அனுஷா செல்வமணி
சிங்கப்பூரின் பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இளையர்கள் தங்களின் உடல் நலனையும் மன நலனையும் பேணிக்காப்பதில் தொடர்ந்து சவால்களைச் சந்தித்து வருகின்றனர்.
சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் ஓராண்டுக்கு முன்பு வெளியிட்ட செய்தியின்படி, சிங்கப்பூரர்கள் பலர் ஏழு மணி நேரத்திற்கும் குறைவாகவே உறங்குகிறார்கள் என்று கண்டறியப்பட்டது.
அதையடுத்து தமிழ் முரசு நாளிதழ் அதன் இன்ஸ்டகிராம் தளத்தில் நேற்று முன்தினம் நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்றின்படி, இருபதிலிருந்து முப்பது வயதுக்கு உட்பட்ட இளையர்களில் 63 விழுக்காட்டினர், தினசரி ஏழு மணி நேரத்திற்குக் குறைவாகத்தான் உறங்குகிறார்கள் என்று கண்டறியப்பட்டது.
வேலை, படிப்பு, தூங்குவதில் பிரச்சினை, உடல் மற்றும் மனநலப் பிரச்சினைகள் எனப் பல காரணங்களை அவர்கள் சுட்டிய நிலையில் வேலையும் படிப்பும் தங்களின் தூக்கத்தை வெகுவாகப் பாதிக்கிறது என்று அவர்களில் 60 விழுக்காட்டினர் பகிர்ந்திருந்தனர்.
கணக்காய்வாளராகப் பணிபுரியும் 25 வயது கேசவ் குமார், தாம் வேலை முடிந்து உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்ல வேண்டியுள்ளதால் தூங்கும் நேரம் குறைவு என்றார்.
அதோடு, சில சமயங்களில் வேலை முடிந்த பிறகு குடும்பத்தினர் அல்லது நண்பர்களோடு வெளியே செல்வது போன்ற காரணங்களால் அவர் ஏழு மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குவதாகக் குறிப்பிட்டார்.
வேலை தாமதமாக முடிவதால் தமக்கு விருப்பமான தொலைக்காட்சித் தொடர்களை ஓய்வு நேரத்தில் பார்க்க வேண்டியுள்ளது என்றார் தகவல் தொழில்நுட்ப ஆலோசகரான பூஜா ஜெயபாலன், 24. சில சமயங்களில் தூக்கம் வந்தாலும் அந்தத் தொடரைப் பார்த்துவிட்டு உறங்கச் செல்வதால், தூங்கும் நேரம் குறைந்துவிடுகிறது.
இரண்டு குழந்தைகளுக்குத் தாயான 29 வயது நூர் சஃபிரா, தினமும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் மட்டும் தூங்குவதாக கூறினார்.
ஐந்து மாதக் குழந்தை நடு இரவில் இரண்டு முறை எழுவதாலும், இரண்டு வயது பிள்ளை சில நேரங்களில் இரவுவேளையில் திடீரெனக் கண்விழிப்பதாலும் அவருடைய தூக்கம் கெடுகிறது. மருத்துவ ஆய்வுக்கூட நிபுணராகப் பணிபுரியும் இவருக்கு, தூக்கமின்மையால் வேலையில் கவனம் சிதறுகிறது என்றும் குறிப்பிட்டார்.
பதற்றமான மனநிலையால் ஒவ்வோர் இரவும் தூங்குவதற்குச் சிரமமாக உள்ளது என்றார், பொறியியல் துறையில் பணிபுரியும் அகிலேஷ், 28. மருத்துவரை நாடும் அளவுக்கு அவருடைய நோய் கடுமையாக இல்லாததால் தற்போது இந்தப் பிரச்சினையைத் தாமே சமாளித்துக்கொண்டு, தம்மால் முயன்ற அளவுக்குத் தூங்க முயல்கிறார்.
மேல்படிப்பைத் தொடங்குவதற்கு முன் வேலைக்குச் சென்றுகொண்டிருந்த 24 வயது தேவிஸ்ரீ லெட்சுமணன், அந்த காலகட்டத்தில் நன்றாக உறங்கியதாகவும் தற்போது படிப்பின் காரணமாகத் தூக்கத்தை இழந்துவிட்டதாகவும் கூறுகிறார்.
குடும்பம், நண்பர்கள் ஆகியோருக்கு மட்டுமல்லாமல் தனக்கும் நேரத்தை ஒதுக்கிச் செலவிட விரும்பும் இவர், தேர்வுகளாலும் பள்ளிப் பாடங்களாலும் தூங்கும் நேரம் குறைவு என்றார்.
மின்னிலக்கச் சாதனங்களைத் தொடர்ந்து பயன்படுத்துதல், கணினி விளையாட்டுகளுக்கு அடிமையாக இருத்தல், தாமதமாக இரவில் தூங்க நண்பர்கள் தரும் நெருக்குதல் ஆகிய காரணங்களுடன் மறுநாள் பள்ளிக்கும் வேலைக்கும் காலையிலேயே எழுந்திருக்க வேண்டிய சூழலால் இளையர்கள் தங்களுக்குத் தேவைப்படும் தூக்கத்தைப் போதுமான அளவு பெறுவதில்லை. இதில் பெற்றோரின் பங்கும் உண்டு. உறக்கத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் முதலில் உணர்ந்திருக்க வேண்டும். இளையர்கள் தாங்களே முடிவெடுக்கலாம் என்று எண்ணிவிடாமல் அவர்களுக்கு வழிகாட்டும் வகையில் பெற்றோர் உதவலாம்.
தூக்கம் போதாத ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இளையர்கள் தங்களின் சுகாதாரம், சிந்தனைத் திறன், நலன் ஆகியவற்றை அபாய நிலைக்கு உட்படுத்துகிறார்கள் என்று மனநலக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் மூத்த ஆலோசகருமான டாக்டர் டேனியல் ஃபுங் கூறுகிறார்.
போதுமான தூக்கம் பெற...
கால அட்டவணையுடன் தினமும் என்ன செய்ய வேண்டும் என்று நன்கு திட்டமிட்டுக்கொண்டால் நேர விரயத்தைத் தவிர்த்து போதுமான நேரம் தூங்க முடியும்.
தினமும் பலதரப்பட்ட நடவடிக்கைகளில் சுறுசுறுப்புடன் செயல்பட்டால் அவற்றின் மூலம் ஏற்படும் அலுப்பால் எளிதில் தூங்க இயலும்.
மனநலம் தொடர்பான பிரச்சினை உள்ளது என்ற சந்தேகம் எழுந்தால், நிபுணர்களிடம் ஆலோசனை நாடுவது சிறந்தது.
தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே அனைத்து வகையான மின்னிலக்கச் சாதனங்களின் பயன்பாட்டை ஒருவர் நிறுத்திக்கொள்வதும் நல்லது.