காதல் உறவுகள், திருமண வாழ்க்கை ஆகியவற்றில் தொழில்நுட்பம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று சொன்னால் அது மிகையில்லை.
ஏற்ற ஜோடியைத் தேர்ந்தெடுக்க உதவ துணை தேடும் செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன. பிறரைத் தொடர்புகொள்ளவும் அவர்களுடன் உரையாடவும் வாட்ஸ்ஆப் செயலி, சமூக ஊடகங்கள் உள்ளிட்டவை கைகொடுக்கின்றன.
சில வேளைகளில் காதலர்கள், தம்பதிகளுக்கிடையே உள்ள உறவைத் தொழில்நுட்பம் கசப்படையவும் செய்யும்.
சுருக்கமாகச் சொன்னால் துணை தேடிக்கொள்வதிலும் நாளடைவில் உறவை வலுப்படுத்திக்கொள்வதிலும் தொழில்நுட்பம் பெரும்பங்கு வகித்து வருகிறது.
தங்களின் அன்பைத் துணையிடம் வெளிப்படுத்த பலர் தொழில்நுட்பத்தை அதிகம் நாடுவதாக சாரா கோய்ன், லாரா ஸ்டொக்டேல் போன்ற சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பலர் குறுந்தகவல் அனுப்பி அன்பை அதிகம் வெளிப்படுத்துவது அவர்களின் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
உணர்வுகளை எளிதில் வெளிப்படுத்த தொழில்நுட்பம் வகைசெய்வது அதற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.
அதிலும் குறிப்பாக 17லிருந்து 25 வயதுக்கு உட்பட்ட இளையர்கள் அன்பை வெளிப்படுத்த தொழில்நுட்பத்தை அதிகம் உபயோகிக்கக்கூடும் என்பதையும் அவர்கள் கண்டறிந்தனர்.
காதலர்களைவிட திருமணமானவர்கள்தான் அன்பைக் காட்ட சமூக ஊடகங்கள், வலையொலிகள் உள்ளிட்ட அனைத்து வகை தொழில்நுட்பத் தளங்களையும் பயன்படுத்துகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது. திருமணமானவர்களுக்கே ஒரு நாளில் அதிகமான பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டிய சூழல் ஏற்படுவது அதற்குக் காரணமாக இருக்கலாம்.
- https://www.psychologytoday.com எனும் மனநல இணையத் தளத்தில் இடம்பெற்ற கட்டுரையின் சுருக்கம் இது.

