பொன்மணி உதயகுமார்
சமூக சேவைத்துறையில் உடல்திறன் சிகிச்சையாளர்களாக தங்கள் பயணத்தைத் தொடங்கி இப்போது பெரிய சமூக சேவை அமைப்புகளில் தலைமைப் பொறுப்புகளை வகிக்கும் திரு ஜே.ஆர். கார்த்திகேயன், திரு அஞ்சன் கோஷ் ஆகியோரை தமிழ் முரசு சந்தித்து, சமூக சேவைத்துறை மீது அவர்களுக்கு ஏற்பட்ட ஈர்ப்பு, ஈடுபாடு மற்றும் அத்துறையில் அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் போன்றவற்றைக் கேட்டறிந்தது.
'சேவைத் துறையில் புதுத் திட்டங்களும் சவால்களும்'
பெருமூளை வாதத்தால் நடக்க முடியாமல் தவித்த குழந்தை சிகிச்சைக்குப் பின்பு நடக்கத் தொடங்கியது. அப்போது கிடைத்த மனநிறைவு அந்தத் துறையிலேயே ஆழமாக வேரூன்றி நிலைப்பதற்கு திரு ஜே.ஆர். கார்த்திகேயனுக்கு உந்துதல் அளித்திருக்கிறது. சிறுகுழந்தைகளுடன் அணுக்கமாகப் பணிபுரிந்து அவர்களுக்கு உதவுவதை கிடைத்தற்கரிய வரமாகவே இவர் கருதுகிறார்.
பட்டப்படிப்பு மேற்கொண்ட காலத்திலிருந்து சமூக சேவைத் துறையில் ஈடுபட்டு வரும் 43 வயது திரு கார்த்திக், தமது வாழ்க்கைத் தொழிலை இந்த துறையிலேயே அமைத்துக்கொண்டார்.
ஆசிய பெண்கள்
நலன் அமைப்பு
இருபது ஆண்டுகளுக்கு முன்பு சமூக சேவைத் துறையில் உடல்திறன் சிகிச்சையாளராக தன் பயணத்தைத் தொடங்கி இன்று ஆசிய பெண்கள் நலன் அமைப்பின் (AWWA) தலைமை நிர்வாக அதிகாரியாக இயங்கி வருகிறார்.
ஆசிய பெண்கள் நலன் அமைப்பில் 15 ஆண்டுகளாக பணிபுரிந்துள்ள இவர் 5 வெவ்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
ஒரே நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்ததன் மூலம் ஆழ்ந்த அறிவாற்றலுடன் வலுவான வளர்ச்சியை அடைய முடிந்ததாக இவர் நம்புகிறார்.
9,000 பேர் பயன்
தனது இந்தப் பயணத்தில் சிகிச்சை மையம் ஒன்றை உருவாக்கி 9,000 பேர் பயனடையும் அளவிற்கு ஒரு புதிய அமைப்பை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார் திரு கார்த்திக்.
சிங்கப்பூரின் முதல் கூடுதல் தேவையுள்ள பிள்ளைகளுக்கான பாலர் பள்ளி, கடந்த ஆண்டு திறக்கப்பட்ட உடற்குறையுள்ள பெரியவர்களுக்கான இல்லம் போன்ற திட்டங்கள் மேற்கொண்டு சமூக சேவை புரிய இவரை தூண்டுவதாக திரு கார்த்திக் பகிர்ந்துகொண்டார்.
இருப்பினும் சமூக சேவைத் துறை எதிர்நோக்கும் சவால்கள் என்றைக்குமே இருக்கக்கூடியதுதான் என்றார் அவர்.
உதாரணத்திற்கு சமூக சேவைத் துறையில் தற்போது நிறைய அமைப்புகள் இருப்பதால் நிதி ஆதரவு அளிக்கும் அமைப்புகள் ஒவ்வோர் ஆண்டும் புதுப் புதுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன.
அதேவேளையில் ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் திட்டங்களைக் கைவிட முடியாமல் தவிப்பதும் நாங்கள் எதிர்கொள்ளும் தொடர் சவால்களில் ஒன்றாகும். இருப்பினும், அரசாங்கம் அளித்துவரும் உதவி இதுபோன்ற தருணங்களில் கைகொடுத்திருக்கிறது என்று திரு கார்த்திக் சொன்னார்.
