மனநிறைவு அளிக்கும் சமூக சேவைத்துறை

மனநிறைவு அளிக்கும் சமூக சேவைத்துறை

4 mins read
f3973b5f-e760-4b51-b41d-6c932078ecf5
-
multi-img1 of 2

பொன்மணி உதயகுமார்

சமூக சேவைத்துறையில் உடல்­தி­றன் சிகிச்­சை­யா­ள­ர்களாக தங்கள் பய­ணத்தைத் தொடங்கி­ இப்போது பெரிய சமூக சேவை அமைப்புகளில் தலைமைப் பொறுப்புகளை வகிக்கும் திரு ஜே.ஆர். கார்த்திகேயன், திரு அஞ்சன் கோஷ் ஆகியோரை தமிழ் முரசு சந்தித்து, சமூக சேவைத்துறை மீது அவர்களுக்கு ஏற்பட்ட ஈர்ப்பு, ஈடுபாடு மற்றும் அத்துறையில் அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் போன்றவற்றைக் கேட்டறிந்தது.

'சேவைத் துறையில் புதுத் திட்டங்களும் சவால்களும்'

பெரு­மூளை வாதத்­தால் நடக்க முடி­யா­மல் தவித்த குழந்தை சிகிச்சைக்குப் பின்பு நடக்கத் தொடங்­கியது. அப்போது கிடைத்த மன­நி­றைவு அந்தத் துறை­யி­லேயே ஆழ­மாக வேரூன்றி நிலைப்­ப­தற்கு திரு ஜே.ஆர். கார்த்­தி­கே­ய­னுக்கு உந்­து­தல் அளித்­தி­ருக்­கிறது. சிறு­கு­ழந்­தை­களு­டன் அணுக்­க­மாகப் பணி­புரிந்து அவர்­க­ளுக்கு உத­வுவதை கிடைத்தற்கரிய வர­மா­கவே இவர் கரு­து­கி­றார்.

பட்டப்படிப்பு மேற்­கொண்ட காலத்­தி­லி­ருந்து சமூக சேவைத் துறை­யில் ஈடு­பட்டு வரும் 43 வயது திரு கார்த்­திக், தமது வாழ்க்கைத் தொழிலை இந்த துறை­யி­லேயே அமைத்­துக்­கொண்­டார்.

ஆசிய பெண்­கள்

நலன் அமைப்­பு

இருபது ஆண்­டு­க­ளுக்கு முன்பு சமூக சேவைத் துறை­யில் உடல்­தி­றன் சிகிச்­சை­யா­ள­ராக தன் பய­ணத்தைத் தொடங்கி இன்று ஆசிய பெண்­கள் நலன் அமைப்­பின் (AWWA) தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யாக இயங்கி வரு­கி­றார்.

ஆசிய பெண்­கள் நலன் அமைப்­பில் 15 ஆண்­டு­க­ளாக பணி­பு­ரிந்­துள்ள இவர் 5 வெவ்­வேறு பொறுப்­பு­களை வகித்­துள்­ளார்.

ஒரே நிறு­வ­னத்­தில் பல ஆண்டுகள் பணி­புரிந்­த­தன் மூலம் ஆழ்ந்த அறி­வாற்­ற­லு­டன் வலு­வான வளர்ச்­சியை அடைய முடிந்­த­தாக இவர் நம்­பு­கி­றார்.

9,000 பேர் பயன்

தனது இந்தப் பய­ணத்­தில் சிகிச்சை மையம் ஒன்றை உரு­வாக்கி 9,000 பேர் பயன­டை­யும் அள­விற்கு ஒரு புதிய அமைப்பை உரு­வாக்­கி­ய­தில் முக்­கிய பங்கு வகித்­தி­ருக்­கி­றார் திரு கார்த்திக்.

சிங்­கப்­பூ­ரின் முதல் கூடு­தல் தேவை­யுள்ள பிள்­ளை­க­ளுக்­கான பாலர் பள்ளி, கடந்த ஆண்டு திறக்­கப்­பட்ட உடற்­குறை­யுள்ள பெரி­ய­வர்­க­ளுக்­கான இல்­லம் போன்ற திட்­டங்­கள் மேற்­கொண்டு சமூக சேவை புரிய இவரை தூண்­டு­வ­தாக திரு கார்த்­திக் பகிர்ந்துகொண்­டார்.

இருப்­பி­னும் சமூக சேவைத் துறை எதிர்­நோக்­கும் சவால்­கள் என்­றைக்குமே இருக்­கக்­கூ­டி­யதுதான் என்­றார் அவர்.

உதா­ர­ணத்­திற்கு சமூக சேவைத் துறை­யில் தற்­போது நிறைய அமைப்­பு­கள் இருப்­ப­தால் நிதி ஆத­ரவு அளிக்­கும் அமைப்­பு­கள் ஒவ்­வோர் ஆண்­டும் புதுப் புதுத் திட்­டங்­கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன.

அதேவேளையில் ஏற்­கெனவே செயல்­பாட்­டில் இருக்­கும் திட்­டங்­களைக் கைவிட முடி­யா­மல் தவிப்பதும் நாங்கள் எதிர்­கொள்­ளும் தொடர் சவால்­களில் ஒன்­றா­கும். இருப்பினும், அரசாங்கம் அளித்துவரும் உதவி இதுபோன்ற தரு­ணங்­களில் கைகொடுத்­தி­ருக்­கிறது என்­று திரு கார்த்திக் சொன்னார்.

