பெண்களைப் போலவே ஆண்களும் தங்களின் தோற்றத்தைப் பராமரித்துக்கொள்வது இன்றைய நவீனயுகத்தில் சாதாரணமாகிவிட்டது. எப்பொழுதும் முகம் பொலிவாகவும் கவர்ச்சியாகவும் இருக்க, ஓர் ஆண் தனது அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்யும் ஒரு சில பராமரிப்புப் பொருட்களை வைத்திருக்கலாம்.
முதலாவதாக, தரமான ஒரு மின்சார 'ஷேவர்' வைத்திருப்பது முக்கியம். கழிவறை, உடற்பயிற்சிக் கூடம், வேலையிடம் என நினைத்த நேரத்தில் அதைக் கொண்டு முகத்தை சில நிமிடங்களில் சீர்படுத்திவிடலாம்.
முகத்தை ஈரப்பதமாக்கும் திரவம், அண்மைய காலமாக ஆண்களுக்கெனச் சிறப்பாகத் தயாரிக்கப்படுகிறது. தோலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சருமத்தை அழகாக்கவும் சுற்றுப்புறத்தால் ஏற்படக்கூடிய சேதத்தைத் தவிர்க்கவும் இது உதவும். காலையிலும் இரவிலும் இந்தத் திரவத்தைப் பயன்படுத்துவதால் தோல் பிரச்சினைகள் ஏற்படுவதையும் தடுக்க முடியும்.
ஆண்கள் தங்களின் உதடுகளைப் பராமரிப்பதும் குறைவு. உதட்டை மூடியுள்ள தோல் பகுதி மிகவும் இலேசானது. அது உடனே உலர்ந்துவிடும் தன்மையுடையது. அதனால் உதட்டுத் தைலம் போன்ற பொருட்களைத் தடவினால் குளிர்காலத்திலும் வெயில்காலத்திலும் உதட்டைப் பாதுகாக்க முடியும்.
புருவம், தாடி, மீசை ஆகியவற்றில் அடங்காத ஒரு முடியைச் சிரமமின்றி பிடுங்குவதற்கு 'டுவீஸர்' எனப்படும் ஒருவகை இடுக்கி முள் இருப்பதும் முக்கியம்.
இருபுறச் சீப்புடைய ஆண்கள் தங்களின் தலைமுடியை வெவ்வேறு விதமாக சீவிக்கொள்ளலாம்.
மீசை, தாடிக்கான சீப்பு விற்கப்படுவதையும் ஆண்கள் சிலர் அறிவதில்லை. தற்போது நீண்ட தாடி வைத்திருப்பதை அதிகமான ஆண்கள் விரும்புகின்றனர். இருப்பினும், அதற்கான பராமரிப்பும் அதிகம். அதனால், அதற்கென விற்கப்படும் சீப்பை வாங்குவது சிறப்பு.
இதற்கிடையே, தாடி நன்கு வளர்வதற்கான எண்ணெய், மீசைக்கான கத்தரிக்கோல் ஆகிய பராமரிப்புப் பொருட்களையும் வாங்கி வைத்துக்கொள்ளலாம்.
செய்தி: இணையம்,
படம்: பிக்சபே