'மக்களுக்கு சேவைத்துறை
பற்றிய விழிப்புணர்வு வேண்டும்'
தேசிய சமூக சேவை மன்றத்தின் இயக்குனர்களில் ஒருவரான 56 வயது திரு அஞ்சன் கோஷ், 30 வருடங்களாக சமூக சேவை துறையில் பணிபுரிகிறார். இவரும் உடல்திறன் சிகிச்சையாளராக தன் பயணத்தை தொடங்கியவர்.
இன்று நிர்வாகப் பொறுப்பில் இருந்தாலும் சிகிச்சை பெறுபவர்களின் நலன் மற்றும் சிகிச்சை முறைகளின் மேம்பாடு ஆகியவை எப்போதும் தன் கவனத்தில் இருக்கும் என்றார் திரு கோஷ்.
சமூக சேவைத்துறை ஒவ்வோர் ஆண்டும் நான்கிலிருந்து ஐந்து விழுக்காடு வரை வளர்ச்சி காண்கிறது என்று கூறிய இவர் இருப்பினும் மக்கள், சேவைத் துறையைப் பற்றி கொண்டுள்ள அறிதல் வளரவில்லை என்றார்.
மக்களுக்குத் தொடர்ந்து சமூக சேவைத் துறை பற்றி எடுத்துரைப்பது அவசியமாக இருக்கிறது என்றும் திரு கோஷ் கூறினார். உதாரணத்திற்கு பலர் சமூக சேவை துறையில் இருப்போர் சம்பளம் பெறுவதில்லை என்று தவறாக எண்ணுகின்றனர். இந்த எண்ணத்திற்கு மாறாக, சமூக சேவைத் துறையின் நிபுணர்கள் இன்றைய இளையர்கள் விரும்புவது போல நல்ல வருமானத்துடன் வேலை வாழ்க்கை சமநிலை, கற்றல் பயிற்சிகள், நல்ல நிர்வாக முறை போன்ற பல அம்சங்களையும் அனுபவிக்கின்றனர் என்றார் திரு கோஷ்.
சமூக சேவைத் துறையைப் பொறுத்தவரை திரு கோஷ் காண விரும்பும் மாற்றம் என்னவெனில், பல அமைப்புகள் ஒன்றிணைந்து சேவை வழங்குவதாகும். புது வாய்ப்புகளை அளிக்கும் திட்டங்களை சொந்த அமைப்பில் தொடங்க எண்ணுவதோடு மனிதவளம், நிதிவளம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மற்ற அமைப்புகளின் திட்டங்களை மேம்படுத்த அமைப்புகள் ஒன்றுக்கொன்று உதவிக்கரம் நீட்டி ஒத்துழைக்கலாம் என்றார்.
இதற்கேற்ப தேசிய சமூக சேவை மன்றம் மூலம் தலைமை நிர்வாக அதிகாரிகளின் கட்டமைப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றுக்கொன்று புதிய வாய்ப்புகளைக் கண்டறிய இந்தக் கட்டமைப்பு வழிவகுப்பதோடு, கற்றலுக்கு நல்ல கருவியாக அமைகிறது என்றும் திரு கார்த்திக் குறிப்பிட்டார்.
உடல் திறன் சிகிச்சையாளர்களாக தங்களது பயணத்தை தொடங்கிய இவர்கள் இருவருமே சமூக சேவைத் துறையில் வளர்ச்சி கண்டாலும் தங்களது தொழில்மீது கொண்ட நாட்டத்தால் தங்கள் நிபுணத்துவம் மூலம் தொடர்ந்து இத்துறைக்கு பெரும்பங்கு ஆற்றி வருகிறார்கள். இவர்களைப் போலவே சமூக சேவை துறை வளர்ச்சி காண வழி வகுத்து வரும் தேசிய சமூக சேவை மன்றம் 1992ஆம் ஆண்டு தொடங்கி தற்போது தனது 30 ஆண்டு நிறைவைக் கொண்டாடி வருகிறது. இந்த நிறைவின் ஓர் அங்கமாக மக்களுடன் சமூக சேவை குறித்து பகிரவும் மன்றம் முனைந்துள்ளது.
சமூக சேவை குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க, மனநல சிக்கல்களை எதிர்நோக்குபவர்கள், பராமரிப்பாளர்கள், சமூக சேவை நிபுணர்கள், தலைவர்கள், தொண்டூழியர்கள், மன்றத்தின் ஊழியர்கள் என்று அனைவரும் ஒன்றிணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

