ஆ. விஷ்ணு வர்தினி
இணைய மோசடிகளின் தீவிரமும் பன்முகத்தன்மையும் கூடி வருகின்றன. சமூக ஊடகம், இணைய வாசல்கள், மின்னஞ்சல்கள், கையடக்க சாதனங்கள் முதலியவையும் இணைய மோசடி களுக்கு வாயில்கள் ஆகிவிட்டன. இணைய மோசடி நம்மை மிக நெருங்கிவிட்ட இந்நிலையில், அவற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்வதற்கான வழிமுறைகளை 'ஸ்கேமினார்' கருத்தரங்கு பரிந்துரைக்கிறது.
உள்துறை அமைச்சு, சிங்கப்பூர் காவல்துறை, தேசிய குற்றத் தடுப்பு மன்றம் ஆகியவை இணைந்து வழங்கும் இக்கருத் தரங்கு இம்மாதம் 18ஆம் தேதி நடைபெறும். சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு மற்றும் கண்காட்சி மையத்தில் நடைபெறும் இந் நிகழ்வில் மக்கள் இணையம் வாயிலாகவும் கலந்துகொள்ளலாம். தனித்துவமான சிங்கப்பூரின் சமூக, இணைய சூழலில், இணைய மோசடிகளுக்கு வழி வகுக்கும் உளவியல் காரணிகள், அவற்றின் தாக்கங்கள் ஆகியவை குறித்து மக்கள் தெளிவு பெறும் நோக்குடன், இரு குழு கலந்துரையாடல்கள் ஸ்கேமினாரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பொது, தனியார், சமூக நிபுணர்கள் தத்தம் கருத்துகளையும் அனுபவங்களையும் இக்கலந்துரையாடல்களில் முன்வைப்பர்.
நம்மையும் நம்மைச் சுற்றி உள்ளோரையும் இணைய மோசடிகளில் சிக்காமல் பாதுகாத்து கொள்வதற்கு வெவ்வேறு சமூக பிரிவினர் எவ்வகையான முயற்சி களை முன்னெடுக்கலாம் என்பதையும் இக்கலந்துரையாடல்கள் அலசி ஆராயும்.
அதே சமயம், பங்கேற்பாளர்கள் தங்களது சிக்கல்கள் குறித்து கேள்வி எழுப்புவதற்கும், சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்கும் வாய்ப்புகள் இருக்கும்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சரும் உள்துறை துணை அமைச்சருமான சுன் ஷுவெலிங் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள இருக்கிறார். இந்நிகழ்வுக்கு பதிவு செய்ய: https://form.jotform.com/223262211557449

