறிந்துகொள்வது
மகிழ்ச்சி முதல் சோகம் வரை கோபம் வரை பலவிதமான உணர்ச்சிகளை நாம் அனைவரும் அனுபவிக்கிறோம். சில நாள்களில், நாம் உற்சாகமாக உணரலாம், அதே நேரத்தில் மற்ற நாள்களில், நாம் மன உளைச்சலை உணரலாம். எல்லா வகையான உணர்ச்சிகளையும் உணருவது இயல்பானது, ஏனென்றால் இந்த உணர்ச்சிகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வது மற்றும் தழுவிக்கொள்வது மனதின் நலமாகும். கவலைப்படும்போது, உங்கள் உணர்ச்சிகளைக் கவனிக்கவும், அதற்கான அடிப்படைக் காரணத்தைப் பற்றி சிந்திக்கவும் இடைநிறுத்தத்தை எடுத்துக் கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு வாரியம் பரிந்துரைக்கிறது. உதாரணமாக, உடல் ஆரோக்கியம் மனநலத்தை பாதிக்கக்கூடும். பசி மற்றும் சோர்வு எதிர்மறை உணர்ச்சிகளைத் தூண்டும்.
7. நாட்குறிப்பு
சில வாரங்களுக்கு நாட்குறிப்பு எழுதுவது மன உளைச்சலைத் தூண்டுவது எது, அதனைச் சமாளிக்க எது உதவுகிறது என்பதை அடையாளம் காண உதவும் என்று 'சைக் கனெக்ட்' டாக்டர் காங் கூறுகிறார். சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் சூழ்நிலை பற்றிய எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் தகவல்களைப் பதிவு செய்ய அவர் பரிந்துரைக்கிறார்.
8. ஆரோக்கியமாக அணுகுவது
பதற்றம் அதிகரிப்பதை உணரும் போது, ஆரோக்கியமான தேர்வுகளைச் செய்யுங்கள். உடற்பயிற்சி, யோகா போன்றவை சிறந்த தேர்வாக இருக்கலாம். எந்த வகையான உடல் செயல்பாடும் நன்மை பயக்கும் என்கிறார் டாக்டர் காங்.
9. மனம் விட்டுச் சிரிப்பது
நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள், வாழ்க்கையின் இலகுவான பக்கத்தைப் பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். நம்மைப் பற்றியும் நாமே சிரிக்கப் பழகுவது முக்கியம் என்று சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் டாக்டர் பூன் கூறுகிறார்.
10. விளையாடுவது
பெரியவர்களுக்கும் விளையாட்டு முக்கியம். விளையாட்டுகள் படைப்பாற்றலை அதிகரிக்கவும், மன உளைச்சலைத் திறம்பட சமாளிக்கவும் உதவும். விளையாட்டு என்பது நண்பர்களுடன் வேடிக்கையாகப் பொழுதைக் கழிப்பது, வெளியில் சைக்கிள் ஓட்டுவது போன்றவற்றைக் குறிக்கலாம். மிக முக்கியமாக, நமக்குள் இருக்கும் குழந்தையைத் தட்டி எழுப்பி அதனுடன் மீண்டும் இணைவதற்கு நம்மை நாம் அனுமதிக்க வேண்டும் என்கிறார் திருவாட்டி கோ.
மனநலப் பாதுகாப்பு
மனநல மருத்துவ நிலையத்தின் மனநல உதவி எண்: 6389 2222 (24 மணி நேரம்)
சிங்கப்பூர் அபய ஆலோசனை சங்கம்: 1800 221 4444 (24 மணி நேரம்) / 1 767
சிங்கப்பூர் மனநல சங்கம்: 1800 283 7019
'சில்வர் ரிப்பன்' சிங்கப்பூர்: 6386 1928
டிங்கிள் ஃப்ரண்ட்: 1800 274 4788
சமூக சுகாதார மதிப்பீட்டுக் குழு 6493 6500 / 1
ஆலோசனை சேவை
டச்லைன் (ஆலோசனை): 1800 377 2252
டச்லைன் (மூத்தோர்,
பராமரிப்பாளர்களுக்கு): 6804 6555
கேர் கார்னர் ஆலோசனை நிலையம்: 1800 353 5800
இணைய வளங்கள்
mindlinesg
stayparetsg/mymentalhealth
ec2sg
wwwtinklefriendsg
wwwchatmentalhealthsg
பராமரிப்பாளர்களுக்கான ஆதரவு
உதவி தேவைப்படும் பராமரிப்பாளர்கள் ஏஐசி அவசரத் தொலைபேசி எண் 1800 650 6060- இல் அழைக்கலாம். பொது மற்றும் சமூக மருத்துவமனைகளில் அமைந்துள்ள ஏஐசி சேவைகளை நாடலாம். கூடுதல் தகவலுக்கு wwwaicsg, strsg/wyhi.
ஆதரவுக் குழுவில் சேர விரும்புவோருக்கு, str.sg/wyhw-இல் விவரங்களைப் பெறலாம்
மற்ற வளங்கள்
சுகாதார மேம்பாட்டு வாரியத்தில் மைண்ட்எஸ்ஜி (mindsgov.sg) பயனாளர்கள் தங்கள் மனநலத்தை அறிந்துகொள்ள உதவுகிறது.