ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு இடையே பகைமை உணர்வு இருப்பது வழக்கமான ஒன்றுதான். இதனால், அந்தப் பிள்ளைகள் ஒரு செயலை மேலும் சிறப்பாகச் செய்யக்கூட உற்சாகம் பெறலாம். இருப்பினும், அதிகப்படியான சண்டையும் போட்டியும் ஒருவரைப் புண்படுத்தும் அளவுக்குப் போகலாம். இதனால், பிள்ளைகள் தங்களைப் பற்றியும் தங்களின் குடும்ப உறவுகளைப் பற்றியும் கொண்டுள்ள எண்ணம் நிரந்தரமாகப் பாதிக்கப்படலாம்.
குடும்ப உறவுகள் தொடர்பாக 2021 ஆய்வு ஒன்றில், சகோதரரால் வதைக்கப்பட்ட ஒரு பிள்ளை, வளர்ந்தபின் குறைந்தளவு போட்டித்தன்மை, மனநிறைவு, தன்னம்பிக்கையைக் கொண்டுள்ளதாக தெரியவந்தது. அதற்குமுந்தைய ஆய்வில், உடன்பிறப்பால் துன்புறுத்தப்படும் ஒரு பிள்ளை, பெரியவர் ஆகும்போது மன அழுத்தத்துக்கும் தன்னைத் தானே காயப்படுத்திக்கொள்ளும் சாத்தியத்துக்கும் ஆளாவது இருமடங்கு எனக் கண்டறியப்பட்டது.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு இடையே நடக்கும் சண்டைகளையும் அவமதிக்கும் பேச்சுகளையும் நாம் துன்புறுத்தலாகக் கருதவில்லை என்றாலும் இளம் பிள்ளைகளுக்கு அது துன்புறுத்தலாகத்தான் தோன்றும். இந்தப் பகைமையுணர்வைக் கையாள, சில உத்திகள் உள்ளன.
முதலில், பிள்ளைகளை ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு பிள்ளைக்கும் ஓர் அடையாளம் உண்டு என்பதை உணர வேண்டும். ஒருவர் இன்னொருவரைக் காட்டிலும் சிறந்தவர் என்ற உணர்வை ஏற்படுத்தாத வண்ணம் பார்த்துக்கொள்ளலாம்.
இரண்டாவதாக, பெரியவர்கள் தங்களின் விருப்புவெறுப்புகளை அறிந்திருக்க வேண்டும். ஒரு பிள்ளை பெருமைப்படச் செய்வதாகக் கூறி, இன்னொரு பிள்ளையை விட்டுவிடக்கூடாது. தாங்கள் சமமாக நடத்தப்படுவதைப் பிள்ளைகள் உணரவேண்டும்.
புதிதாக ஒரு குழந்தையின் வருகை, சகோதரருக்கு விருது போன்ற நிகழ்வுகளால் மற்றப் பிள்ளைகள் பாதிக்கப்படலாம். அனைவரும் சேர்ந்து கொண்டாட வேண்டுமே தவிர, ஒருவரை ஒதுக்கிவிடக்கூடாது.
ஒவ்வொரு பிள்ளையின் பலத்தையும் கண்டறிந்து அதைக் கொண்டாட வேண்டும். அவர்களின் ஆர்வத்தைக் கண்டுபிடிக்க ஊக்கமளிக்க வேண்டும். ஒவ்வொரு பிள்ளையுடனும் அவர்களுக்கு விருப்பமான நடவடிக்கையில் சேர்ந்து ஈடுபட வேண்டும். குடும்பமாகவும் நேரத்தைச் செலவழிக்க வேண்டும். முக்கியமாக, குடும்பத்தில் உள்ள அனைவரும் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதற்குச் சில அடிப்படை விதிமுறைகளைத் தெளிவாக வகுத்துக்கொள்ள வேண்டும்.
செய்தி: ஹார்வர்ட் ஹெல்த்