'மக்களுக்கு சேவைத்துறை

பற்றிய விழிப்புணர்வு வேண்டும்'

தேசிய சமூக சேவை மன்­றத்­தின் இயக்­கு­னர்­களில் ஒரு­வ­ரான 56 வயது திரு அஞ்­சன் கோஷ், 30 வரு­டங்­க­ளாக சமூக சேவை துறை­யில் பணி­பு­ரி­கி­றார். இவ­ரும் உடல்­தி­றன் சிகிச்­சை­யா­ள­ராக தன் பய­ணத்தை தொடங்­கி­ய­வர்.

இன்று நிர்­வா­கப் பொறுப்­பில் இருந்­தா­லும் சிகிச்சை பெறு­ப­வர்­க­ளின் நலன் மற்­றும் சிகிச்சை முறை­க­ளின் மேம்­பாடு ஆகி­யவை எப்­போ­தும் தன் கவ­னத்­தில் இருக்­கும் என்­றார் திரு கோஷ்.

சமூக சேவைத்­துறை ஒவ்­வோர் ஆண்­டும் நான்­கி­லி­ருந்து ஐந்து விழுக்­காடு வரை வளர்ச்சி காண்­கிறது என்று கூறிய இவர் இருப்­பி­னும் மக்­கள், சேவைத் துறையைப் பற்றி கொண்­டுள்ள அறி­தல் வள­ர­வில்லை என்­றார்.

மக்­க­ளுக்­குத் தொடர்ந்து சமூக சேவைத் துறை பற்றி எடுத்­து­ரைப்­பது அவ­சி­ய­மாக இருக்­கிறது என்­றும் திரு கோஷ் கூறி­னார். உதா­ர­ணத்­திற்கு பலர் சமூக சேவை துறை­யில் இருப்­போர் சம்­ப­ளம் பெறு­வ­தில்லை என்று தவ­றாக எண்­ணு­கின்­ற­னர். இந்த எண்­ணத்­திற்கு மாறாக, சமூக சேவைத் துறை­யின் நிபு­ணர்­கள் இன்­றைய இளை­யர்­கள் விரும்­பு­வது போல நல்ல வரு­மா­னத்­து­டன் வேலை வாழ்க்கை சம­நிலை, கற்­றல் பயிற்­சி­கள், நல்ல நிர்­வாக முறை போன்ற பல அம்­சங்­க­ளை­யும் அனு­ப­விக்­கின்­ற­னர் என்­றார் திரு கோஷ்.

சமூக சேவைத் துறை­யைப் பொறுத்­த­வரை திரு கோஷ் காண விரும்­பும் மாற்­றம் என்­ன­வெ­னில், பல அமைப்­பு­கள் ஒன்­றி­ணைந்து சேவை வழங்­கு­வ­தா­கும். புது வாய்ப்­பு­களை அளிக்­கும் திட்­டங்­களை சொந்த அமைப்­பில் தொடங்க எண்­ணு­வ­தோடு மனி­த­வ­ளம், நிதி­வ­ளம் ஆகியவற்­றைக் கருத்­தில் கொண்டு மற்ற அமைப்­பு­க­ளின் திட்­டங்­களை மேம்­ப­டுத்த அமைப்­பு­கள் ஒன்­றுக்­கொன்று உத­விக்­க­ரம் நீட்டி ஒத்­து­ழைக்­க­லாம் என்­றார்.

இதற்­கேற்ப தேசிய சமூக சேவை மன்­றம் மூலம் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­க­ளின் கட்­ட­மைப்பு ஏற்­பட்­டுள்ளது. ஒன்­றுக்­கொன்று புதிய வாய்ப்­பு­க­ளைக் கண்­ட­றிய இந்தக் கட்டமைப்பு வழி­வ­குப்பதோடு, கற்­ற­லுக்கு நல்ல கரு­வி­யாக அமை­கிறது என்­றும் திரு கார்த்திக் குறிப்­பிட்­டார்.

உடல் திறன் சிகிச்­சை­யா­ளர்­க­ளாக தங்­க­ளது பய­ணத்தை தொடங்­கிய இவர்­கள் இரு­வ­ருமே சமூக சேவைத் துறை­யில் வளர்ச்சி கண்­டா­லும் தங்­க­ளது தொழில்மீது கொண்ட நாட்­டத்­தால் தங்­கள் நிபு­ணத்­து­வம் மூலம் தொடர்ந்து இத்­து­றைக்கு பெரும்­பங்கு ஆற்றி வரு­கி­றார்­கள். இவர்­க­ளைப் போலவே சமூக சேவை துறை வளர்ச்சி காண வழி வகுத்து வரும் தேசி­ய சமூக சேவை மன்­றம் 1992ஆம் ஆண்டு தொடங்கி தற்­போது தனது 30 ஆண்டு நிறைவைக் கொண்­டாடி வரு­கிறது. இந்த நிறை­வின் ஓர் அங்­க­மாக மக்­க­ளு­டன் சமூக சேவை குறித்து பகி­ர­வும் மன்றம் முனைந்­துள்­ளது.

சமூக சேவை குறித்த விழிப்­பு­ணர்வை அதி­க­ரிக்க, மன­நல சிக்­கல்­களை எதிர்­நோக்­கு­ப­வர்­கள், பரா­ம­ரிப்­பா­ளர்­கள், சமூக சேவை நிபு­ணர்­கள், தலை­வர்­கள், தொண்­டூ­ழி­யர்­கள், மன்­றத்­தின் ஊழி­யர்­கள் என்று அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து இந்த முயற்­சி­யில் ஈடு­பட்­டுள்­ள­னர்.